Pages

17 March 2012

கற்றது கைமண் அளவு -17/03/12


பெல்ஜியக் குழந்தைகளின் துர் மரணம் மனதை என்னவோ செய்தது. விபத்துக்கள் இந்த அவசர உலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் இவை பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லை. சுட்ஸர்லாந்திலிருந்து வீடு திரும்பிய ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் ஒரு கொடூரமான விபத்தில் இறந்து போயுள்ளனர். இந்தச் செய்தி என்னைத் தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் நடந்த விபத்தை நினைவு படுத்தியது. இறந்த குழந்தைகள், பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். படு காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

_________________________________________________________________________________________________________

இலங்கையின் போர் குற்ற வன்முறைகள் இன்னும் சர்வதேச சமுதாயத்தால் தண்டிக்கப் படாமலே இருக்கிறது. தன் நாட்டில் வாழும் 7 கோடி தமிழர்களின் உறவுகள் எப்படி போனால் என்ன என்று இருந்த இந்தியா இப்போதும் காந்தியின் குரங்குகள் போல எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் மந்திரிகளும் தாந்தோன்றித் தனமாக பேசிக் கொண்டலைகிறார்கள். பலருக்கு சேனல் 4 வெளியிட்ட விவரணப் படத்தினைப் பார்த்து பெருத்த ஏமாற்றம் தலையப் பத்தி ஒன்னும் பெருசா இல்லையேன்னு,  குறிப்பாக‌ தினமலருக்கு. எங்கு, எந்த விதத்தில் யார் துன்புறுத்தப் பட்டாலும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாகச் சொல்லும் மனித சமுதாயத்திற்கு இது அழகில்லை. சூடானிலும் சிரியாவிலும் கூட இந்தக் கொடூரங்கள் அரங்கேற்றப் படுகின்றன. என்ன செய்ய வாடிய பயிரைக் கண்டாலே வாடிப் போக நாம் பெற்ற அதிகாரமும், ஆணவமும் இடம் கொடுப்பதில்லையே.

_________________________________________________________________________________________________________


அப்பாட ஒரு வழியா சச்சின் சதம் அடிச்சுட்டாரு. இந்த சதம் கிரிக்கெட் உலகமும், இந்திய ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்த ஒன்று. சச்சின் கூட ஏன் 99 சதங்களைப் பற்றி யாருமே பேசலியேன்னு கொஞ்சம் சங்கடப் பட்ட சதம். இந்தச் சாதனை முறியக்கப் படுமான்னு தெரியலை. ஆனால் முறியடிக்கப் படக் கூடாது என்று மனது சொல்கிறது. இந்த மனிதன் தவறவிட்ட 100களின் எண்ணிக்கை மொத்தம் 28 (90 ரன்களில் அவுட்). இது மட்டுமல்ல முதல் தர கிரிக்கெட்டில் 35 சதங்கள் வேறு அடித்துள்ளார். சந்தேகமே இல்லை நீங்கள் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் தான். இதோ அவரின் சில 90 ரன் சொதப்பல்கள். 


_________________________________________________________________________________________________________   


ரஜினியும் படமெடுக்கப் போய்ட்டாரு. பலப் பல அறிவிப்புகளுக்கு பின் லண்டன் வந்து சேர்ந்துட்டாருன்னு கேள்விப் பட்டேன். பாவம் ரஜினி நீங்க இரண்டு பொம்பளப் பிள்ளைகளைப் பெத்து கட்டிக்கொடுத்த பின்னாடியும் எப்படியெல்லாம் சம்பாரிக்க வேண்டியிருக்கு. உங்கள நினைச்சா பரிதாபமா இருக்கு. பாருங்க தாத்தா கூட எவ்வளவு சுறுசுறுப்பா இருக்காரு. பறந்து பறந்து சொத்துச் சேர்க்கிறாரு இன்னமும் (தீக் குளிச்சுருவேன்னு எல்லாம் மிரட்டல் விடுத்திருக்கிறாரு). நீங்க அவரை அடிச்சுக்க முடியாது. முயற்சி பண்ணுங்க வெற்றி நிச்சயம்._________________________________________________________________________________________________________

இப்போதெல்லாம் தமிழ்ப் படங்கள் பார்ப்பதற்கு ரொம்ப ஆயாசமா இருக்கு . புதியதாக ஒன்றும் இல்லை. திரும்பத் திரும்ப அரைத்த மாவு தான் . இவர்கள் படம் எடுப்பதை விட தங்களுக்குள் சண்டை தான் அதிகம் போட்டுக் கொள்கின்றனர். இன்னமும் சில தமிழ் படங்களைப் பார்க்கும் நம் தமிழின் உன்னதமான கலைஞர்களை கொண்டாடாமல் விட்டு விட்டோம் என்றே தோன்றுகிறது. உதிரிப்பூக்கள், வீடு போன்ற படங்கள் உலகின் எந்த மொழிப் படங்களுக்கும் சளைத்தவை இல்லை. இதுவரை நான் பார்த்த காட்சிகளில் the best என்று தோன்றிய காட்சியினை நீங்களும் பாருங்கள். நிச்சயம் சினிமா காட்சி ஊடகம் தான். 


_________________________________________________________________________________________________________   

இயற்கை எப்போதும் ஒரு விசித்திரமான ஆசான். எங்கோ ஒரு மூலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தவார ஆவணப் படம். _________________________________________________________________________________________________________   

எனக்குப் பிடித்த கவிதை: (நன்றி; கீற்று இணையம்)

புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்னும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப் 
பத்திரமாகப் பூட்டிவைத்தான் - அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வே­மிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டுடெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலைக் காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியைக்
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய்ப் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய் - தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
..............
தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண் - என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.
................
திங்களைப் போல் செங்கதிர்போல்
தென்றலைப் போல் செந்தமிழ்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி...
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்து போன
என்னையும் உன் மண்ணையும்.
..............
எங்கள் போர்முரசே
தென்திசையைப் பார்த்துத்
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிலிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த புத்தனின்
கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளைக் கனவுகளை
அக்கினிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.
உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதறக் கதற
ரத்தம் சொட்டச் சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.
.................
தமிழ்த் தேசியத்தைத்
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக - 
முலை வீசி எறிந்த - எம்
கொற்றவை சாட்சியாக - 
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
 உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
‘கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்’

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல - அவன்
பாடல்களும் கனவல்ல.

- புதிய மாதவி, மும்பை

_________________________________________________________________________________________________________

No comments:

Post a Comment