Pages

28 March 2012

சிக்கி முக்கி நெருப்பே (2)

நிலக்கரி:நானூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் கழிமுக பிரதேசங்களில் வள‌ர்ந்த மரங்கள் சேற்றுநிலங்களில் விழுந்து வண்டல் மண்ணுடன் சேர்ந்து அதிகபட்ச அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் ஆட்பட்டு படிப்படியாக நிலக்கரியாக‌ மாறியன. நிலக்கரி பயன்பாடு குறித்த முதற்குறிப்பு கிரேக்க விஞ்ஞானி தியோபிரடஸ் (கி.மு. 371-287 ) அவர்களின் 'கற்கள் அன்று' என்ற ஆய்வு கட்டுரையில் காணப்படுகிறது. 2 வது நூற்றாண்டில் ரோமர்களின் ஆட்சியின் போது பிரிட்டனில் நிலக்கரியை   உள்ளூர்ச் செல்வந்தர்களின் பயன்பாட்டிற்கும் இரும்புத் தாது உருக்கவும் பயன்படுத்தியுள்ளனர். உள்ளூர்ப் பயன்பாட்டிற்கு யார்க்ஷயர் மற்றும் லண்டன் போன்ற இடங்களில் நிலக்கரி வழங்கும் அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. நிலக்கரியின் உபயோகம் பெரும்பாலும் ரோமன் பாத் எனப்படும் பொது குளியல் (இந்த வழக்கத்தில் இருந்து வந்தது தான் இன்றைய Bath நகரம்; இப்போதும் கூட இயற்கை வெந்நீர் ஊற்றும், செயற்கை வெந்நீர் குளியல்களும் Bath நகரில் உள்ளன ), இராணுவ கோட்டைகளில் உள்ள குளியல் அறைகள் மற்றும் செல்வந்தர்கள் தனிநபர்கள் வில்லாக்கள் போன்றவற்றில் வெப்பத்தை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பயன்பாட்டிற்கு எஞ்சியது போக மீதமிருந்த நிலக்கரி கடைகளில் விற்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் நிலக்கரி நிலத்தின் மேல்பரப்பில் இருந்து தான் எடுத்டு பயன்படுத்தப் ப்ட்டது. பின்னர் தேவையின் அளவு அதிகமாக சிறிய அறை போன்று மேற்கூரை அமைத்தும், பின்னர் சிறியதாக கிணறுகள் வெட்டியும் எடுக்கப்பட்டது. இந்தமுறை கிட்டத்தட்ட 12 நூற்றாண்டின் இறுதிவரை தொடர்ந்தது.


சிறிய அளவில் இருந்த நிலக்கரி வியாபாரம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. பொதுவான‌ நிலக்கரியின் பயன்பாடு அதிகரிக்க அதனால் ஏற்பட்ட மாசு மற்றும் சுகாதாரமற்ற புகை இவற்றின் விளைவாக 1306ல் நிலக்கரி உபயோகத்தினைத் தடைசெய்து பிரிட்டன் அரசாங்கப் பிரகடனம் ஒன்றினை வெளியிட்டது. மேலும் அந்தப் பிரகடனத்தில் கைவினைஞர்களும் மற்ற பொதுமக்களும் பாரம்பரிய எரிபொருட்களான மரம் மற்றும் கரி போன்றவற்றுக்குத் திரும்புமாறும் கட்டளையிட்டது. இது தான் எரிபொருள் கட்டுப்பாட்டில் அரசாங்கத்தின் முதல் ஆணையாக/தலையீடாகக் காணப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மெல்லத் தளர்ந்து, 14 ஆம் நூற்றாண்டின் முதற் பாதியில், வீட்டின் கட்டுமானத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் நிலக்கரியைச் சாதாரணப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது. பிரிட்டனின் பேரரசர் எட்வர்டு III தான் முதன்முதலில் நிலக்கரியின் வர்த்தகப் பயன்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு நிலக்கரி வர்த்தகத்தை வடகிழக்கு பகுதிகளிலும், பிரஞ்சு நாட்டிற்கும் விரிவு படுத்திய புண்ணியவான். வர்த்தகம் மெல்ல தனது கரங்களை ஐரோப்பா முழுவதும் பரப்பிக்கொண்டது. நிலக்கரியின் தேவையும் அதிகமாகியது. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் பாரம்பரிய எரிபொருட்கள் முழுவதும் ஓரங்கட்டப்பட்டு கறுப்புத்தங்கம் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் மின்னத்தொடங்கியது.தொழிற் புரட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கி, பின்னர் ஐரோப்பாக் கண்டப் பகுதிக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது. இந்தப் புரட்சியின் மையச்சுழல் நீராவி எந்திரங்களின் கண்டுபிடிப்பும் அதன் பல்வேறு பயன்பாடுகளும் தான். ஆனால் இந்தத் தொழிற்புரட்சியின் வேகம் நீராவி எந்திரங்களால் இயங்கிய தொடர்வண்டிச் சேவை, நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் பன்னாட்டு வணிகம் என்பது 32 கால் பாய்ச்சலில் சென்றது தான். இதன் முக்கியக் காரணி நிலக்கரி என்கிற எரிபொருளின் தீர்க்கமான, அதிக அளவு வெப்பம் வெளியிடும் ஆற்றலும் நிலைத்த தன்மையும். இதனால் நிலக்கரியின் தேவையும் கூடியது. மேற்பரப்பிலும் ஆங்காங்கு வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியும் போதுமானதாக இல்லை. 1575 இல் ஸ்காட்லாந்து சர் ஜார்ஜ் ப்ரூஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் முதல் நிலக்கரிச் சுரங்கமும் இது கடலுக்கு கீழாக 40 அடி ஆழத்தில் தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கமாகும்) அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்ட சுரங்கங்களின் நீட்சியும் புதிய பரிமாணமும், தொழில் நுட்பமும் கொண்டவையாக மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.

