Pages

22 March 2012

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடை பட்ட‌ சீனா!


ஐநாவில் போர்க்குற்றவாளி இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. ஐநாவில் இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.


இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய க்யூபா நாட்டுப் பிரதிநிதி, இலங்கைக்கு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்கக் கூடாது. மேலும் தீர்மானத்தை வரும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறிவிட்டது அமெரிக்கா. தொடர்ந்து, தீர்மானத்துக்கு எதிராகப் பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலை எடுத்துள்ளதாகவும், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை பற்றி பேசாதது ஏன் என கேள்வி எழுப்பி, தீர்மானத்துக்கு எதிராக கருத்தைப் பதிவு செய்தது. நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகள் இலங்கைக்கு தீவிர ஆதரவை அளித்தன. குறிப்பாக தமிழினப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று வாதாடியது சீனா.


ஆனால், உருகுவே, பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன.


ஆதரவளித்த நாடுகள்:


ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே



எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்வடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா.


இலங்கையின் போர்க்குற்றங்களை நாகரீக சமூகம் ஏற்க முடியாது என வாதாடின.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.
உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெட்டதாம்.

இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.

இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.

இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.

இப்போது ஐநாவில் தோற்ற 'கடுப்பில்' உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 


நன்றி:http://tamil.oneindia.in/


No comments:

Post a Comment