Pages

8 March 2012

கோவை - நினைவுகள்- 3


 கோவைக்கும் எனக்குமான உறவு ஆசானுக்கும் மாணவனுக்குமானது போன்றது. அங்கு இருக்கும் வரை ஆசிரியரின் அருமை தெரியாது. விட்டுப்பிரிந்த உடன் தான் அந்த உறவின் செறிவு தெரியும். வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டால் நமக்கான அனுபவம் நிச்சயம் காத்துக்கொண்டிருக்கும். அது கோவையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு தான். அந்த அனுபவம் நம்மை எங்ஙனம் பக்குவப்படுத்துகிறது என்பதில் தான் ஒவ்வொருவரும் வேறுபடுகிறோம். அவரவர் வாகனத்தின் மீது எப்போதும் ஒரு காதல் இருக்கும், கூடவே பல உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளும் இருக்கும். சாதாரன‌ மொங்கு (நுங்கு) வண்டியில் தொடங்கி அன்றாடம் வேலை நிமித்தம் பயணப்படும் ஊர்தி வரை. அவற்றைப் பிரியும் போது ஒரு மனஅழுத்தம் இருக்கும். நீண்ட காலம் பயன்படுத்திய வாகனம் என்றால் அது என்னவோ ஒரு உறவுக்காரன் போலவே பாவிக்கப்படும். வாகனங்கள் வெறும் இயந்திரம் அல்ல அவை நமக்கு உற்ற தோழன். இதை என் வாழ்வில் மட்டுமின்றி பலரின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். இது உலகம் முழுவதுமே உள்ள இயல்பான நடைமுறை தான் என்பதை இங்கு கூட பலர் தங்களது வாகனம் பற்றியும் அவற்றின் பெருமை பற்றியும் கூறக்கேட்டிருக்கிறேன். நான் 6-ம் வகுப்பு படிக்கும் போது தான் முதல் மிதிவண்டி எனக்காக வாங்கப்பட்டது.


