Pages

10 March 2012

கற்றது கைமண் அளவு - 10/03/2012

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் (Albert Einstein) பற்றிய ஒரு விவரணப்படம் (documentary)._________________________________________________________________________________________________________

இந்த வாரம் முழுக்கத் தேர்தல் வாரமாகவும், தேர்வு வாரமாகவும் தொடங்கி முடிந்துள்ளது. உலகம் முழுவதும் அரசியல் வாதிகள் ஒன்றாகத்தான் இருப்பார்கள் போல. ரஷ்யாவில் புதின் மீண்டும் அதிபர் ஆகியிருக்கிறார் பலப்பல தில்லுமுல்லு செய்து, அதேபோல ஈரானிலும், மினி பொதுத்தேர்தல் என்று சொல்லப்பட்ட வடமாநில இந்தியாவிலும். எப்படி நடிகைகளால் வயதாவதை சகித்துக்கொள்ள முடியாதோ அப்படித்தான் அரசியல் வாதிகளும் பதவியில்லாமல் இருக்கமுடியாது போல. 

களம் #1: ரஷ்யத்தேர்தல்:

எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தாலும் தல விளாடிமிர் புதின் அசருவதாகத் தெரியவில்லை. அவர் தன் வேலையில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மூன்று முறை ஒருவர் ரஷ்யாவில் தொடர்ந்து அதிபராக இருக்க அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பதால் தன் சகாவை சென்றமுறை அதிபராக்கி மீண்டும் இப்போது இவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், போரடுகிறார்கள் இது நேர்மையற்ற தேர்தல் என்று. புதினுக்குத்தான் காதில் விழவில்லை. எப்படியிருந்த நாடு இப்படி ஆகிருச்சு. புதினைக் கூட்டிவந்து நம் அரசியல்வாதிகளிடம் பயிற்சி பெறச்செய்யவேண்டும். ஆட்சியைப் பிடித்தவுடன் அழுதுவேறு இருக்கிறார். இன்னும் பயிற்சி வேண்டும் அதிபரே.
Vladimir Putin on election night

The Moscow protest on Novy Arbat, 10 March    

களம் #2: ஈரான் தேர்தல்:


அடிக்கடி தன் அமெரிக்க எதிர்ப்பு பேச்சால் உலகின் கவனம் ஈர்ப்பவர் ஈரானின் அகமது நிஸார். கடந்த வாரத்தேர்தலில் தற்போதைய அதிபருக்கும் இஸ்லாம் சமுதாயத் தலைவருக்கும் தான் போட்டி. ஓட்டுப்பதிவு நடைபெற்ற நாளுக்கு முன்னே அதிபர் 65% ஓட்டுக்கள் தான் பதிவாகும் என்று சொன்னது பரபரப்பு செய்தியாகியது. இப்போது அதையே அதிபர் 64% ஓட்டுப்பதிவு என்று அறிவித்திருப்பதை எதிர்த்தரப்பு நம்பத் தயாராக இல்லை. ஆனால் நடந்த 225 இடங்களுக்கான தேர்தலில் தற்போதய அதிபருக்கு பெரும் பின்னடைவு என்பது மட்டும் உறுதி. இன்னும் 65 இடங்களுக்கான தேர்தல் மீதமிருக்கிறது. எதும் நடக்கலாம். 

Iranian President Mahmoud Ahmadinejad   Ayatollah Khamenei voting


களம் #3: இந்திய மினி தேர்தல்:


காங்கிரசுக்கு பலத்த அடி நடந்துமுடிந்த தேர்தலில். பெருசா அலட்டிக்கொள்ள முடியாது 38 வயது வாரிசு முதலமைச்சரானதைத் தவிர. தேர்தலில் வென்றவுடன் உத்திரபிரதேசத்தின் அடுத்த முதல்வராக முலாயம் சிங் யாதவ்தான் வருவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் பதவிப் போட்டியில் ஈடுபடாமல், தனது மகனுக்கு வழிவிட்டுள்ளார் (ஏம்பா செய்தியெல்லாம் பாக்குறீங்களா!!!). 403 எம்பிக்களைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உபியின் முதல் இளம் முதல்வர் என்ற சிறப்பு அகிலேஷுக்குக் கிடைத்துள்ளது.


அகிலேஷ் யாதவ் - சிறு குறிப்பு (நன்றி: விகடன்)


சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனான அகிலேஷ் யாதவ் (வயது 38), ராஜஸ்தானில் உள்ள ராணுவப் பள்ளியில் பயின்றவர். மைசூரில் இளங்கலை பொறியியல் முடித்த பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் பெற்றார்.
பின்னர் தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்த அகிலேஷ், 2000-ல் கன்னவுஜ் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அந்தத் தொகுதியை 2004 மற்றும் 2009 ஆகிய பொதுத் தேர்தல்களிலும் தக்கவைத்துக் கொண்ட அகிலேஷ், கட்சியின் மாநிலத் தலைவரானார். 