பொதுவாக நிலக்கரி அகழ்தல் (coal Mining) என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும்.  இதில் அறை மற்றும் தூண் முறை (the room and pillar method), சுரங்க முறை (mining), நீண்ட சுவர் அமைத்து அல்லது சுவர் இல்லாமல் ( long wall method) சுரங்கம் அமைத்து நிலக்கரி அகழும் முறை என்று பல்வேறு முறைகள் கையாளப் படுகின்றன. அறை மற்றும் தூண் அமைப்பிலான சுரங்கங்களில் தான் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்கள் இன்றளவும் அமைந்துள்ளன. வெட்டிய நிலக்கரியை மேலே கொண்டுவர குதிரை அல்லது கழுதை மற்றும் வேகன் பயன்படுத்தப் பட்டது. அதற்கு முன் பெரும்பாலும் அடிமைகளும், சிறுவர்களும் தான் இந்த வேலைகளைச் செய்திருக்கிறார்கள். தொழிற்புரட்சி இந்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் மாற்றாக நீராவி இழுவை இயந்திரங்களை வடிவமைத்தது. ஆனாலும், 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய நிலக்கரிச் சுரங்கங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆபத்தான சுரங்க‌ நிலைகளில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி நிர்பந்திக்கப் பட்டனர்.

மேற்பரப்பில் இருந்து நிலக்கரிப் படுகையின் ஆழம், அதன் தரம், வேறு நிலவியல், சூழலியல் காரணிகள் என்பவற்றைப் பொறுத்தே நிலக்கரி அகழ்வதற்கான சிக்கனமான முறை எது என்பதைத் தீர்மானிக்க முடியும். அகழ்வு மேற்பரப்பிலா அல்லது நிலத்துக்குக் கீழா என்பதைப் பொறுத்து அகழ்வு வழிமுறைகள் வேறுபடுகின்றன. நிலக்கரி அகழ்தலின் தொழில்நுட்பச் சாத்தியப்பாடு, பொருளாதாரச் சாத்தியப்பாடு என்பன பல்வேறு காரணிகளைக் கவனத்தில் எடுத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றுள், பகுதியின் நிலவியல் நிலைமை; மேற்படிவின் இயல்பு; நிலக்கரிப் படுகையின் தொடர்ச்சி, தடிப்பு, அமைப்பு, தரம், ஆழம் என்பன; படிவுகளின் மேலும், கீழும் உள்ள பொருட்களின் பலம்; உயரம், சரிவு என்பவற்றை உள்ளடக்கிய இடவமைப்பு; தட்பவெப்பம்; நில உரிமை; வடிகால் நிலைமை; நிலத்தடி நீர் நிலைமை; தேவையான பொருட்களும், தொழிலாளர்களும் கிடைக்கக்கூடிய தன்மை; தேவையான அளவு, தரம், கொண்டுசெல்லவேண்டிய இடம் என்பவை தொடர்பான வாங்குபவர்களின் தேவைகள்; தேவைப்படும் முதலீடு என்பனவாகும். நிலக்கரி அகழ்தலில், மேற்பரப்பு அகழ்வு, ஆழமான நிலக்கீழ் அகழ்வு என்பனவே அடிப்படையான இரண்டு முறைகள் ஆகும். நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர். நில மேற்பரப்பில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் (180 அடிகள்) ஆழம் வரையில் உள்ள படுகைகள் ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அண்மையில் உள்ள படுகைகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் மேற்பரப்பு அகழ்வு முறை பயன்படுகிறது. படுகைகளின் ஆழம் 50 - 100 மீட்டர்களாக (180 - 300 அடிகள்) இருக்கும்போது நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது எனினும், சில வேளைகளில் மேற்பரப்பு அகழ்வுத் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சில 60 மீட்டர் (200 அடிகள்) ஆழத்துக்கும் கீழுள்ள படுகைகளில் திறந்த குழி முறையைப் பயன்படுத்துகின்றனர். நிலக்கரிப் படிவின் தடிப்பு 20-30 மீட்டர் (60-90 அடிகள்) அளவே இருப்பது இதற்குக் காரணம் ஆகும். 100 மீட்டருக்கும் கூடிய ஆழத்தில் இருக்கும் படுகைகளில் நிலக்கீழ் சுரங்க முறையே பயன்படுகிறது [1].

தொடரும்.......
[1].http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

No comments:

Post a Comment