Pages

3 March 2012

கோவை-நினைவுகள் (1)


நான் கோவைக்கு வந்தபோது மிக வசதியாகவே உணர்ந்தேன். மிக வசதியான சாலைகள், சில்லென்ற காற்று, போத்திக் கொண்டு தான் தூங்கவேண்டிய நிலை, உதட்டில் தாண்டவமாடும் மரியாதை, எப்போதும் காசு பணம் பற்றிய பேச்சுக்கள், ஒன்பது மணிக்குப் பிறகு உறங்கிப்போகும் ஊர் இவை எல்லாம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்தியது. இந்த நிலை ஒருவாரம் நீடித்தது ஆனால் அதுவே கோவை மீது நான் காதல் கொள்ளப் போதுமானதாக அமைந்தது. மதுரையின் நெருக்கடியான சாலைகள் ஏற்படுத்திய எரிச்சல், எப்போதும் அடிக்கும் புழுதி அடர்ந்த அனல் காற்று, போட்டுருக்க அத்தனையையும் கடாசிட்டு அம்மனமா அலையச் சொல்லும் வெயில், எதைப் பற்றிய பிரக்ஞையும்  இன்றி எல்லாவற்றையும் பேசியலையும் மனிதர்கள், மரியாதை வீசை என்ன விலை எனக் கேட்கும் மனிதர்கள், எப்போதும் திருவிழா கோலம் கொண்ட மதுரையின் அடையாளங்கள் என்னைச் சலிப்புறச் செய்திருக்க வேண்டும். அதற்குள் கோவை குளிர் ஒத்துக்கொள்ளாமல் எனக்கு வந்த காய்ச்சலால் அண்ணனால் ஊருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டேன். இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் விதி வலியது. மீண்டும் ரமேஷ் அண்ணனால் கோவை போகும் ஆசை தூபம் போடப்பட்டது. மீண்டு(ம்) வந்தேன், என் படிப்பில் விரிசலை ஏற்படுத்தப் போகிறது என்கிற எந்தப் பிரக்ஞையும் இல்லாமல். கோவை என்னை வா என்று கட்டியனைத்துக் கொள்ளவில்லை நான் இறங்கிய போது. மாறாக எனக்கான வேலையினை தாயார் செய்து வைத்திருந்தது தான் என் பெரு வியப்பு.

நகரங்களில் கோவை மிகவும் வித்தியாசமானது. வறுமையை விட வளமை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். சில கிலோமீட்டர் கடந்ததும் வரும் வயல்வெளி, எங்கும் நிறைந்த தொழிற்சாலைகள், பெரிய பெரிய கல்வி நிறுவனங்கள், பெரிய வணிக வாளகங்கள் எல்லாமே நிறைந்த நகரம். இது தான் என் அனுபவமாக இருந்தது ஆரம்பத்தில். மதுரை கிராமத்தில் வீடு கட்டி குடியிருக்கும் ஓர் உணர்வைத் தரும். கோவை flat-ல் குடியிருப்பது போன்றது. அவ்வளவு அந்நியோன்யம் இருக்காது, சண்டை சச்சரவுகளும் இருக்காது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மதுரை கிராமிய குத்துப் பாட்டு போல, கோவை மெல்லிசை. என் சில முடிவுகளால் கோவையில் என் முதுகலைப் படிப்பை தொடர்வது என்று உறுதி செய்துகொண்டேன். எனவே மதுரை மற்றும் காரைக்குடி கல்லூரிகளில் சேராமல் காலம் தாழ்த்திக் கொண்டு, என் தந்தைக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தேன். கடைசியில் எங்கும் சேராமல் திரிசங்கு சொர்க்கம் போல ஆகிவிட்டது. இனி ஒரு வருடம் கழித்து தான் படிப்பை தொடர முடியும் என்கிற நிலையில் வேலைக்குப் போய்க்கொண்டு ஏதாவது computer course சேர்வது என முடிவு செய்தார்கள் என் அண்ணனும் தந்தையும். என்  சமூகம் ஒருவனை எந்ததளவு மாற்ற முடியும் என்பதில் நான் செய்த வேலைகள் ஒரு உதாரணம். எனக்கு அப்போது தான் கொஞ்சம் உரைத்தது தவறு செய்துவிட்டது, பேசாமல் எங்காவது சேர்ந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது. 

No comments:

Post a Comment