Pages

19 March 2012

கோவை - நினைவுகள் - 7

         கிராமங்கள் ஒருவனை வறுமையின் மிகக் கொடூரமான நிலைக்குச் செல்ல பெரும்பாலும் விடுவதில்லை. உறவுகள் அல்லது சுற்றம் ஓரளவு தாங்கிப் பிடிக்கத் தான் செய்கின்றன. என்ன நம் சூடு சுரணை எல்லாவற்றையும் அவர்களுக்குக் கடன் கொடுத்து விடவேண்டும். ஆனால், இன்று கிராமங்களும் தங்களின் சுய அடையாளையங்களை இழந்து நகரத்துக்குச் சற்றும் சளைக்காதவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. நகரங்கள் எப்போதும் இந்த அடையாளங்களுடனே தான் இருந்து வருகிறது. நகரங்கள் கிராமத்தானை எப்போதும் ஈர்த்த வண்ணமே இருக்கின்றன. தமிழ் நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும் அருகில், தூரத்தில் இருக்கும் நகரத்தினை நோக்கி தினமும் மக்கள் கூட்டம் விளக்கு நோக்கி வரும் விட்டில்கள் போல வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குமான காரணம் மட்டும் தான் வேறு படுகிறது. இதில் முக்கால் வாசிப்பேர்  வேலை தேடி அது கொடுக்கும் பொருள்  நாடித் தான் வருகின்றனர். அப்படி வருபவர்கள்  தன்னுடன் எடுத்து வரும் தன்னம்பிக்கை, துணிவு இவற்றுடன் சுய ஒழுக்கம் இவை அவர்களை மேம்பட்ட நிலைக்கு கூட்டிச் செல்கிறது. எப்போது தன்னிலை இழந்து நதியின் ஓட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லாம் நதியோடு காணாமல் தான் போகிறார்கள். 

           ஒரிரு வருடங்களில் என் அறையில் யாருமின்றி நான் மட்டுமே தனித்து விடப்பட்டேன், வேறு வழியின்றி. அதுவரை என் உறவினர் தவிர்த்து வேறு யாரும் என்னோடு இருந்ததில்லை. எனவே சிக்கல் என்பதே இல்லாமல் தான் இருந்தது. எப்போது அவர்கள் தங்களின் கூட்டுப்புழு வாழ்க்கைக்கு முடிவு கட்டி வாழ்வின் அடுத்த நிலையில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே நானும் தனித்து விடப்பட்டேன். யாருமற்று எப்போதும் அறையில் இருந்ததில்லை நான், யாரவது ஒருவர் அங்கு இருந்து கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒன்றைப் பற்றிய காரசார விவாதம் நடந்து கொண்டே இருக்கும். இவர்கள் இருக்கும் மிதப்பில் நண்பர்களைக் கூட அளவோடு தான் பழகி வைத்திருந்தேன். அவர்களையும் நட்பு என்றெல்லாம் சொல்ல முடியாது, பழக்கம், அவ்வளவு தான். இந்த திடீர்த் தனிமை என்னை மிகவும் வருத்தியது. என்னைப் புத்தகங்களுக்குள் மறைத்துக் கொள்ளத் தொடங்கினேன். மேலும் முதுகலையுடன் முடித்துக் கொள்ளலாம் என்றெண்ணிய என் கல்வியைத் தொடரும் எண்ணமும் வலுப் பெற்றிருந்தது அப்போது. இந்த நிலையில் தான் என் அறைக்கு ஒரு உறவினர் அல்லாத தம்பி ஒருவன் வந்து சேர்ந்தான். பொடிப்பயல், மிகுந்த சுறுசுறுப்பு, தமிழருக்கே உள்ள மைக் கறுப்பு நிறம், கிண்ணென்று இறுகிப் போயிருக்கும் உடம்பு என்று பார்ப்பதற்கு கிராமத்தில் இருக்கும் கடின உழைப்பாளி போல இருந்தான். 'என்ன வேலை செய்யுற' என்றேன். "பஸ்ஸுல லோடு ஏத்துற வேலையிண்ணே" என்றான். எனக்கும் வாடகைக்கு ஒரு பங்கு ஆச்சு என்று நினைத்து அவனை அழைத்து வந்திருந்த என் அண்ணனிடம் "சரி இருந்துட்டுப் போறான் விடு" என்றேன். என் கவனம் முழுவதும் என் படிப்பில் முழுதுமாக இருந்த காலம் அது எனவே அவனிடம் "இங்க பாரு படிக்கிறதுக்கு எந்தத் தொந்தரவும் பண்ணக் கூடாது, ஏதாவது செஞ்ச அப்பவே விரட்டி விட்டுருவேன்" என்று என் குறைந்த பட்ச நிபந்தனையை விதித்தேன். 

