Pages

6 March 2012

விமர்சனம்- The Artistஇயற்கையும் வளமும் எங்கும் நிறைந்திருந்தது அந்த கிராமத்தில். வறுமை என்பது எங்கும் இல்லை. எங்கெங்கு காணினும் வளமை அதைத் தவிர வேறெதுவும் இல்லை.ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவை அடைந்திருந்தன. எதற்கும் அடுத்தவரிடம் கையேந்தியது இல்லை. வீட்டு முற்றத்தில் காயும் தானியங்களை தின்ன வரும் பறவைகளைக் கூட அந்த கிராம மக்கள் விரட்டுவதில்லை. அப்படியே விரட்ட வேண்டும் என்றாலும் அவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் வைர வைடூரியங்களைக் கொண்டுதான் விரட்டுவது வழக்கம். இப்படியாகச் சென்று கொண்டிருந்த பொழுதுகளில் வெளியூரிலிருந்து ஒரு விஞ்ஞான வியாபாரி வந்தான். ஊரெல்லாம் சுற்றி வந்தான். பிறகு ஊருக்குச் சென்றவன் சில மாதங்கள் கழித்து வ்ந்தான் ஒரு டிராக்டருடன். ஊரே அவன் பின்னால் தான் இருந்தது. டிராக்கடரின் பயன் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊர் மக்களுக்கு விளக்கினான். யாரும் உழவுக்கு இவ்வளவு தூரம் துயரப்பட வேண்டியது இல்லை. இந்தப் பொறி (Machine) எல்லாமும் செய்யும், உழவுக்கு இனி மாடுகள் தேவையில்லை, பெண்களும் ஆண்களும் நீண்டதூரம் அவர்களின் தலையில் சுமக்க வேண்டியதில்லை, உங்களின் பொழுதுகள் நிறைய மிச்சமாகும், நீங்கள் மற்ற வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் சொன்னான். ஊரின் இளைஞர்களுக்கு ஒரே கொண்டாட்டம் நமது வேலைகளைச் செய்ய ஒரு எந்திரம் வந்துவிட்டது, நாம் நமது பொழுதுகளை மிகவும் பயனுள்ள வகையில் செலவிடலாம் என்றெல்லாம் கூடிப் பேசி மகிழ்ந்தார்கள். எல்லா இளையோரும் கூடிப்பேசி ஆளாளுக்கு ஒன்று வாங்குவது என்ற முடிவுக்கு வந்தார்கள் அனைவரும், அந்தக் கோடிவீட்டுக் குப்பனைத் தவிர. குப்பனுக்கு அந்த வியாபாரி சொல்வது ஒன்றும் விளங்கவில்லை, அவனுக்கு அந்த டிராக்டர் மீது நம்பிக்கையும் இல்லை. தன் கால் சேற்றில் இறங்கி வேலை செய்தால் தான் நிம்மதி. எனவே டிராக்டர் வாங்குவதில்லை என்று முடிவு செய்தான். எல்லோரும் கேலி பேசினார்கள், கஞ்சன் என்றெல்லாம் கூறினார்கள். குப்பனுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. தன் முடிவிலிருந்து மாறுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.இத்தனைக்கும் அவன் ஒன்றும் இல்லாதவன் இல்லை. பொன் விளையும் பூமி, ஆற்றுக்கால் பாசனம், இருந்தும் ஏனோ அவனுக்கு மாடுகட்டி ஏர் ஓட்டினால் நிம்மதி. ஏர் பிடித்து தானே வயலில் இறங்கி உழும் சுகத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட மனமில்லை. ஏர் பிடித்து வயலில் வரும் போது வரும் சேற்றின் வாசத்திற்கு முன் எதுவும் அனுக்குப் பெரிதில்லை. எனவே ஒரே முட்டாக வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவன் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை அவன் குடும்பத்தில். எனவே யாரும் எதுவும் சொல்லவும் இல்லை.

