Pages

31 March 2012

கற்றது கைமண் அளவு - 31/03/2012

ஆசிரியர்கள் எங்கெல்லாம் துன்புறுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் அநீதியும், அக்கிரமும் சமூகம் முழுவதும் புரையோடிப் போயிருக்கிறது என்று அர்த்தம். தருமபுரியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது பட்டதாரி ஆசிரியரை நடுரோட்டில் டிஎஸ்பி கன்னத்தில் அறைந்து, அதைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் பிடித்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார். இது கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டிய செயல். ஆசிரியர்கள் தான் சமுதாயத்தின் தூண். அவர்களை பாதுகாப்பு என்பது சமூகத்தின் பாதுகாப்பு. விண்ணப்பங்களை இப்படி பிள்ளையார் கோவிலில் சூறை விடுவது போல விட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையத்தில் கொடுத்து தரைவிரக்கம் செய்யச் சொல்லியிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரசு இதைப் பற்றி எல்லாம் சிந்தனை செய்யுமா ? ( படங்கள் : நன்றி விகடன்)


 _________________________________________________________________________________________________________ 

இப்போது மின்கட்டணமும் உயர்த்தப் பட்டிருக்கிறது. வழங்கப் படாத மின்சாரத்திற்கு எதற்காக விலையேற்றம்? கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு தான் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கும் ஆப்பு தான். எங்கும் மலிந்துள்ள ஊழல், குற்றம், கொலை இவற்றை எல்லாம் பார்க்கும் போது எரிச்சலாகத் தான் இருக்கிறது. இதெல்லாம் மறக்கடிக்கத் தான் நமக்கு தோழிகள் மீண்டும் நாடகம் முடிந்து சேர்ந்ததும், I.P.L லும், சினிமாவும், அழுதுவடியும் சீரியலும் இருக்கிறதே, பிறகு என்ன ? _________________________________________________________________________________________________________ 


 உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று (31.03.2012) சமூக விரோதிகள் முடக்க இருப்பதாக  இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்துள்ளார். "ஆபரேஷன் பிளாக் அவுட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறார். நெட்டு ஒர்க் ஆகலைன்னா, நொட்டு நொட்டுன்னு தட்டிக்கிட்டு இருக்காதீங்க...இதெல்லாம் பாக்கிஸ்தான் தீவீரவாதிகளின் சதி என்று நாட்டுப்பற்றுடன் நினைத்துக் கொள்ளுங்கள்...புதுசு புதுசா கிளப்புறங்கய்யா....
 _________________________________________________________________________________________________________ 

1912ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி டைட்டானிக் என்கிற பிரம்மாண்ட கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கி, அதில் பயணம் செய்த 2,223 பயணிகளில் 1,517 பேர் உயிரிழந்தனர். இந்த வரலாற்று சோகத்தை மையப்படுத்தி, அதில் ஒரு அற்புதமான காதல் கதையை உருவாக்கி டைட்டானிக் என்ற பெயரில் படம் இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். 11 ஆஸ்கர் விருதுகளை குவித்தது இந்தத் திரைப்படம். இப்போது இந்தத் துயரச் சம்பவத்தின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மீண்டும் டைட்டானிக் திரைப்படம் 3D மற்றும் 2D யில் வெளியாகிறது. முன்பை விட வண்ணமயமாக, அனைத்தும் நம் கண்முன்னே நடப்பது போன்ற தத்ரூப தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அந்த லியனார்டோ - வின்ஸ்லெட்டின் நீண்ட நேர ரொமான்ஸ் காட்சி... அதுவும் 3D எஃபெக்டில்... இதை நினைத்துதான் நாயகி கேத் வின்ஸ்லெட்டும் பயப்படுகிறாராம். லண்டனில் நடந்த இந்த 3D சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த அவர், "அய்யோ அந்தக் காட்சி 3 டியிலா... எனக்கு ரொம்ப கூச்சமாகவும் பயமாகவும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த காட்சியை மட்டும் நான் பார்க்க மாட்டேன்" என்று வெட்கி இருக்கிறார்.


  _________________________________________________________________________________________________________


இந்தவார ஆவணப்படம். கணிதத்தின் வரலாறு இரண்டாம் பாகம் ________________________________________________________________________________________________________ 


ஆற்றல் அழிவது இல்லை. எப்போதும் அது மறு வடிவம் தான் எடுக்கிறது. ஒரு கியூபிக் சென்டிமீட்டரில் 10க்குப் பின்னால் 25 பூஜ்யங்களைப் போட்டால் இருக்கும் அளவு அணுக்கள் இருக்கிறது. நாம் இறந்தபின் கூட நம் உடம்பின் அணுக்கள் எங்கும் செல்வதில்லை. மாறாக அவை வேறு வடிவம் எடுக்கின்றன. எனவே நம் அணுக்கள் வேறு வேறு உடல்களில் இல்லை வேறுவேறு வடிவங்களில் இங்கு தான் எங்கோ மறுசுழற்சிக்கு உட்படுகின்றன. இப்படிப் பார்த்தால் நமது அணுக்கள் வேறு உடம்பில் இருக்கும் சாத்தியம் உள்ளதாகவே எனக்குப் படுகிறது. தண்ணீருக்குக் கூட நினைவுகளைத் தன்னகத்தே இருத்திக்கொள்ளும் தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நம் அணுக்களுக்கே இப்படி என்றால் நமது ஆன்மாவும் மறு சுழற்சி செய்யப் படுமோ...!!!!!

 _________________________________________________________________________________________________________


எனக்குப் பிடித்த கவிதை:


நெடுஞ்சாலை நடனம்இரவின் கண்ணீரென வழிந்தோடும்
நெடுஞ்சாலை ஆளரவமற்ற திசையில் கிடக்க
கனவின்
ரூபமாய்த் திரண்டவள் அசையத்துவங்கிறாள்

தனது சிவப்பு முந்தானையை
காலடியில் புரளவிட்டுச் சுழல்கிறாள்
கலவையான ஆட்ட அசைவுகளின் பாவங்கள்
வழியற்றுக் குவிந்த வாகனவாசிகளை
மிரளவைக்கின்றன

ஊரற்ற சாலையில் யாரிவள்
இவளை அகற்றுவது இயலுமாவென
ஒருவருக்கொருவர் புலம்பித் தீர்க்க

அவளின் சுழற்சியிலிருந்தே பெருகும் காற்று
அவளையொரு சருகென அடித்துச் செல்ல
சாலை வெறுமையில் தொங்குகிறது

-மாலதி மைத்ரி


 _________________________________________________________________________________________________________
 


29 March 2012

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் -ஆனந்த விகடன்விகடனில் எப்போதும் ஒரு ஆச்சர்யம் ஒளிந்திருக்கும் வாராவாரம். இந்த வாரமும் இந்த நேர்காணல் மூலமாக....என் ஈரானிய நண்பர்களுடன் சேர்ந்து பல முறை இவரின் படங்களைப் பார்த்திருக்கிறேன் அந்த ஈரானிய நொய்யல் அரிசிச் சோற்றுடன். என் நண்பர்களால் இந்தப் பேட்டியையோ அல்லது என் வலைப் பூவையோ படிக்க முடியாது. ஆனால் என்னிடம் ஒவ்வொரு பதிவிற்கும் பொருள் கேட்டு புரிந்து கொள்வார்கள்..இந்த வாரம் மிக இனிமையாகக் கழியும் இந்த நேர்காணலுடன்....


100 கோடி பேரில் சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்?
'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப்
ஒளிப்பதிவாளர் செழியன்

வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்பு பவர்களின் மனப் பட்டியல் நம் எல்லோரி டமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டி யலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்துநினை வில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில்இயக்கு நர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந் தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). 

''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''
நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும். என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம். இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது.

  மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் கோமேனிக்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும்ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவேபார்க்காத அவர், இன்று உலகம் போற்றும்திரைப்பட இயக்குநர் ஆனார். இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.


 வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார்.


அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமா’ நூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வ மாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்’ படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார்.படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார்.

நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது.
''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை’ என்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!''

''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்’ என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!''


''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர் கள்?''

''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்’ எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார். ''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம். இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடு’ என்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்’ படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர் களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார்.
''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!''

''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார்.  ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.

''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன்.  

''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை. எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்’ படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம்.
என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா. உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!''

''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.

''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்’ சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார்.

விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது  சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!''

வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார்.

மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார்.

மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார்.

''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?''

''ஒன்றுகூடப்  பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடா’ இரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார்.

''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார்.

விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது.