          அவனும் " அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டேண்ணேன், தூங்கி எந்திரிக்க ஒரு எடம் வேணும் அவ்வளவு தான்" என்றான். வயது அவனுக்கு அப்போது 16 தான் இருக்கும், எல்லாக் கெட்ட தொடர்புகளும் உள்ள நல்ல மனிதன். அப்படி இப்படி இருக்கும் போது அறைக்கு வருவதைத் தவிர்த்து விடுவான். அவனிருந்த முதல் ஆறு மாதங்களில் மொத்தமே 500 வார்த்தைகள் தான் பேசியிருப்பான் என்னிடம். கடுமையான உழைப்பால் மெல்ல முன்னுக்கு வந்து கொண்டிருந்தான். மற்றொருவருடன் கூட்டு வைத்து ஒரு ஆட்டோ வேறு வைத்திருந்தான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவனுடைய ஆட்டோ கணக்கு வழக்கெல்லாம் நானும் என் அண்ணனும் தான் பார்த்துக் கொடுப்போம். பணம் அவனிடம் அவன் தேவைக்கு மேல் வந்து கொட்டியது. ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும், பெரிய செலவு எதுவும் அவன் செய்ததில்லை. ஒரு நாள் ஒரு புதிய பைக்குடன் வந்தான். " அண்ணே இது வாங்கிட்டம்ணே, காலேஜுக்கு போறதுக்கு எடுத்துக்கிட்டுப் போங்கண்ணே" என்று வாஞ்சை காட்டினான். நான் வழக்கம் போல " இவங்கிட்ட கொஞ்ச எச்சரிக்கையா தான் இருக்கனும்" என்று நினைத்துக் கொண்டு, "சரிப்பா, வேணுமின்னா கேட்குறேன்" என்று பொதுவாகச் சொல்லி வைத்தேன். அவனின் தொடர்புகள் எல்லாம் எல்லை தாண்டிச் செல்வதாக என் அண்ணன் தகவல் சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டிய தேவை வந்ததில்லை அவனை அப்படிப் பார்க்கும் வரை.

           அவன் எப்போதும் வீடு வர இரவு 12 மணியாகும். குடித்திருந்தால் மொட்டை மாடியிலேயே படுத்துக் கொள்வான். அன்று நான் ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். அவன் என்னிடம் வந்து பேச ஆரம்பித்தான், " நீ நல்லா குடிச்சுருக்கே நாளைக்கி பேசலாம் போ போய் படு" என்றவனிடம். நான், உங்கிட்ட பேசனும் என்று அவனின் முழுக்கதையையும் சொல்லி முடித்தான். எனக்கு ஒரு சினிமா பார்த்த எபஃக்ட் உடனே வந்தது. அவன் சொல்லுவது எதுவும் பொய்யில்லை என்று அவனின் தெளிவான உரையாடல் என்னை நம்ப வைத்தது. திருநெல்வேலி செங்கோட்டை அருகில் ஒரு கிராமம் தான் அவனின் ஊர். சிறு வயதில் காலை பள்ளி செல்லும் முன்னும் பள்ளியிலிருந்து வீடு வந்தவுடனும் அந்த ஊர்ச் சிறுவர்கள் சாராயம் காய்ச்சச் சுள்ளி பொறுக்க, ஏதாவது உதவி செய்யச் செல்வார்களாம். அப்படித்தான் இவனும் வேலைக்குச் சென்றிருக்கிறான். பின் பள்ளி செல்லாமல் அவர்களுடனே இருந்து வேலை செய்திருக்கிறான். அவனின் குடும்பம் அவனுடன் சேர்த்து எட்டுப் பிள்ளைகள் எனவே யார் என்ன செய்கிறார்கள் என்று யாரும் சட்டை செய்வதில்லை. போலிஸ் கெடுபிடி காரணமாக சாராயம் காய்ச்சுவது நின்று போய் அந்த ஊரின் பெரும்பாலோர் நகரம் நோக்கி வேலை தேடி வந்திருக்கின்றனர். இவன் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பேருந்துக் கம்பெனியில் போய் வேலை செய்திருக்கிறான். அங்கிருந்து ஒரு ஓட்டுநர் சென்னை செல்லும் போது தன்னுடம் கிளினராக வரச் சொல்ல அவன் பயணம் பேருந்து நோக்கித் திரும்பி இருக்கிறது. அங்கிருந்து எங்கெல்லாமோ அவன் வாழ்க்கைப் பயணம் சென்று கோவை வந்து சேர்ந்திருக்கிறான் இறுதியாக. அவனிடம் தொற்றிக் கொண்ட அத்தனை பழக்கத்துக்கும் காரணம் அந்த பேருந்து ஓட்டுநர் தான் என்றான். ஆனால், இப்பொழுது தான் முதலாளி என்கிற நினைப்பு அதிகமாக இருப்பதாக வெல்லாம் கூறினான். இப்படி ஏதேதோ பேசி அன்றைய இரவு மிக நீண்ட இரவாக மாறிப் போயிருந்தது.

