Pages

24 March 2012

கற்றது கைமண் அளவு - 24/03/2012


நீரின்றி அமையாது உலகம் என்பது வள்ளுவன் வாக்கு. 1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் செய்யப்பட்ட பரிந்துரையை அடுத்து மார்ச் 22ம் தேதியை உலக குடிநீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. நீர் வளம் இன்று சர்வதேச சந்தையாகி விட்ட நிலையில் தண்ணீருக்கான உரிமையும், பகிர்வும் இனக்குழுக்களுக்கிடையில் ஒரு போட்டிப் பொருளாகவும்,  மாறிவிட்டது.  ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு மையப்பொருள் (theme) பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் "எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல், வாய்ப்புக்களைப் பகிர்தல்" (Transboundary waters; Sharing water, Sharing opportunities) என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி, சமாதானம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இந்த மையப்பொருளின் நோக்கமாகும். உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 நொடிகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தோரும் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. நீர்ப் பற்றாக்குறையும், புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும். எனவே தண்ணீரைப் பேணுவோம். 
 _________________________________________________________________________________________________________ 


'இந்தியாவில் ஏழைகள் குறைந்துவிட்டார்கள்' என்ற திட்ட கமிஷனின் புதிய அறிக்கை வெளியானது இந்த வாரம். அதாவது கடந்த 5 வருடங்களில் 37.2% லிருந்து 29.8%  மாக வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் குறைந்திருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் வேறு வெளியிட்டுள்ளது. இன்னும் விளக்கமாக, நகர்புறத்தில் ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும், கிராமங்களில் 22 ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் அவர்கள் ஏழைகள் அல்ல. என்ன ஒரு பிக்காலித்தனம் !!!. 

 _________________________________________________________________________________________________________

மன்மோகனின் முடிவு தெரிந்து உண்ணாவிரதம் அறிவித்துப் பின்னர், பிரதமரின் அறிவிப்பு வந்தவுடன் திரும்பப் பெற்று தமிழர்களின் தானைத் தலைவன் ஏற்பாட்டில்  அமெரிக்கா கொண்டு வந்த இந்தியா ஆதரவளித்த இலங்கை எதிர்ப்பு மனித உரிமைத் தீர்மானம் ஒரு வழியாக நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்தியா அதற்கு ஆதரவு தெரிவித்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எதுவுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம் இப்போதாவது விழித்துக்கொண்டதே. ஆனால் இந்தத் தீர்மானம் எதைப் பற்றியது என்பதையும் நாம் அலசிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தத் தீர்மானத்தில் உள்நாட்டுப் போர் குறித்து அந்நாடு அமைத்த விசாரணை ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி.) பரிந்துரைகளை அமல்படுத்துவது தான் பிரதானமாக இருக்கிறது. தமிழர்களின் மீது  ராணுவம் நடத்திய இனவெறிப் படுகொலை, பாலியல் பலாத்காரம் பற்றிய தரவுகளோ அல்லது குறிப்புகளோ அறிக்கையில் இடம் பெறவில்லை. தமிழர் குடியிருப்புகளில் இலங்கை ராணுவத்தை மீண்டும் குவித்ததாகக் கூட தகவல்கள் சொல்லின. எனவே இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே படுகிறது. 

_________________________________________________________________________________________________________ 


சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் வெற்றி முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒன்றுதான் என்றாலும் வைகோவிற்கு விழுந்த ஓட்டுக்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் காண்பித்த வேகம் கூட எதிர்பார்த்தது தான். சாதாரண மக்கள் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ தெரியவில்லை. ஆனாலும் நம் மக்களை நினைத்தால் கொஞ்சம் எரிச்சலாகவும், கோபமாகவும், சிலசமயம் வெட்கமாகவும் கூட இருக்கிறது. முல்லைப் பெரியாறும், கூடங்குளமும் ஏதோ தென்மாவட்ட மக்களின் துயரம் போல மற்ற பகுதி மக்கள் எவன் வீட்டிலையோ தானே இழவு என்பது போல இருப்பது தான் வேதனை. பல இடங்களில் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் ஏதோ கூடங்குள அணுமின் நிலையத்தைத் திறக்காமல் இருப்பது தான் என்பது போல எதிர் ஆர்ப்பாட்டம் செய்த வேதனைகளும் அரங்கேறின. நாம் பொழுதுபோக்கு என்று பார்க்கும் திரைப்படத்திலும், டி.வியுலும், ரசிக்கும் கிரிக்கெட், படிக்கும் பத்திரிக்கை என்று எல்லாவற்றிலும் ஒரு அரசியல் உள்ளது. பணம் வாங்கிக் கொண்டு உங்களின் ஓட்டுக்களை தாரைவார்ப்பது விபச்சாரத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான். கட்சிகளும், தலைவர்களும் மட்டும் அரசியல் இல்லை.  நமக்கான அரசியல் எது என்பதில் கவனம் வையுங்கள் மக்களே !.