மாலைப் பொழுதில் சாலிகிராமத்தின் அருணாசலம் சாலையில் நின்றுகொண்டு இருந்தேன். மக்மல்பஃபும் மெர்ஷியாவும் நடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். திரும்பவும் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்தச் சாலையில் எனக்குத் தெரிந்த இன்னொரு சர்வதேச இயக்குநர் பிரசன்ன விதானகே நடந்து வந்துகொண்டு இருந்தார்.

நான் சென்னையில்தான் இருக்கிறேனா? என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் கை உயர்த்தினார். அதே கனிவும் அன்பும் எளிமையும்கொண்ட இன்னோர் ஆசிரியர். சிறந்த படைப்பாளிகள் எப்போதும் தங்கள் படைப்பு குறித்த கர்வமோ ஆணவமோ சிறிதும் இன்றி எளிதில் அணுக முடிகிற ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். நான் என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பிரசன்ன விதானகே நோக்கி நடந்தேன்.

விரும்பும் சினிமாவை எடுத்துப் பார்த்தவர்கள் தினமும் நான் கடந்து செல்லும் சாலையில் வருகிறார்கள். அவருடன் பேசிக்கொண்டே நடக்கிறேன். சாலை ஒன்றுதான். ஆயினும் செல்ல வேண்டிய இடமோ வெகு தூரத்தில் இருக்கிறது!

நன்றி : ஆனந்த விகடன்

28 March 2012

சிக்கி முக்கி நெருப்பே (2)

நிலக்கரி:நானூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் கழிமுக பிரதேசங்களில் வள‌ர்ந்த மரங்கள் சேற்றுநிலங்களில் விழுந்து வண்டல் மண்ணுடன் சேர்ந்து அதிகபட்ச அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் ஆட்பட்டு படிப்படியாக நிலக்கரியாக‌ மாறியன. நிலக்கரி பயன்பாடு குறித்த முதற்குறிப்பு கிரேக்க விஞ்ஞானி தியோபிரடஸ் (கி.மு. 371-287 ) அவர்களின் 'கற்கள் அன்று' என்ற ஆய்வு கட்டுரையில் காணப்படுகிறது. 2 வது நூற்றாண்டில் ரோமர்களின் ஆட்சியின் போது பிரிட்டனில் நிலக்கரியை   உள்ளூர்ச் செல்வந்தர்களின் பயன்பாட்டிற்கும் இரும்புத் தாது உருக்கவும் பயன்படுத்தியுள்ளனர். உள்ளூர்ப் பயன்பாட்டிற்கு யார்க்ஷயர் மற்றும் லண்டன் போன்ற இடங்களில் நிலக்கரி வழங்கும் அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நிலக்கரியின் உபயோகம் பெரும்பாலும் ரோமன் பாத் எனப்படும் பொது குளியல் (இந்த வழக்கத்தில் இருந்து வந்தது தான் இன்றைய Bath நகரம்; இப்போதும் கூட இயற்கை வெந்நீர் ஊற்றும், செயற்கை வெந்நீர் குளியல்களும் Bath நகரில் உள்ளன ), இராணுவ கோட்டைகளில் உள்ள குளியல் அறைகள் மற்றும் செல்வந்தர்கள் தனிநபர்கள் வில்லாக்கள் போன்றவற்றில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பயன்பாட்டிற்கு எஞ்சியது போக மீதமிருந்த நிலக்கரி கடைகளில் விற்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் நிலக்கரி நிலத்தின் மேல்பரப்பில் இருந்து தான் எடுத்டு பயன்படுத்தப் ப்ட்டது. பின்னர் தேவையின் அளவு அதிகமாக சிறிய அறை போன்று மேற்கூரை அமைத்தும், பின்னர் சிறியதாக கிணறுகள் வெட்டியும் எடுக்கப்பட்டது. இந்தமுறை கிட்டத்தட்ட 12 நூற்றாண்டின் இறுதிவரை தொடர்ந்தது.


