Pages

27 March 2012

கோவை நினைவுகள் - 8

பயணம் தான் மனித நாகரீகத்தின், வளர்ச்சியின் ஆதாரம், முதலீடு, எல்லாம். தனது தேவைகளுக்காக பயணப்பட்டவன் பின் வருமானத்திற்கும், தன் ஆளுமையை வேரூன்றவும் என்றாகி இன்று பயணம் பல்வேறு படிமநிலைகளை, பரிணாமங்களைத் தொட்டு நிற்கிறது . நம் நாட்டில்  பெரும்பான்மை ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் தான் அதிகம். இன்பச் சுற்றுலாக்கள் எல்லாம் பள்ளி கல்லூரிகளுடனே முடிந்து போய்விடுகிறது. அதற்கு மேல் நாம் செல்லும் உல்லாசச் சுற்றுலா பலருக்கு தன் மனைவியுடன் செல்லும் தேன்நிலவுப் பயணம் தான். சென்னையில் இருப்பவர்களுக்கு ஊட்டியும் கொடைக்கானலும் அவர்களின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள். அதுபோல தமிழகத்தின் பிற பகுதிக் காரர்களுக்கு சென்னை ஒரு சுற்றுலாத்தலம். நண்பர்களுடன் வெகுதூரம் செல்வது என்பது மிகமிகக் குறைவுதான். பெரும்பாலான நேரங்களில் பயணம் எப்போதும் ஏதோ ஒன்றின் நோக்கத்துடன் தான் அமையும். சிலசமயங்களில் எந்த ஒரு பெரிய நோக்கமுமின்றி பயணப்பட் வேண்டிய சூழல் உருவாகும். அப்படித்தான் அந்தப் பயணமும் எந்த ஒரு நோக்கமும் அற்று என்முன்னால் வைக்கப்பட்டது. அப்போது தான் என் M.Phil முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்கிற ஆழ்ந்த யோசனையில் இருந்த தருணம். வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் வேறு, சரியான வேலையைத் தேர்வு செய்வதில் என்னளவில் ஒரு பெருங்குழப்பமும் ஒரு வித விட்டேத்தியான மனோநிலையும் இருந்தது. அதற்குக் காரணம் என் படிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஓர் பேரவா வேறு உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்தது. எனவே வேலைக்குச் செல்வது இரண்டாம் நிலைப்படுத்தப் பட்டு மேற்படிப்புக்குக்கான போட்டித்தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்துகொண்டும் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டும், இடையிடையே வேலை தேடுவதுமாகவும் இருந்தேன். இந்தச் சூழலில் தான் இரமேஷ் அண்ணன் மீண்டும் ஒரு பயணத்திட்டத்துடன் வந்தார்.


'என்னப்பா, சும்மா தானே இருக்க. வா அப்படியே கேரளா, கர்நாடகான்னு ஒரு டூர் வந்திருக்கு, போய்ட்டு வரலாம்' என்றார். அவர் டெம்போ டிராவலர் வண்டியின் ஓட்டுநர். அதிகம் அவரை வண்டியில் தான் பார்க்கமுடியும் எப்போதும் எங்காவது பயணித்துக் கொண்டே இருப்பார். என்மேல் ஒரு தனித்த நேசம் கொண்டவர். அவர் அப்படிக் கேட்டவுடன் நான் ' அண்ணங்கிட்ட கேட்டுச் சொல்லுறேன்' என்றேன். பின்னர் ' அப்படினா, கேட்டுட்டு ஒரு ஏழெட்டு நாளுக்குத் தேவையான துணி எடுத்துக்க' என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். என் அண்ணனிடம் அனுமதி பெற்று தயாராக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன் அந்த இரவுக்காக. என்னையும் சேர்த்து மொத்தம் 7 பேர் மட்டுமே அந்தப் பெரிய வண்டியில் இருந்தோம். அவர்களிடம் என்னைப் பற்றி என்ன சொன்னார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என்னை அவர்கள் நடத்திய விதத்தில் என்னை அவர் வண்டியின் கிளீனர் என்று சொல்லியிருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். இந்தப் புரிதல் நாங்கள் திருச்சூர் செல்லும் வரை நீடித்தது. அங்கிருந்து குருவாயூர் சென்று தரிசனம் செய்வதாக அவர்களின் திட்டம். எங்களோடு பயணம் செய்தவர்களில் ஒரு வயதான பெண் இருந்தார். நான் அவரை அடிக்கடி பார்த்த ஒரு மாயை எனக்குள் இருந்தது. நான் தான் கடைசியாக வண்டியில் ஏறியதால் இவர்களை எங்கிருந்து அழைத்து வருகிறார் என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை. குருவாயூர் செல்லும் போது அந்த வயதான பெண் தான் முதலில் என்னிடம் கேட்டார், ' நீ எங்க தெருவுக்குப் பக்கத்துல இருக்க தெருல தானே இருக்க' என்று.


எனக்குச் சட்டென்று நினைவிற்கு வந்தது. பின்னர் பரஸ்பர அறிமுகப் படலம் அரங்கேறியது. இரமேஷ் அண்ணன் அதிகம் வீட்டில் இருப்பதில்லை ஆதலால் அவரை அந்த மூதாட்டிக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரின் மகன்களின் குடும்பம் அமெரிக்காவில் இப்போது வசிப்பதும் விடுமுறையில் வந்தால் இப்படி ஆன்மீகப் பயணம் செல்வது வழக்கம் என்றும் எங்களின் தொடர்ந்த உரையாடலில் நான் அறிந்து கொண்டேன். அந்தப் பயணம் முழுவதும் ஒரே கோவில் தரிசனம் தான். குருவாயூர், சிருங்கேரி, மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் என்று மிகவும் பிரபலமான தளங்களின் தொகுப்பாக அமைந்தது. பேலூர், களப்பேடு, மைசூர் என்று நீண்டு சத்தியமங்கலம் வழியாக கோவையில் முடிந்தது அந்தப் பயணம். என் நீண்ட நெடிய பயணங்களின் தொடக்கப் புள்ளியாகவும் அந்தப் பயணம் அமைந்தது. எனக்குள் அந்தப் பயணம் கூட்டிய பயணத்தின் சுவையை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன், வேறு வேறு நகரங்களில், வேறுவேறு நாடுகளில் என்று என் பயண்த்தின் பாதைகள் மட்டும் வேறு வேறாக. ஆனாலும் அந்த முதல் பயணத்தின் மன ஆராவாரமும், பரவசமும் இப்போது இருப்பதில்லை.துங்கா நதியில் என்னை நிற்க விடாமல் கடித்த மீன்களும், உடுப்பி கிருஷ்ணன் கோவில் அன்னதானச் சாப்பாடும், கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் பிரமாண்டத் தோற்றமும், எங்கும் பசேல் என்று கண்ணுக்கு எட்டிய தூரமட்டும் தெரிந்த அடர் பச்சையும் என்னுள் ஓவியமாய் இன்றும் இருக்கிறது. மங்களூரில் என்னுள் பதிந்த ஒரு முதியவரின் முகம் கூட எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. இந்தப் பயணம் சென்று வந்த ஒரு வாரத்தில் எல்லாம் என் மேல் படிப்பிற்கான நேர்காணல் அழைப்புகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்தது ஏதாவது ஆச்சர்யமோ.பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், ஆனால் ஏனோ இன்றுவரை அது சாத்தியப் படவேயில்லை.

No comments:

Post a Comment