Pages

18 March 2012

கோவை- நினைவுகள்-6

       'எல்லாப் பக்கமும் தேடியாச்சா, நண்பர்கள் வீட்டுல இருக்காளன்னு பாத்தாச்சா, பள்ளி 4 மணிக்கே விட்டுருக்குமே, அதுக்குப் பின்னால வீட்டுக்கு வந்துட்டு தான் டியுஷன் போனாளா' ஆயிரமாயிரம் கேள்விகள், பல நூறு யோசனைகள். அந்தச் சிறுமி தனி வகுப்பு முடிந்து சரியான நேரத்திற்கு வீடு வரவில்லை என்பதால். எல்லாப் பக்கமும் தகவல் சொல்லப்பட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் தேடத் தொடங்கினோம். வயது 12 தான் இருக்கும் பார்ப்பதற்கு பெரிய பெண் போல இருப்பாள். வீட்டிற்கு ஒரே குழந்தை வேறு. துறுதுறுவென வீட்டில் வளைய வரும் சுட்டிப் பெண். எப்போதும் 8 மணிக்கு வீடு திரும்பும் குழந்தை இன்று 9 ஆகியும் வரவில்லை. தனி வகுப்பு ஒன்றும் அவள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை, இரண்டு தெருக்கள் தாண்டித்தான் இருந்தது. வகுப்பு முடிந்த‌தும் அழைத்து வர அவளின் அம்மா செல்வது வழக்கம். இன்று அவர் கொஞ்சம் தாமதமாகச் செல்லவும் அந்தக் குழந்தை தானே வர நினைத்து தனியாக வர எத்தனித்திருக்க வேண்டும். கொஞ்சம் முன் வரை பதட்டமாக இருந்த அவளின் அம்மா இப்போது அழுக ஆரம்பித்திருந்தார். நாங்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒவ்வொரு இடமாகத் தேடியலைந்தோம். எந்தத் தடையமும் கிடைக்கவில்லை. இறுதியாக நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யும் போது அதிகாலை 2 மணி இருக்கும். எப்படி ஒரு 12 வயதுச் சிறுமி காணாமல் போய்விட முடியும் அதுவும் எப்போதும் நடைபயிலும் அதே தெருக்களில் இருந்து. எனக்குள் பல்வேறு சிந்தனைகள், அவை அனைத்தும் எப்படி இது நடந்திருக்கும் என்பதை நோக்கியே இருந்தன. பாவம் வழி மாறிப் போயிருப்பாளோ இல்லை யாரவது கட்த்திக் கொண்டு போயிருப்பார்களா, அல்லது வேறு ஏதாவதா என்று மனம் பலவற்றை நினைத்து ஒய்ந்து போனது. 

           அடுத்த நாள் பல்வேறு கதைகள் கிளைத்து எழுந்தன இது தொடர்பாக. ஆளுக்கு ஒரு காரணம், எல்லாக் கதைகளுக்குப் பின்னாலும் அந்தக் குடும்பத்தை குதறி எறியும் வக்கிரம் மறைந்திருந்தது. பலருக்கு இது ஒரு நல்ல செய்தியாகவே கொண்டாடும் மனநிலையில் இருந்தது மட்டும் தெளிவாகப் புலப்பட்டது. அந்த வீடு மட்டும் இழவு விழுந்த வீடு போல, உற்றார் உறவினர், நண்பர்கள் என்று செய்தி தெரிந்து வந்து துக்கம் விசாரித்துக் கொண்டு இருந்தனர். அந்தத் தகப்பனையும் தாயையும் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லியே அலுத்துப் போய் இருந்தனர் எல்லாரும். செய்தி கதைகளை உள் வாங்கிக் கொண்டு மெல்லத் தன்  கோர முகத்தினை காண்பிக்க ஆரம்பித்து இருந்தது.

      போஸ்டர் அடித்து ஒட்டலாம், தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம், வானொலியில் காணாமல் போன விவரங்களில் சொல்லலாம் என்று பல்வேறு ஆலோசனைகள் கொடுக்கப் பட்டது. ஆனால் எதுவும் பரிசீலிக்கப் படாமல் ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகங்களை அன்பர்களும் நண்பர்களும் அலசியபடியே இருந்து நாட்கள் நகரத் தொடங்கியிருந்தது. அந்தக் குடும்பமும் தனது இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது. சில மாதங்களில் அவர்களும் வேறு வீடு மாறிச் சென்றிருந்தனர். அக்கம்பக்கம் மட்டும் இன்னும் தனது கொடூர மனதின் வக்கிரக்கங்களைக் காட்டியபடி இன்னும் மென்று கொண்டிருந்தனர். இன்னமும் அந்தக் குழந்தையைக் காணவில்லை தான். இப்போது அவள் குழந்தையாக இருந்திருக்க மாட்டாள், திருமணமாகி குழந்தைகள் கூட இருந்திருக்கும். என்னவெல்லாம் படித்திருப்பாள். காலம் ஏன் அவளை எங்கோ யாருக்கும் எதுவும் தெரியாமல் செய்தது. இப்போது அவளுக்கு மட்டுமே அவள் என்னவானால் என்கிற இரகசியம் தெரியும்.இந்த நிகழ்வு என் மனதில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல மாதங்கள் அந்தப் பெண்ணின் வயதொத்த யாரைக் கடக்க நேர்ந்தாலும் ஒரு கணம் அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பேன். அதன்பின் என்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்கிற கவனம் மேலும் அதிகமாகியது. 

2 comments:

  1. நினைவுகள் தொடரும்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..உங்கள் வருகைக்கும் பின்னூட்டமிட்டதற்கும்.
    கண்டிப்பாகத் தொடரும்....வாழ்வின் பெரும் பகுதி அங்கு தான் செலவிட நேர்ந்தது.

    ReplyDelete