சிறிய அளவில் இருந்த நிலக்கரி வியாபாரம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. பொதுவான‌ நிலக்கரியின் பயன்பாடு அதிகரிக்க அதனால் ஏற்பட்ட மாசு மற்றும் சுகாதாரமற்ற புகை இவற்றின் விளைவாக 1306ல் நிலக்கரி உபயோகத்தினைத் தடைசெய்து பிரிட்டன் அரசாங்கப் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டது. மேலும் அந்தப் பிரகடனத்தில் கைவினைஞர்களும் மற்ற பொதுமக்களும் பாரம்பரிய எரிபொருட்களான மரம் மற்றும் கரி போன்றவற்றுக்குத் திரும்புமாறும் கட்டளையிட்டது. இது தான் எரிபொருள் கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் முதல் ஆணையாக/தலையீடாகக் காணப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மெல்லத் தளர்ந்து, 14 ஆம் நூற்றாண்டின் முதற் பாதியில், வீட்டின் கட்டுமானத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் நிலக்கரியைச் சாதாரணப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது. பிரிட்டனின் பேரரசர் எட்வர்டு III தான் முதன்முதலில் நிலக்கரியின் வர்த்தகப் பயன்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு நிலக்கரி வர்த்தகத்தை வடகிழக்கு பகுதிகளிலும், பிரஞ்சு நாட்டிற்கும் விரிவு படுத்திய புண்ணியவான். வர்த்தகம் மெல்ல தனது கரங்களை ஐரோப்பா முழுவதும் பரப்பிக்கொண்டது. நிலக்கரியின் தேவையும் அதிகமாகியது. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் பாரம்பரிய எரிபொருட்கள் முழுவதும் ஓரங்கட்டப்பட்டு கறுப்புத்தங்கம் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் மின்னத்தொடங்கியது.தொழிற் புரட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி, பின்னர் ஐரோப்பாக் கண்டப் பகுதிக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது. இந்தப் புரட்சியின் மையச்சுழல் நீராவி எந்திரங்களின் கண்டுபிடிப்பும் அதன் பல்வேறு பயன்பாடுகளும் தான். ஆனால் இந்தத் தொழிற்புரட்சியின் வேகம் நீராவி எந்திரங்களால் இயங்கிய தொடர்வண்டிச் சேவை, நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் பன்னாட்டு வணிகம் என்பது 32 கால் பாய்ச்சலில் சென்றது தான். இதன் முக்கியக் காரணி நிலக்கரி என்கிற எரிபொருளின் தீர்க்கமான, அதிக அளவு வெப்பம் வெளியிடும் ஆற்றலும் நிலைத்த தன்மையும். இதனால் நிலக்கரியின் தேவையும் கூடியது. மேற்பரப்பிலும் ஆங்காங்கு வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியும் போதுமானதாக இல்லை. 1575 இல் ஸ்காட்லாந்து சர் ஜார்ஜ் ப்ரூஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் முதல் நிலக்கரிச் சுரங்கமும் இது கடலுக்கு கீழாக 40 அடி ஆழத்தில் தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கமாகும்) அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்ட சுரங்கங்களின் நீட்சியும் புதிய பரிமாணமும், தொழில் நுட்பமும் கொண்டவையாக மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.

பொதுவாக நிலக்கரி அகழ்தல் (coal Mining) என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும்.  இதில் அறை மற்றும் தூண் முறை (the room and pillar method), சுரங்க முறை (mining), நீண்ட சுவர் அமைத்து அல்லது சுவர் இல்லாமல் ( long wall method) சுரங்கம் அமைத்து நிலக்கரி அகழும் முறை என்று பல்வேறு முறைகள் கையாளப் படுகின்றன. அறை மற்றும் தூண் அமைப்பிலான சுரங்கங்களில் தான் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்கள் இன்றளவும் அமைந்துள்ளன. வெட்டிய நிலக்கரியை மேலே கொண்டுவர குதிரை அல்லது கழுதை மற்றும் வேகன் பயன்படுத்தப் பட்டது. அதற்கு முன் பெரும்பாலும் அடிமைகளும், சிறுவர்களும் தான் இந்த வேலைகளைச் செய்திருக்கிறார்கள். தொழிற்புரட்சி இந்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் மாற்றாக நீராவி இழுவை இயந்திரங்களை வடிவமைத்தது. ஆனாலும், 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய நிலக்கரிச் சுரங்கங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆபத்தான சுரங்க‌ நிலைகளில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி நிர்பந்திக்கப் பட்டனர்.