இப்படித்தான் ஒரு நாள் என் வேலைகளை முடித்துக்கொண்டு வர இரவு 10 மணி ஆகியிருந்தது. என் மிதிவண்டிக்கு பூட்டுக்கூட கிடையாது. வீட்டின் முன்னிருந்த தென்னை மரத்தின் கீழ் வைத்துவிட்டு நேராக சாப்பிடச் சென்றேன். அறையில் அனைவரும் அவரவர் வேலை முடிந்து வந்திருந்தனர். ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கச் செல்லும் போது என் மிதிவண்டி நினைவு வந்து எடுத்து உள்ளே விடலாம் என்று கதவைத் திறக்கச் சென்றபோது, என் அறையில் எங்களோடு இருந்த ஒருவர் தானும் தனது மிதிவண்டியை எடுத்துவர என்னோடு வருவதாகச் சொன்னார். அவரைப் போல மிதிவண்டியை யாரும் பாதுகாக்க முடியாது. பொல்லாதவன் படத்தில் வரும் தனுசைப் போல எப்போதும் தன் மிதிவண்டிப் புராணம் பாடிக்கொண்டிருப்பார். "இப்புடித்தான் பாரு கிராஸ் கட் ரோடுல போகும் போது ஒரு பைக்கு காரன் வந்தான் லைட்டா ஒரசிட்டான் என் சைக்கிள ...விடுவனா நானு சட்டையப் புடிச்சு நாலு விடலாமுன்னு நினைக்குறத்துக்குள்ள பய புள்ள‌ பயந்து ஓடிட்டான்" என்று யாரோ தன் காரில் ஆணியால் கோடு போட்டவனைப் பற்றி பேசுவது போல சிரிக்காமல் சொல்வார். அவரைப் போல மிதிவண்டிய துடைப்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. என் வண்டிக்கு பூட்டு இல்லாததால் பல நேரங்களில் தன்னுடைய மிதிவண்டியை விட்டுவிட்டு என்னுடயதை எடுத்துக்கொண்டு போய்விடுவார். நாம் அவருக்காக காத்திருந்து மண்டை காய்வது தான் மிச்சமாயிருக்கும். எவ்வளவு திட்டினாலும் எதுவும் அவரைப் பொறுத்தவரை மிதிவண்டி விசயத்தில் காதில் விழாது. அவர் வந்தவுடன் நாங்கள் வீட்டின் முன் சென்றோம். என் மிதிவண்டி இருந்தது அவர் ஏதோ சந்துக்குள் விட்டிருப்பார் போல என்று " எங்கப்பா உன் சைக்கிள் சந்துக்குள்ள நிக்குதா" என்று கேட்டேன். அவர் என்னிடம் திரும்பி " இங்க பாரு சைக்கிள் விசயத்துல மட்டும் வெளையாடத, ஒழுங்கு மரியாதயா எங்கின வைச்சுருக்கன்னு சொல்லு" என்றார். " என்னப்பா ஓங்கூட வம்பா போச்சு, நான் எதுக்கு ஓன் சைக்கிள எடுக்கனும்" என்றேன். அவருக்கு பதட்டம் அதிகமாகியது. சந்தின் எல்லாப் பக்கமும் சென்று தேடினார். மாடிக்குச் சென்று அங்கு யாரவது எடுத்து வைத்திருக்கிறார்களா என்று சுற்றிச் சுற்றி வந்தார். அதற்குள் நான் விசயத்தை அறையில் சொல்லியிருந்தேன். யாரும் சட்டை செய்யவில்லை. ஏன்னா அவரு பண்ணின டார்ச்சர் அப்படி. அவரவர் படுக்கை விரிப்பதில் மும்மரமாக இருந்தனர். பதட்டத்துடன் உள்ளே வந்தவர் " யாரு ஏன் சைக்கிள எடுத்து ஒளிச்சு வைச்சது" என்று அதட்டலாக கேட்டார். அறை நண்பர் ஒருவர் " என்ன அதட்டுற ஒஞ்சைக்கிள காணமுன்னா, நாங்க தான் களவான்டமா, அமைதியா கேளு" என்று மல்லுக்கு நின்றார்.  அவர் ஏதோ முடிவு செய்தவர் போல சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே ஓடினார். எனக்கும் அடுத்த நாள் வகுப்புத் தேர்வுக்குப் படிக்க புத்தகத்தை எடுத்துகொண்டு அவரின் பின்னாலே வந்தேன். அவர் சாலையில் இறங்கி அங்குமிங்கும் தேடத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து வந்தவர் "ஏம்புட்டு சைக்கிள மட்டுமில்ல, நிறையா சைக்கிள காணோம். வேனு வச்சுத் தூக்கி இருக்காய்ங்க. கிட்டத்தட்ட 20 சைக்கிளு இந்த லைனுல மட்டும் போயிருக்கு". மிதிவண்டி காணாமல் போவது என்பது அப்போதெல்லாம் சர்வ சாதாரணமாய் நடந்த ஒன்று தான் என்றாலும், அவரின் மிதிவண்டி காணாமல் போனது சிறிது வருத்தத்தை எங்கள் எல்லோருக்குமே கொடுத்தது. அவர் காவல் நிலையம் சென்று புகார் எல்லாம் செய்தார், ஆனால் கடைசி வரை அவருக்கு அந்த மிதிவண்டி மட்டும் கிடைக்கவேயில்லை.அதன் பிறகு எந்தப் புதிய‌ மிதிவண்டி பார்த்தாலும் அவர் சிறிது நேரம் நின்று அது சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருப்பார். அவரின் நினைவில் இருந்து அந்த மிதிவண்டி மறைய வெகு நாட்கள் பிடித்தது. பின் சில காலம் சென்று ஒரு நாள் புதிய மிதிவண்டியுடன் வந்தார் "புது வண்டி பூட்டியிருக்கேன், வா அப்டியே கோயிலுக்கு போய்ட்டு வரலாம்" என்றபடி.


No comments:

Post a Comment