_________________________________________________________________________________________________________ 

இந்த வார விவரணப்படம் (documentary) கணிதம் பற்றியது. மிகவும் அருமையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் மொத்தம் 4 பகுதிகள் கொண்டது. வரும் வாரங்களில் அவற்றைத் தருகிறேன்.

_________________________________________________________________________________________________________ 


துணுக்குகள்:


#அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆதரவு பெற்றவரும், அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கொரியப் பேராசிரியருமான ஜிம் ய்ங் கிம் உலக வங்கியின் தலைவராக நேற்று ஒபாமாவால் அறிவிக்கப் பட்டார். முதன்முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகராக இருந்தவர். கொரியாவைச் சேர்ந்த மருத்துவர். 


#எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனிய‌ர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

# பிரித்தானியப் பாராளுமன்றம் வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவுக் (நிதி நிலை அறிக்கை) கணக்கைச் சமர்பித்தது. அட அதாங்க..பட்ஜெட். பணக்காரர்களை மேலும் பணம் குவிப்பவர்களாக மாற்றுவது தான் இந்த நிதி அறிக்கை என்று எதிர்கட்சி கூறியுள்ளது. எல்லா வரியையும் உயர்த்தி இருக்கிறார்கள். சலுகைகளை நிறைய குறைத்திருக்கிறார்கள். 


# ஸ்காட்லாண்டு (Scotland) சுதந்திர நாடாகவும், பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தினையும் சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது. 2014 ஆண்டு தேர்தலின் போது இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான வாதங்களும் கலந்துரையாடல்களும் வெகுவிமரிசையாக நடந்து வருகின்றது. பார்ப்போம் மக்கள் என்ன சொல்வார்கள் என்று._________________________________________________________________________________________________________ எனக்குப் பிடித்த கவிதை:

கவிதைப் பரப்பில் வளர்ந்து வரும் மிகத் திறமையான கவிஞர் நண்பர் மௌனன் அவர்கள். திரைப் பாடல்களும் எழுதிவருகிறார். அவரின் கவிதைத் தொகுப்பு காலச்சுவடால் வெளியிடப் பட்டது. அவரின் கவிதைகள் எப்போதும் வாழ்வின் வலிகளை, அதன் தாக்கங்களைப் பேசுபவை.

பேய்த்திணை

நிறைய மாற்றத்திற்குப் பிறகு
என்னுள்ளிருந்த இழையவிழ்ந்து
நீ வசிக்கும் நிலமெங்கும்
படர நேரிட்டதே அப்போதுதான்
வந்ததிந்த இச்சை அணுக்களில் இலை
இருந்தும் எனை நீ
குடிநீருக்குக் கையேந்துபவனாகவே
வைத்திருக்கிறாய்
தரம் தாழ்த்தும் உன் பார்வையில்
உயர்குடிக் கர்வம் குறையவேயில்லை
பாதகத்தி
உன் பூப்புக்குக் கட்டக் கீற்றுக்கு ஏறிய
தென்னை மரத்தில்
என்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும்
அன்றைய அவசர மூச்சும்
அன்று தேய்ந்துபோன என்நெஞ்சும்
பதினாறு நாள் உன்ருதுவாடைக்கு
ஏங்கித் திரிந்த பேய்க்காற்று...

மௌனன் (tamizhmounan@gmail.com)


_________________________________________________________________________________________________________ 


No comments:

Post a Comment