மேற்பரப்பில் இருந்து நிலக்கரிப் படுகையின் ஆழம், அதன் தரம், வேறு நிலவியல், சூழலியல் காரணிகள் என்பவற்றைப் பொறுத்தே நிலக்கரி அகழ்வதற்கான சிக்கனமான முறை எது என்பதைத் தீர்மானிக்க முடியும். அகழ்வு மேற்பரப்பிலா அல்லது நிலத்துக்குக் கீழா என்பதைப் பொறுத்து அகழ்வு வழிமுறைகள் வேறுபடுகின்றன. நிலக்கரி அகழ்தலின் தொழில்நுட்பச் சாத்தியப்பாடு, பொருளாதாரச் சாத்தியப்பாடு என்பன பல்வேறு காரணிகளைக் கவனத்தில் எடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிடைக்கக்கூடிய தன்மை; தேவையான அளவு, தரம், கொண்டுசெல்லவேண்டிய இடம் என்பவை தொடர்பான வாங்குபவர்களின் தேவைகள்; தேவைப்படும் முதலீடு என்பனவாகும். நிலக்கரி அகழ்தலில், மேற்பரப்பு அகழ்வு, ஆழமான நிலக்கீழ் அகழ்வு என்பனவே அடிப்படையான இரண்டு முறைகள் ஆகும். நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர். நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் மேற்பரப்பு அகழ்வு முறை பயன்படுகிறது. படுகைகளின் ஆழம் 50 - 100 மீட்டர்களாக (180 - 300 அடிகள்) இருக்கும்போது நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது எனினும், சில வேளைகளில் மேற்பரப்பு அகழ்வுத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சில 60 மீட்டர் (200 அடிகள்) ஆழத்துக்கும் கீழுள்ள படுகைகளில் திறந்த குழி முறையைப் பயன்படுத்துகின்றனர். நிலக்கரிப் படிவின் தடிப்பு 20-30 மீட்டர் (60-90 அடிகள்) அளவே இருப்பது இதற்குக் காரணம் ஆகும். 100 மீட்டருக்கும் கூடிய ஆழத்தில் இருக்கும் படுகைகளில் நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது [1].

தொடரும்.......
[1].http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

27 March 2012

கோவை நினைவுகள் - 8

பயணம் தான் மனித நாகரீகத்தின், வளர்ச்சியின் ஆதாரம், முதலீடு, எல்லாம். தனது தேவைகளுக்காக பயணப்பட்டவன் பின் வருமானத்திற்கும், தன் ஆளுமையை வேரூன்றவும் என்றாகி இன்று பயணம் பல்வேறு படிமநிலைகளை, பரிணாமங்களைத் தொட்டு நிற்கிறது . நம் நாட்டில்  பெரும்பான்மை ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் தான் அதிகம். இன்பச் சுற்றுலாக்கள் எல்லாம் பள்ளி கல்லூரிகளுடனே முடிந்து போய்விடுகிறது. அதற்கு மேல் நாம் செல்லும் உல்லாசச் சுற்றுலா பலருக்கு தன் மனைவியுடன் செல்லும் தேன்நிலவுப் பயணம் தான். சென்னையில் இருப்பவர்களுக்கு ஊட்டியும் கொடைக்கானலும் அவர்களின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள். அதுபோல தமிழகத்தின் பிற பகுதிக் காரர்களுக்கு சென்னை ஒரு சுற்றுலாத்தலம். நண்பர்களுடன் வெகுதூரம் செல்வது என்பது மிகமிகக் குறைவுதான். பெரும்பாலான நேரங்களில் பயணம் எப்போதும் ஏதோ ஒன்றின் நோக்கத்துடன் தான் அமையும். சிலசமயங்களில் எந்த ஒரு பெரிய நோக்கமுமின்றி பயணப்பட் வேண்டிய சூழல் உருவாகும். அப்படித்தான் அந்தப் பயணமும் எந்த ஒரு நோக்கமும் அற்று என்முன்னால் வைக்கப்பட்டது. அப்போது தான் என் M.Phil முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்த தருணம். வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் வேறு, சரியான வேலையைத் தேர்வு செய்வதில் என்னளவில் ஒரு பெருங்குழப்பமும் ஒரு வித விட்டேத்தியான மனோநிலையும் இருந்தது. அதற்குக் காரணம் என் படிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஓர் பேரவா வேறு உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்தது. எனவே வேலைக்குச் செல்வது இரண்டாம் நிலைப்படுத்தப் பட்டு மேற்படிப்புக்குக்கான போட்டித்தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்துகொண்டும் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டும், இடையிடையே வேலை தேடுவதுமாகவும் இருந்தேன். இந்தச் சூழலில் தான் இரமேஷ் அண்ணன் மீண்டும் ஒரு பயணத்திட்டத்துடன் வந்தார்.


