Pages

14 March 2012

கோவை - நினைவுகள் - 5

என்னா...என்னங்க ஆகியிருந்தது, அண்ணே...அண்ணா ஆகியிருந்தது, அவய்ங்க.....அவங்க ஆகியிருந்தது, வந்துட்டாய்ங்க...வந்துட்டாங்க ஆகியிருந்தது, அங்கிட்டு இங்கிட்டு...அங்க இங்க ஆகியிருந்தது, இரண்டாண்டு கோவை வாசத்தில். 'ங்க' விகுதி என் பேச்சில் அதிகம் இடம் பெறத்தொடங்கியது.  கோவையின் சிறுவாணித் தண்ணீருக்கு நான் அடிமையாகியிருந்தேன். எதற்காகவாவது ஊருக்குச் செல்ல நேர்ந்தால், வாழ்வின் 20 வருடங்கள் குடித்த தண்ணீரைப் பார்த்து, "இதெல்லாம் ஒரு தண்ணின்னு எப்புடிக் குடிக்கிறீங்க", என்கிற அளவுக்கு அடிமையாகியிருந்தேன். சில சம‌யம் கையோடு சிறுவாணித் தண்ணீரை அடைத்து எடுத்துக் கொண்டெல்லாம் போயிருக்கிறோம். இரண்டு நாள் ஊரில் தண்ணீர் குடிக்க முடியாமல். கல்லூரி முடிந்ததும் வேகமாக அறைக்கு வந்து தண்ணீர் பிடித்து வைக்கவேண்டும் சமையலுக்கு, இது தான் என் வேலை என் அறையைப் பொறுத்தவரை. சமையல் எப்போதும் என் அண்ணன் தான் செய்வார்.  சிறுவாணித் தண்ணீர் பிடிப்பது என் வேலை. ஆனால் அதுவே பின்னாட்களில் எனது பொழுது போக்காகியது.  வீட்டிலுள்ள‌ அண்டா நிரம்பக் குறைந்தது 10 குடங்களாவது பிடிக்கவேண்டும். தண்ணீர் எடுத்தவுடன் ஒரு செம்பு நிறையக் குடிப்பேன், தண்ணீரின் வழித்தடம் அடிவயிறு செல்லும் வரை உணர முடியும். அவ்வளவு சில்லென்று இருக்கும் சிறுவாணி. அது போன்றதொரு சுவையான தண்ணீரை இதுவரை நான் பருகியதில்லை. அந்தத் தண்ணீரின் சுவை என் நினைவிலிருந்து இன்னும் மறையவே இல்லை. அந்த ருசிக்காகவே பல நாட்கள் தண்ணீரைக் குடித்துக்கொண்டிருப்பது எங்களில் பலருக்கு வழக்கமானது.  எவ்வளவு குடித்தாலும் வயிறு நிறைந்த உணர்விருக்காது. அப்போது தினமும் சிறுவாணி தண்ணீர் வரும், எந்தக் கலப்படமும் இல்லாமல். இன்று சிறுவாணித் தண்ணீர் கோவை நகரத்தில் எங்கும் கலப்படம் செய்யப் படாமல் வருவதில்லை. தண்ணீர் விநியோகம் இப்போது பல இடங்களில் பெறப்பட்ட தண்ணீரின் கலவையாகவே நடைபெறுகிறது. அதுவும் இரண்டு நாளுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாளுக்கு ஒரு முறை. மாலைப் பொழுதுகளில் என் மாப்பிள்ளை வேலை முடிந்து வர காத்திருப்பேன். அவன் வந்ததும் எங்களின் உலகம் ஆரம்பமாகும். பெரும்பாலும் இரவு உணவு கடையில் தான் சாப்பிடுவோம் இருவரும். பின் காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பிபோம் பாதம் பால் சாப்பிட. நாக்கில் ஒட்டும் பாதம் பால் ஒரு பெரிய கிளாஸில் தருவார்கள். மிகவும் சூடான அந்தப் பாலைக் குடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரமாகும். ஊர்க் கதை உலகக் கதை பின் எங்களின் வியாபாரக் கனவுக் கதை என்று எங்களின் பெரும் பேச்சு எல்லாவற்றையும் அலசி வரும். எனக்கு படிப்பின் மீது ஒரு பிடிமானம் இருந்ததில்லை அக்காலங்களில். மாப்பிள்ளை ஒயரிங் காண்டிராக்டரிடம் எந்த ஒரு பிடிமான‌மும் இல்லாமல் வேலை செய்தார். எனவே எங்களின் கனவுகள் எப்போதும் அந்தக் கிராஸ்கட் ரோட்டில் ஒரு பெரிய கடைதிறப்பதைப் பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கும். இந்தக் கனவுக் காட்சிகள் முடியவதற்குள், ஊரும் முழு அமைதியை நோக்கி விரைந்து  கொண்டிருக்கும். எங்களின் பயணம் கிராஸ்கட் ரோடு  வழியாக பழம் விற்கும் பெரியவரிடம் முடியும். அங்கு மீண்டும் எங்களின் கனவுகளின் கதை வசனம் எல்லாம் ஒத்திகை பார்க்கப்படும். பெரும்பாலும் மழை பெய்யும் தினங்களைத் தவிர‌ தினமும் இந்தக் காட்சிகள் நடைபெறும். பத்தாண்டுகளுக்கு முன்வரை கோவையில் பருவகாலம் மாறி வந்ததில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும். இப்போது மரங்களைப் பார்க்க நாம் நகரத்தின் வெளியில் தான் செல்லவேண்டும். இது நகரின் வளர்ச்சி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதன் தன் கையையும் காலையும் வெட்டிக் கொண்டா வளர்கிறான். இல்லையே...பின் எதற்காக மரங்களை அழித்து வசதி செய்து கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப்படும் போது எல்லையில்லா துக்கம் என்னை எப்போதும் அழுத்துகிறது. அவினாசி சாலையில் மரங்கள் வேரோடு பிடுங்கப் பட்டபோது என்னால் சரியாக உறங்க முடியவில்லை. அதே போல மேட்டுப் பாளையம் சாலையில் மரங்கள் வெட்டப் பட்ட செய்தி கேட்டு துக்கம் தொண்டையை அடைத்தது.


கேளுங்கள் இந்தக் வைரமுத்து கவிதையை.....நிச்சயம் மரங்களை நேசிப்பீர்கள்.


2 comments:

  1. மனிதன் தன் கையையும் காலையும் வெட்டிக் கொண்டா வளர்கிறான். இல்லையே...பின் எதற்காக மரங்களை அழித்து வசதி செய்து கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப்படும் போது எல்லையில்லா துக்கம் என்னை எப்போதும் அழுத்துகிறது.

    யதார்த்த உணர்வலைகள்..

    ReplyDelete
  2. இதற்கு அரசாங்கம் தண்டனை என்று கொண்டு வர வேண்டும்....அப்போது தான் இது சரிவரும் இல்லாவிடில் வெட்டியபடியே இருப்பார்கள். நன்றாக எழுதப் பட்டுள்ளது சகோதரா. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete