Pages

12 March 2012

கோவை - நினைவுகள் - 4

பணம் தான் மனிதனைப் பல நேரங்களில் முடிவு செய்கிறது. திரை கடலோடி திரவியம் தேடுகிறோமோ இல்லையோ அதனால் பலவித மனச்சிக்களுக்கு ஆளாகிறோம். இன்றைய உலகமயமாக்கல் நமக்கு பல்வேறு சமூக நெருக்கடிகளைத் தருவது மட்டுமின்றி பணத்தின் மீதான வெறியை வளர்த்தும் விட்டுள்ளது. எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்கிற வன்முறை தான் பெரும்பாலோரின் இன்றைய மனநிலையாக உள்ளது. எந்த விதக் கேள்வியும் கேட்காமல்  பணத்திற்காக நம்மை அடகு வைக்கும் புதிய அடிமை முறை உலகெங்கும் வேகமாகப் பரவியுள்ளது. இங்கு யாரும் முக்கியமில்லை, சமூகம், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் என்று எதுவும் இன்றைய மனிதனுக்குத் தேவையில்லை.  பணம், பணம், பணம் இது தான் இன்றியமையாத குறிக்கோள் இன்று. ஓர் மாலைப் பொழுதில் ஊரில் இருக்கும் மாமாவிடமிருந்து தொலை பேசி செய்தி, தான் இன்று புறப்பட்டு நாளை  கோவை வருவதாக. அவர் அரபு நாட்டிற்குச் செல்லும் தீவிரத்தில் இருந்தார் அந்தக் காலங்களில். சிவகங்கை, இராமநாதபுரம் பகுதிகள் பஞ்சத்திற்குப் பெயர் போனவை. மழை எப்போதாவது தான் பெய்யும். எப்போதும் வானம் பார்த்த பூமியது. விவசாயம் பெரும்பாலும் எல்லோரையும் வாழ வைப்பதில்லை. எனவே வீட்டுக்கு ஒருவர் வெளிநாடு சென்று பொருளீட்டுவது மிக வாடிக்கையான ஒன்று. பக்கத்திலிருக்கும் மதுரையைப் பார்க்காத பலர் ஏதாவது ஒரு அயல் நாடு சென்று திரும்பியிருப்பர். இந்தச் சூழ்நிலையில் தான் மாமா வெளிநாட்டிற்கு ஆள்ளெடுப்பதாக நான் தந்த தகவலின் அடிப்படையில் அங்கு வருவதாகக் கூறினார். கோவையெங்கும் இதற்கான விளம்பரங்கள் வேறு சுவரொட்டிகளாக கவர்ச்சி காட்டிக்கொண்டிருந்தன. எனக்கு இதற்கு முன் எதுவும் தெரியாது, அவருக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில் இது வாடிக்கை என்பதால் நானும் துணிந்து அவரை வரச்சொல்லி தகவல் சொல்லியிருந்தேன். அவரும் அடுத்த நாள் அதிகாலை வந்து கதவைத் தட்டினார். சில மணிநேர அளவளாவலுக்குப் பின்னர் இருவரும் கவிதா திரையங்கருகிலிருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அந்த முகவரைச் (Agent) சந்திக்கச் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு ரூபாய் 1000 செலுத்தச் சொல்லி அதற்கு ரசீது தந்துவிட்டு, மாமாவின் பாஸ்போர்ட் மற்றும் முகவரி வாங்கிக் கொண்டு இரண்டு நாள் கழித்து வரச் சொல்லி அனுப்பினார்கள்.  மாமாவிற்கு இதன் நடைமுறைகள் மிக நன்றாகத் தெரியும் எனக்கும் அவரின் பொருளாதர நிலை எனக்கு மிக நன்றாகவே தெரியும்,  மிகுந்த சிரமத்தில் இருந்தார் அந்தக் காலக்கட்டங்களில்.  வெளியே வந்து ஒரு டீக்கடை நோக்கிச் சென்றோம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. "ரண்டு டீ கொடுங்க" என்று கடைக்காரப் பையனிடம் சொல்லிவிட்டுத் திரும்பி " என்ன மாமா எதுவும் பேசமாட்டேங்கிறீங்க" என்றேன். "என்ன சொல்லுறது,  மருதமலைக்குப் போய்ட்டு சாயங்காலம் ஊருக்கு கிளம்புறேன் மருமகனே" என்றார். நான் பதற்றத்துடம் "ஏன் என்னாச்சு" என்றேன். "ஏமாத்துற ஆளுக மாதிரி தெரியுது, இருந்தாலும் ஒரு நப்பாசையில தான் பணங்கட்னேன்" என்றார். "நல்ல ஆளுக மாதிரி தானே இருக்காய்ங்க, ஏன் உங்களுக்கு அப்படித் தோணுது" என்று அவரின் நம்பிக்கையைப் பலப்படுத்தப் பார்த்தேன். ஆனாலும் அவர் மருதமலை சென்றுவிட்டு ஊருக்குச் செல்வதில் மிகவும் உறுதியாக இருந்தார். அவ்வாறே ஊருக்கும் சென்றார் இரண்டு நாள் காத்திருக்காமல். நான் அந்த இரண்டு நாளும் அந்த ஹோட்டல் சென்று விசாரிப்பதிலேயே குறியாக இருந்தேன். மூன்றாவது நாள் காலை 9 மணிக்கு குளித்து விட்டு ஹோட்டல் சென்றபோது அளவுக்கதிகமாக ஒரே கூட்டமாக இருந்தது. மெல்லச் சென்று விசாரித்தேன், என் கால்கள் ஒரு நிமிடம் நிலத்தில் இல்லை. எப்போதும் உணராத பூமியின் சுழற்றச்சி என்கால்களுக்கு இப்போது தெளிவாகத் தெரிந்தது. ஆளாளுக்கு கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். மாமாவிற்கு என்ன சொல்வது, என்னை நம்பித்தானே வந்து பணமிழந்து போயிருக்கிறார், என்று எனக்கு நடுக்கமாக இருந்தது. உள்ளுக்குள் ஒரே தவிப்பு. அன்று மாலை எனக்கு மாமா தொலைபேசினார். கனத்த இதயத்துடன், " மாமா, நீங்க சொன்னது மாதிரியே ஏமாத்துக்காரன் தான்" என்றேன். அவர் அந்த உரையாடலை மிக நாசுக்காக தவிர்த்து மற்ற கதைகளைப் பேசி வைத்தார். 

No comments:

Post a Comment