அண்மையில் நடந்து முடிந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் நட்சத்திரத் தலைவராக உத்தரப் பிரதேசத்தில் வலம் வந்த அகிலேஷ், மாநிலம் முழுவதும் தனது தலைமையில் தீவிரத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 


மாற்றத்தை விரும்பிய உத்தரப் பிரதேச மக்கள் மனத்தில், நம்பகத்தன்மை மிக்க இளம் தலைவராக அகிலேஷ் பதிவானதன் விளைவாகவே, எவரும் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றி கிட்டியது என்பது சமாஜ்வாடி கட்சியினரின் வாதம்._________________________________________________________________________________________________________ராகுல் டிராவிட் ஒரு வழியாக விடைபெற்று விட்டார். வாழ்த்துக்கள் ராகுல். மீண்டும் நீங்கள் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிருபித்திருக்கிறீர்கள். விகடனில் வெளியான கட்டுரை,


சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார், ராகுல் டிராவிட். ஓய்வுபெறும் முடிவையும் அவரது பாணியிலேயே அறிவித்திருக்கிறார்!

பொதுவாக நட்சத்திர வீரர்கள் மைதானத்தின் நடுவே ரசிகர்கள் கைத்தட்டலோடு விடைபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், ராகுல் டிராவிட் அவரது ஆட்டத்தைப் போலவே அழகாக திட்டமிட்டு, முன்கூட்டியே செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, கோட் சூட் அணிந்தபடி கண்ணியமாகவும் கம்பீரமாகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இது தான் டிராவிட்!

எப்போதும் ஒரு நிதானத்தை, பதற்றமோ பரப‌ரப்போ இல்லாத உறுதியை, திட்டமிட்டு கவனமாக அடியெடுத்து வைக்கும் தன்மையை அவரிடம் பார்க்கலாம். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்துக்கு வெளியேயும் சரி.. கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவதை போல் அவர் நிஜமாகவே ஜென்டில்மேன் தான்!

16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் ஏற்ற இற‌க்கங்களைப் பார்த்திருக்கிறார்; சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்; சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து போனதில்லை. எங்கேயும் எப்போதும் நிதானமாகவே இருந்திருக்கிறார். டிராவிட்டின் இந்த நிதானமும், மன உறுதியுமே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியின் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறது. இந்திய பேட்டிங் நெருக்கடிக்கு ஆளான நேரங்களில் எல்லாம் அவரே இந்திய அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார். இந்திய அணியை பொருத்தவரை, டிராவிட்தான் ஆபத்பாந்தவன். அனல் வீசும் வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்டிங் தடுமாறி நின்றபோதும், விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றபோதும் அவரது உறுதியான ஆட்டமே கைகொடுத்திருக்கிறது. இந்திய அணிக்கு சிக்கல் என்றால், ரசிகர்கள் நம்பியதும் டிராவிட்டை தான். எதிர் அணியினர் குறிவைத்ததும் டிராவிட்டை தான்!

எத்தனையோ போட்டிகளில் அவர் இந்திய அணிக்கும் தோல்விக்கும் இடையே நின்றிருக்கிறார். அதனால்தான் "இந்தியப் பெருஞ்சுவர்" எனப் பாராட்டப்பட்டார். நிதானமும் நிலையான தன்மையும் கொண்ட அவருக்கு
 


இந்தப் பெயர் எத்தனை கச்சிதமாக பொருந்துகிறது. அதே அள‌வுக்கு வெற்றிக்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்.

டிராவிட் தாங்கி நிற்கும் விழுப்புண்கள் அதிகம். தங்கத்தை நெருப்பில் இட்டால்தான் பிரகாசிக்கும் என்பது போல டிராவிட்டின் ஆற்றலை சோதனைகளும் சவால்களுமே வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதற்கேற்ப டிராவிட்டின் சாதனைகளும் வியக்க வைக்கின்றன.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே 10,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ' மெதுவாக ஆடுகிறார்.. எனவே ஒருநாள் போட்டிக்கு ஒத்துவரமாட்டார் ' என்று விமர்சிக்கப்பட்டதை மீறி, ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் எல்லா நாடுகளுக்கு எதிராகவும், எல்லா நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். 88 முறை டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த வீரரையும்விட அதிகமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக கேட்சுகளை பிடித்திருக்கிறார் (210).

சாதனைகளையும் ஆட்டத்திறமையையும் மீறி, ராகுல் டிராவிட் தனக்கான முழு அங்கீகார‌த்தையும் பெற்றதேயில்லை என்பது தான் கொஞ்சம் விசித்திரமானது.