'என்னப்பா, சும்மா தானே இருக்க. வா அப்படியே கேரளா, கர்நாடகான்னு ஒரு டூர் வந்திருக்கு, போய்ட்டு வரலாம்' என்றார். அவர் டெம்போ டிராவலர் வண்டியின் ஓட்டுநர். அதிகம் அவரை வண்டியில் தான் பார்க்கமுடியும் எப்போதும் எங்காவது பயணித்துக் கொண்டே இருப்பார். என்மேல் ஒரு தனித்த நேசம் கொண்டவர். அவர் அப்படிக் கேட்டவுடன் நான் ' அண்ணங்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்' என்றேன். பின்னர் ' அப்படினா, கேட்டுட்டு ஒரு ஏழெட்டு நாளுக்குத் தேவையான துணி எடுத்துக்க' என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். என் அண்ணனிடம் அனுமதி பெற்று தயாராக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன் அந்த இரவுக்காக. என்னையும் சேர்த்து மொத்தம் 7 பேர் மட்டுமே அந்தப் பெரிய வண்டியில் இருந்தோம். அவர்களிடம் என்னைப் பற்றி என்ன சொன்னார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னை அவர்கள் நடத்திய விதத்தில் என்னை அவர் வண்டியின் கிளீனர் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் நாங்கள் திருச்சூர் செல்லும் வரை நீடித்தது. அங்கிருந்து குருவாயூர் சென்று தரிசனம் செய்வதாக அவர்களின் திட்டம். எங்களோடு பயணம் செய்தவர்களில் ஒரு வயதான பெண் இருந்தார். நான் அவரை அடிக்கடி பார்த்த ஒரு மாயை எனக்குள் இருந்தது. நான் தான் கடைசியாக வண்டியில் ஏறியதால் இவர்களை எங்கிருந்து அழைத்து வருகிறார் என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை. குருவாயூர் செல்லும் போது அந்த வயதான பெண் தான் முதலில் என்னிடம் கேட்டார், ' நீ எங்க தெருவுக்குப் பக்கத்துல இருக்க தெருல தானே இருக்க' என்று.


எனக்குச் சட்டென்று நினைவிற்கு வந்தது. பின்னர் பரஸ்பர அறிமுகப் படலம் அரங்கேறியது. இரமேஷ் அண்ணன் அதிகம் வீட்டில் இருப்பதில்லை ஆதலால் அவரை அந்த மூதாட்டிக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரின் மகன்களின் குடும்பம் அமெரிக்காவில் இப்போது வசிப்பதும் விடுமுறையில் வந்தால் இப்படி ஆன்மீகப் பயணம் செல்வது வழக்கம் என்றும் எங்களின் தொடர்ந்த உரையாடலில் நான் அறிந்து கொண்டேன். அந்தப் பயணம் முழுவதும் ஒரே கோவில் தரிசனம் தான். குருவாயூர், சிருங்கேரி, மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் என்று மிகவும் பிரபலமான தளங்களின் தொகுப்பாக அமைந்தது. பேலூர், களப்பேடு, மைசூர் என்று நீண்டு சத்தியமங்கலம் வழியாக கோவையில் முடிந்தது அந்தப் பயணம். என் நீண்ட நெடிய பயணங்களின் தொடக்கப் புள்ளியாகவும் அந்தப் பயணம் அமைந்தது. எனக்குள் அந்தப் பயணம் கூட்டிய பயணத்தின் சுவையை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன், வேறு வேறு நகரங்களில், வேறுவேறு நாடுகளில் என்று என் பயண்த்தின் பாதைகள் மட்டும் வேறு வேறாக. ஆனாலும் அந்த முதல் பயணத்தின் மன ஆராவாரமும், பரவசமும் இப்போது இருப்பதில்லை.துங்கா நதியில் என்னை நிற்க விடாமல் கடித்த மீன்களும், உடுப்பி கிருஷ்ணன் கோவில் அன்னதானச் சாப்பாடும், கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் பிரமாண்டத் தோற்றமும், எங்கும் பசேல் என்று கண்ணுக்கு எட்டிய தூரமட்டும் தெரிந்த அடர் பச்சையும் என்னுள் ஓவியமாய் இன்றும் இருக்கிறது. மங்களூரில் என்னுள் பதிந்த ஒரு முதியவரின் முகம் கூட எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. இந்தப் பயணம் சென்று வந்த ஒரு வாரத்தில் எல்லாம் என் மேல் படிப்பிற்கான நேர்காணல் அழைப்புகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்தது ஏதாவது ஆச்சர்யமோ.பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், ஆனால் ஏனோ இன்றுவரை அது சாத்தியப் படவேயில்லை.