      மெல்ல மெல்லக் குடி அவனை ஆக்கிரமித்தது. காலை நேரங்களில் குடிக்கிறான் என்றெல்லாம் கேள்விப் பட்டு மிக நீண்ட சொற்பொழிவெல்லாம் ஆற்றியிருக்கிறேன் அவனுக்கு. அதுக்கும் கூட "சரிண்ணே இனிமே செய்ய மாட்டம்ணே" என்று மட்டும் தான் கூறுவான். காலப்போக்கில் என் உற்ற தம்பியாகிப் போயிருந்தான். அவன் குடி அவனைக் கடன்காரனாக்கி மீண்டும் மூட்டை தூக்கும் நிலைக்குத் தள்ளியிருந்தது. பின்னொரு நாளில் அவன் ஓட்டுனர் உரிமம் வாங்கி விட்டு நேரே என்னிடம் வந்து " இனிமே மறுபடியும் பாண்டிக்கு ஏத்தம் தாம்ணே, தம்பி டைவரு ஆகிட்டேம்ணே" என்று மிகுந்த மகிழ்வுடன் சொன்னான். எனக்கும் மகிழ்வாகத் தான் இருந்தது, இனிக் குடிக்கமாட்டான் என்று.

          ஒரு அதிகாலைப் பொழுதில் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். அவன் வேலை செய்த அந்தக் கம்பெனி ஆள் தான் அது. "என்னங்க இந்த நேரத்துல, பாண்டிப் பய குடிச்சுப் புட்டு தகராறு பண்ணுறானா" என்று எரிச்சலுடன் தான் கேட்டேன். அவர் " இல்லைங்க அவன் செத்துப் போய்ட்டாங்க" என்றார். மனதை அறுத்தது அந்தச் செய்தி. "என்னங்க சொல்லுறீங்க, எப்படி, என்ன ஆச்சு" என்று இரைந்து கேட்டேன். அவரும் அவன் ஓட்டிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி இறந்த தகவலைச் சொன்னார். அத்துடன் அவனை கோவை அரசு மருத்துவமனைக்குத் தான் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றார். நான் மிகுந்த கனத்த இதயத்துடன் அங்கு சென்றேன். எல்லாக் காரியமும் முடிந்து அவனுடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடைசி வரை அவன் முகத்தினைப் பார்க்காமலே அறைக்குத் திரும்பினேன். மீண்டும் தனிமை என்னுள் ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. மறுநாள் அவன் நண்பர்கள், உடன் வேலை செய்தோரெல்லாம் கண்ணீரஞ்சலி சுவரொட்டி அடித்து ஒட்டினார்கள். எங்களின் அறையிருந்த அந்த வீதியிலும்  சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. என்னால் அந்தச் சுவரொட்டிகளை பார்த்துக் கொண்டு கடந்து செல்ல முடியவில்லை. அடுத்த நாள் நள்ளிரவில் மெல்ல யாருக்கும் தெரியாமல் அவனின் நினைவு சொன்ன அந்தச் சுவரொட்டியைப் பிய்த்து எறிந்தேன்.

No comments:

Post a Comment