ஒரு விதத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே. சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் கங்குலி, டெல்லி சூறாவளி சேவாக் என புகழ் வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்பி கொள்ளும் ஆற்றல் படைத்த சூரியன்கள் நிரம்பிய இந்திய அணியில், பல நேரங்களில் டிராவிட்டின் சாதனைகள் பிரகாசம் குறைந்துபோனது மறுக்க முடியாத உண்மை.

கடந்த 1996-ல் அவரும் கங்குலியும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்தப் போட்டியில் டிராவிட் அபாரமாக விளையாடி, 95 ரன்கள் குவித்தார். ஆனால் அதே போட்டியில் நேர்த்தியாக‌ ஆடி சதம் அடித்த கங்குலி பற்றி தான் எல்லோரும் பேசினார்கள்.தொடர்ந்து, டிராவிட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியபோதும், சச்சினோ சேவாக்கோ புகழப்பட்ட அளவுக்கு அவர் பாராட்டப்பட்டதில்லை; கொண்டாடப்பட்டதில்லை.

ஒருவிதத்தில் டிராவிட்டின் நிதானமான ஆட்டமும் அமைதியான குணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று... புகழ் மாலைகள் வந்து விழாத‌து கண்டு டிராவிட் மனம் புழுங்கியதுமில்லை; வேதனைப்பட்டதும் இல்லை! மாறாக, 'என் கடன் ரன் குவிப்பதே...  அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிவதே' என்பது போல தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுவே அவரை சிறந்த டீம் மேனாக மாற்றியது.

ஆனால், இந்திய அணி சோதனைக்கு ஆளான போதெல்லாம் அவர் சுமைதாங்கியாக மாறி தனது ஆட்டம் பற்றி பேச வைத்தார்.

கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் லக்ஷ்மனோடு சேர்ந்து அவர் ஆடி சதம் அடித்து அந்த போட்டியையே தலைகீழாக மாற்றி, வெற்றிக்கு வழி வகுத்ததை யாரால் மறக்க முடியும். அதே போல பாகிஸ்தானின் ராவல்பிண்டியில அவர் அடித்த 270 ரன்களையும் மறந்துவிட முடியாது!

இதேபோல ஆஸ்திரேலிய மண்ணிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அவர் ஆடிய பல இன்னிங்க்ஸ்கள் கிரிக்கெட் காவியம் தான். தன்னிடம் அணி எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப ஆடிய தன்னலமற்ற வீரர் டிராவிட். புகழின் பின்னே அவர் ஓடியதும் இல்லை. சவால்களை கண்டு ஓடியதும் இல்லை.

"எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது," என்று டிராவிட் ஓய்வு முடிவை அறிவித்தபோது பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.

"சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை," என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்.

டிராவிட்டின் ஆட்டத்திலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. டைமிங் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பதவி அவரை தேடிவந்தாலும், அவர் அதனை சில ஆண்டுகளில் ராஜினாமா செய்து விட்டார். எதிர்கால கேப்டனான டோனியை அடையாளம் காட்ட இது உதவியது. அதேபோல தான் இப்போது மூத்த வீர்ர்கள், இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று பேசப்படும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆனால், தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் இளம் வீரரகளுக்கான வழிகாட்டியாக விளங்குகிறார்!

இந்தியப் பெருஞ்சுவர் இன்று தனது ஓய்வை அறிவித்தபோது உதிர்த்தது, 'sad but proud' என்று.

எங்களுக்கும்தான் டிராவிட்!

_________________________________________________________________________________________________________

வாழ்த்துக்கள் மக்களே..இந்தமுறையும் கை நிறைய தேசிய விருதுகளை அள்ளி வந்திருக்கிறீர்கள். ஓரளவு எல்லோரும் ரசித்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டிருப்பது மகிழ்ச்சியே. மூன்று வருடங்களாக சிறந்த இயக்குனர்களுக்கான விருதகளை தமிழ் இயக்குநர்கள் பெறுவது மகிழ்ச்சிதான் என்றாலும் எங்கோ இடிக்கிறது. சிறப்பான இசைக்கோவைகளைக் கொண்ட ஆரண்ய காண்டம் அல்லது அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு  இசைக்கான தேசிய விருது ஏன் வழங்கப்படவில்லை என்று தெரியவில்லை. பார்ப்போம் அடுத்த வருடம் என்ன நடக்கும் என்று.  மற்றபடி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
_________________________________________________________________________________________________________


2 comments:

 1. அன்பின் சகோதரா மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். எனக்கு தாங்கள் மேலே குறிப்பிட்ட அரசியலில் ஆர்வம் குறைவு. ஐன்ஸரீன் பற்றிய படம் பார்த்தேன். மிக்க நன்றி தங்கள் உழைப்பிற்கு. பயணம் தொடர வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி மிக்க நன்றி. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

   Delete