Pages

4 March 2012

கோவை-நினைவுகள் (2)

அந்த ஒரு வருடம் கணக்கில் அடங்கா அனுபவங்கள். ஒருவன் சமுதாயத்தோடு உறவாடும் போதுதான் தான் யார், எந்த மாதிரி மனிதன் என்பதை உணருகிறான், தன் வேர்கள் எத்தன்மை கொண்டது என்கிற நிலைப்பாட்டுக்கு வருகிறான். சிலநேரம் பலம் மிகுந்தவனாகவும் சிலநேரம் ஒன்றுக்கும் உதவாக்கரையாகவும் நம் சமுதாய உறவுகள் எளிதில் உருமாற்றம் செய்ய வைக்கும் வல்லமை பல நேரங்களில் சாத்தியம் தான். நம் வாழ்வு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நிகழும் நிகழ்வுகளின் தொகுப்பல்ல, ஒவ்வொரு கணமும் நாம் இந்த சமுதாயத்தோடு உறவாடும் இருப்பின் வெளிப்பாடு. பல நேரங்களில் சில மணி நேர‌ தாமதங்கள் நிகழ்பவையல்ல, நிகழ்த்தப்படுபவை என்பது என் வாழ்வில் எனக்கு நடந்தவற்றின் மூலம் அறிந்தேன். கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது காந்திபுரத்தில் இருக்கும் இராஜராஜேஸ்வரி டவர்ஸிலும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நான் அங்குதான் computer course படித்துக்கொண்டு இருந்தேன். எப்போதும் நேரம் தவறாமை என்பது நான் கடைபிடிக்கும் ஒரு ஒழுங்கு. எங்கு சென்றாலும் சரியான நேரத்திற்கு செல்வது என்பது என் சுபாவம். ஆனால் அன்று நான் ஒரு 10 நிமிடம் கழித்துத்தான் சென்றேன். எனக்கு நிகழ்ந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. வழக்கம் போல என் மிதிவண்டியில் செல்ல ஆரம்பிக்கும் போதே சாலைகள் பரபர‌ப்பாக இருந்தது. நான் ஏற்கனவே நேரம் தவறிச் செல்கிறேன் என்கிற உணர்வில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறேன் எதைப்பற்றிய கவலையுமன்றி. இதற்கிடையில் இரண்டு பலத்த சத்தம் மட்டும் கேட்டது. அப்போதும் என் கவனம் முழுவதும் வேகமாக செல்வதிலேயே இருந்தது. இன்னும் இரண்டு நிமிடத்தில்  இராஜராஜேஸ்வரி டவர்ஸில் இருப்பேன் என்கிற நிலையில் மீண்டும் ஒரு பலத்த சத்தம் இப்போது மிக அருகில்.  இராஜராஜேஸ்வரி டவர்ஸ் பின் சந்து வழியாகத்தான் சென்றேன், ஒரே புகை புழுதியும் கரும்புகையும் கலந்த மண்டலமாய். சற்று நிதானித்து மிதிவண்டியை விட்டு கீழ் இறங்கும் போது நான் கிராஸ் கட் ரோடு மாரியம்மன்  கோவிலின் பின்புறம் தாண்டியிருந்தேன். பக்கத்தில் வந்த பெரியவர் தான் அந்தப்பக்கம் போகாதீங்க குண்டுவெடிப்பு நடந்திருச்சு என்று அலறி விட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் விரைந்தார். நான் குழப்பமாக மாரியம்மன் கோவில் வழியாக  கிராஸ் கட் ரோடு வந்தேன். கடைகள் சடுதியில் அடைக்கப்பட்டன, மக்கள் குச்சலும் குழப்பமுமாக ஓடிக்கொண்டிருந்தனர், நான் என் மிதிவண்டியுடன் ஏதோ ஒரு படபடப்பில் முன்னோக்கி பேருந்து நிலையம் வரை செல்ல எத்தனித்தேன். இதற்கிடையில் என் அண்ணன் ராஜேஸ்வரி டவர்ஸில் குண்டு வெடிப்பு என்றவுடன் பரபரப்பாகி என்னை தேட ஆரம்பித்திருக்கிறார். நான் மெல்ல