டிராக்டருக்கான முன்பதிவு வெகு தீவீரமாக நடந்தது. ஆளாளுக்கு ஒன்று என்று போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர். வியாபாரிக்கு ஒரே மகிழ்ச்சி, பின்னே இருக்கத்தானே செய்யும், கல்லா நிரம்பிருச்சு. புதிய டிராக்டர்கள் வந்திறங்கின, ஊரே திருவிழாக்கோலம் பூண்டது. ஊர் கோவில் நிறைந்து வழிந்தது, எலும்மிச்சம் பழம், மாலை, பூசணிக்காய், வாழை மரம்  என வியாபாரம் தூள் பரந்தது. பக்கத்து ஊர் வியாபாரிகள் எல்லாம் எப்படியோ மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். தேங்காய், பழம் என்று எல்லாம் விற்றுத் தீர்ந்தன. எங்கு பார்த்தாலும் ஒரே டிராக்டர் புகை, டிராக்டர் இறைச்சல். அந்த சுகந்தம் வீசும் காற்று மெல்ல மாசு படிந்த புகையைச் சுவாசிக்க ஆரம்பித்தது லேசான இருமலுடன்.  குப்பன் மட்டும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தான். இன்னும் இரண்டு நாட்களில் உழவுக்குச் செல்லவேண்டும் குறைந்தது 5 ஜோடி மாடுகளாவது வேண்டும். எப்போதும் ஒருவருகொருவர் முறை வைத்து மாற்றி மாற்றி உழுது நடவு செய்வது தான் அந்தக் கிராமத்தில் வழக்கம். இப்போது எல்லாரும் டிராக்டர் வாங்கியாகி விட்டது. எப்படிக் கூப்பிட்டாலும் யாரும் ஒத்தாசைக்கு வரமாட்டார்கள், போன நடவுக்கு முன் செய்தது போல இப்போது செய்ய முடியாது என்கிற எதார்த்தம் குப்பனுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. எதுவும் விளங்கவில்லை, அன்றிரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை, என்ன செய்வது என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு. ஒரு ஏர் பூட்டி எப்படி உழுது நடவுக்கு வயலை தயார் செய்வது, ஆழ உழ வேண்டுமே 10 ஏர் பூட்டி உழுதாலே குறைந்தது 5 மணி நேரமாகும், எப்படி ஒரு ஏர் கொண்டு உழுவது,விளைச்சல் எப்படி இருக்கும். தானே உழுது நடவு செய்து விடலாம் என்று தீர்மானம் செய்துகொண்டான். அதிகாலையில் எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு வயலுக்குச் சென்று உழுக ஆரம்பித்தான். எவரையும் காணவில்லை, இருட்டில் டிராக்டர் ஓடாது போல என்று நினைத்துக்கொண்டான் குப்பன். சலசலவென கிழக்கு வெளுக்கத் தொடங்கியது. ஊர் மெதுவாக சோம்பல் முறித்தது. டிராக்டெர் இல்லை என்றால் எல்லா வயல்களிலும் உழவு நடக்கும், ஒரே பாட்டும் கும்மாளமுமாக செல்லும், வெயில் சுல்லென உறைக்குமுன் வரப்பேறி விட வேண்டும் என்ற முனைப்பில் உழவு விரைவாக நடக்கும். இப்போது யாரையும் காணவில்லை,மொத்த வயலுக்கும் குப்பன் ஒருவனே உழுதுகொண்டிருந்தான், எங்கும் வெள்ளுடை போர்த்தியது போல கொக்குகளும் நாரைகளும் தங்கள் காலை உணவை உண்ணும் வேலையில் ஆழ்ந்திருந்தன. தீடீரென டபடப என ஒரே இறைச்சல், சாலேரென்று வெள்ளுடை காற்றில் பறந்தது.ஊரெங்கும் ஒரே புகைமயம், ஆளாளுக்கு அவரவர் வயலில் உழுக ஆரம்பித்திருந்தனர் டிராக்டர்களில். குப்பனைப் பார்த்து ஒரு ஏளனப் புன்னகை செய்த பக்கத்துக் காணிக்காரன் தன் வேலையில் மூழ்கிப்போனான், குப்பன் அவனை இரைந்து கூப்பிட்டது காதில் விழாமல்.
அறிவியல் மாற்றங்கள் இன்றைய சமூக வாழ்வில் கடுமையான நெருக்கடிகளை அள்ளி இறைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்னிருந்த நோய்களின் எண்ணிக்கையினை விட இன்றைய நோய்களின் அளவும் வீரியமும் அதிகம், இத்தனைக்கும் நாம் இன்று எத்தனையோ அறிவியலில் முன்னேறி வேறு இருக்கிறோம். எனவே மாற்றம் என்பது அறிவியலின் வளர்ச்சியில் இல்லை. மக்களின் அனுகுமுறையில் இருக்கிறது. உலகமயமாதல் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் பாரிய சக்தி படைத்தவையாக மாறி இருப்பதுடன், மக்களின் அடிப்படைத் தேவைகளும், ஆசைகளையும் வளர்த்து விடுகின்றன. நமக்கும் வாழ்வின் வசதிகள், பிரமாண்டமான பலசரக்கு கடைகள், multicomplex வணிக  நிறுவனங்கள் என்று தேவைப்படுகிறது. இது எதுவும் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் வளர்க்கவோ அல்லது தக்கவைக்கவோ உதவாது. மேலும் இவை  காப்பாற்ற படுவதாலோ, வளர்க்கப்படுவதாலோ கார்பரேட்  நிறுவனங்களுக்கு லாபம் எதுவும் இல்லை. நம் எல்லோருக்கும் வசதியும் வாய்ப்பும் அவசியம், எது வந்தாலும் நமக்கு என்ன. ஆனால் நம்மில் பலருக்கு கொஞ்சம் குப்பத்தனம் இருக்கும் பின் நாமும் துடைத்துப் போட்டுவிட்டு நமது வசதிகளுடன் வாழ பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.


இந்தக் கதைக்கும் The Artist திரைப்படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. மௌன சலனப்படத்தினை (silent cinema) பேசும் சலனப்படம் (feature film) என்கிற விஞ்ஞான வளர்ச்சி மெல்ல பின்னுக்குத் தள்ளுவதும் அதனால் பாதிக்கப்படும் ஒரு கலைஞனின் மன உளைச்சலும் தான் இந்தத் திரைப்படத்தின் கரு. இதனை முழுக்க மௌனப் படமாகவே எடுத்து இறுதியில் கதாநாயகன் தன்னை மாற்றிக்கொள்வதாக முடிகிறது. இதைச் சொன்னவித்தில் ஒரு நேர்த்தி இருந்தது. இசை ஒரு காதாபாத்திரம் போல படம் நெடுக பயணித்தது ஒரு உன்னதமான உணர்வாக இருந்தது. மௌனப்படமாக பார்த்தாலோ என்னவோ கதாபாத்திரத்தின் உணர்ச்சிகள் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.  அறிவியலின் வளர்ச்சியில் மனித உணர்வுகளுக்கு இடம் இல்லை என்பது எப்போதும் உள்ள உண்மை தான்.

No comments:

Post a Comment