ராஜேஸ்வரி டவர்ஸ்  சென்றேன் அதற்குள் அங்கு தீயணைப்பு வண்டியும் காவலர் வாகனங்களும் அந்தப்பகுதியை ஆக்ரமித்திருந்தன. சரியாக நான் மிதிவண்டி நிறுத்தும் இடத்திலேயே சம்பவம் நிகழ்ந்திருந்தது மனதை என்னவோ செய்தது. காந்திபுரம் பேருந்து நிறுத்ததின் மறுபுறம் வெடித்த குண்டு பலரை சின்னாபின்னமாக்கியிருந்தது. எங்கும் ஓலம், குறுக்கும் நெடுக்குமாய் பதற்றத்துடன் ஓடும் மனிதர்கள். அமைதிப்பூங்கா பல நூறு யானைகளால் சிதைக்கப்பட்ட கலவரம் நடக்கும் இடத்தைப்போன்று தறி கெட்டுக்கிடந்தது. மனதுக்குள் பதற்றம், கால்களில் நடுக்கம், உடம்பின் வெப்பம் கொதிநிலை கடந்தது போன்ற ஓர் உணர்வு. வீடு திரும்ப மனமில்லாமல் குண்டு வெடித்த இடம் நோக்கி மிதிவண்டியுடன் ஓட்டமேடுத்தேன். ஆட்டை வெட்டி கூறுகூறாக்கிப் போட்டது போல எங்கும் உடல்கள், உடலுறுப்புகள். குமட்டிக்கொண்டு வந்தது அதையும் மீறி அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. இதற்குள் அண்ணன் என்னைத் தேடி காந்திபுரம் எங்கும் அலைந்துவிட்டு அரசு பொது மருத்துவமனை சென்றிருக்கிறார். அங்கும் ஒரு தகவலுமற்று வீடு வரும்போது நான் இருந்தது கண்டு நீ இன்னைக்கு வகுப்புக்கு செல்லையா என்றபோது அவர் முகத்தில் நிறைந்திருந்த நிம்மதி சொல்ல முடியாதது. அந்த இரவு பல கதைகளும் விசாரிப்புகளுமாக சென்று கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு பெருஞ்சத்தம் வீட்டுக்கு வெகு அருகில் மசூதியிலிந்து கேட்டது. இம்முறை குண்டு அல்ல மனிதர்களின் கோபமான பேச்சுக்களும் அடிக்கும் சத்தங்களும், வெளியே வந்து பார்க்க மசூதி முன்னால் இருந்த கடை சொக்கப்பனை போல கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த நிசப்த கோவை இரவு பல நாட்கள் என் தூக்கம் கெடுத்த பெருங்கனவாக வந்து கொண்டேயிருந்தது. அன்று அந்தத் தாமதம் மட்டும் நிகழாமல் போயிருந்தால் நானும் கூட அந்தக் குண்டு வெடிப்பில் சிக்கியிருக்கலாம். இன்று அந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்ளாமலே போயிருக்கலாம். அதைத் தொடர்ந்து பல இடங்களில் குண்டு இருப்பதாக வதந்திகள், சில உண்மையில் வெடிக்காமல் விட்டுப்போன வெடிபொருட்கள் எல்லாம் பின் வந்த நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் கோவையின் வளர்ச்சி சில பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்றது. கோவை தன்னை புதுப்பித்துக்கொளள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எல்லோரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்கிற உலகப்பொது உண்மை எனக்கு உறைக்கத் தொடங்கியது அப்போதுதான். மனித மனம் எவ்வளவு வக்கிரமும் வன்மமும் நிறைந்தது என்பது மெல்ல உணரத்தொடங்கியது. என் வாசிப்பும் வேறு தளங்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தது. 

No comments:

Post a Comment