Pages

29 April 2012

கற்றது கைமண் அளவு- 29/04/2012

துளிகள்:

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினம் இன்று. புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் இவர்களின் அருந்தவப் புதல்வன். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். தமிழால் உணர்ச்சி கூட்டிய மாகவிஞன். இவரின் வாழ்க்கைக் குறிப்பு படிக்க http://www.pudhucherry.com/pages/paavendar1.html


இந்தாண்டு இங்கிலாந்து முழுவதும் வறட்சிப் பிரதேசமாக அறிவித்தார்கள் ஒரு மாதத்திற்கு முன்பு. அறிவித்த தினத்திலிருந்து கிட்டத்தட்ட எல்லா நாளும் மழைதான்.  இது சாதாரணமாகப் பெய்யும் மழை அளவைவிட அதிகம் என்கிறது புள்ளிவிபரம். சென்றவருடமும் மத்திய இங்கிலாந்து வறட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. எனக்கு என்னவோ ஒரு வேறுபாடும் தெரிவதில்லை. இப்படி பசேலென்று இருக்கும் இந்தப் பகுதியே வறட்சிப் ப்குதி என்றால் எங்க ஊரை என்னனு சொல்லுறது....

யுனிவர்சல் ஸ்டுடியோ சென்றவாரம் நூற்றாண்டைக் கொண்டாடியது. மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தந்தவர்கள் தந்துகொண்டிருப்பவர்கள். ஒரு சினிமாத் தயாரிப்பு நிறுவனம் நூறாண்டுகள் நிலைத்திருப்பது என்பது கொஞ்சம் கடினமான காரியம் தான் என்றாலும் அவர்களின் விளம்பர யுக்தியும், வியாபார நுணுக்கமும் தான் இவ்வளவு தூரம் அவர்களைக் கொண்டு செலுத்தியிருக்கிறது.

நடிகை ரஞ்சிதாவின் நித்தியானந்தா மதுரை ஆதினமாம். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை ஆதினத்திற்கு இருக்கும் சொத்துக்கள் நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகம். மதுரை ஆதினம் மிகப் பெரிய காமெடியனிடமிருந்து காமநெடியனின் வசம் வருகிறது...

சச்சின் நம்ம ஊர் நடிகர்கள் போல அரசியலுக்கு வந்துட்டாரு. என்னதான் சம்பாரிச்சாலும் கட்டிக் காக்க வேண்டுமா இல்லையா என்பது போலவும், அவர் மட்டும் என்ன கடவுளா அற்பமான மனுசப் பிறப்பு தானே என்றும் கருத்துக்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. ஊருல கல்யாணம்னா மாப்பிள்ளையும் நான் தான், ஊருல எழவுன்னா பொணமும் நான் தான், ஆக மொத்தம் மாலையும் மரியாதையும் எனக்குத்தான்...


இராணுவத் தளபதியின் தகிடுதத்தங்களை எல்லாம் தாண்டி இந்தியா, 5,000 கி.மீ. வரையிலான இலக்குகளைத் தாக்கவல்ல 'அக்னி 5’ ஏவுகணையைச் சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை சீனாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது என்பதால், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ''உண்மையில் 'அக்னி -5’ ஏவுகணை 8,000 கி.மீ. தூரம் பாய வல்லது. ஐரோப்பாவுக்கும் இதனால் ஆபத்து!’ என்று அலறுகிறது சீனா. இதைக் கண்டுகொள்ளாத இந்திய விஞ்ஞானிகள் அடுத்தகட்டமாக ஏ-6 எனப்படும் 10,000 கி.மீ. தூரம் பறந்து சென்று ஒரே நேரத்தில் பல பகுதிகளைத் தாக்கக்கூடிய சூப்பர் ஏவுகணையை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நல்லா அடிச்சுக்கிட்டு சாகடிங்க (மக்களை)...(நன்றி:விகடன்)


_________________________________________________________________________________________________________ 


அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதற்கு கலைஞரின் சென்ற வார பேச்சுக்கள் ஒரு எ.கா. கலைஞரின் சமீபத்திய காமெடிகளுக்கு சீமான் அவர்களின் பதில் காணொளி வடிவில்....


_________________________________________________________________________________________________________ 

இந்தவார ஆவணப் படம். புத்தரின் வரலாறு பற்றியது. மிகவும் சுவாரசியாமாக இருந்தது...நீங்களும் பாருங்கள்..._________________________________________________________________________________________________________ 

23 April 2012

ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம


நன்றி: விகடன்.காம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக  (WORLD BOOK AND COPYRIGHT DAY) கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ சார்பில் 1996, ஏப்ரல் 23-ம்  தேதி ஜெனிவாவில் உலகப் பதிப்பாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது, ஆண்டுதோறும்  ஏப்ரல் 23-ம் தேதியன்று 'உலகப் புத்தக தினம்’ கொண்டாட தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 23-ம் தேதி ஆங்கில நாடக இலக்கிய மேதையான  ஷேக்ஸ்பியர் பிறந்த நாள். அவரை போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

புத்தகங்களின் அவசியத்தை அனைவரும் அறிந்துக்கொள்ள ஐந்து விதமான  நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என யுனெஸ்கோ சொல்லியுள்ளது.


1. பதிப்பகங்கள்

பதிப்பகங்கள் புத்தக கண்காட்சிகளை நடத்த வேண்டும். மலிவான விலையில்  புத்தகங்களை வெளியிட வேண்டும். மாணவர்கள், நோயாளிகள் மற்றும் கைதிகளுக்கு  இலவசமாக புத்தகங்கள் வழங்க வேண்டும்.

2. தொழிலதிபர்கள்

புத்தக தினத்தன்று பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்  தொழிலதிபர்கள் பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். தொழிற்சாலையில் சிறு  நூலகங்களைத் தொடங்கி, பணியாளர்களை படிப்பாளர்களாக மாற்ற வேண்டும். கல்வி  அறிவு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.

3. நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்

சிறுவர் சிறுமியர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு நூலகங்களும்  கல்வி நிறுவனங்களும் போட்டிகள் வைக்க வேண்டும். மேலும், மாணவர்கள்,  பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இளம் எழுத்தாளர்களிடையே  போட்டி நடத்த வேண்டும்.

4. பொதுமக்கள்

நூலகத்திற்கு சென்று பொதுமக்கள் புத்தகங்களை படிக்க வேண்டும். வீட்டுக்கொரு சிறிய  நூலகத்தை ஆரம்பிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்களுக்கு  நூலை பரிசளிப்பதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

5. பத்திரிகைகள்

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதத்தில் வாசகர்களை பத்திரிகைகள்  ஊக்கப்படுத்தவேண்டும்.

புத்தக தினத்துக்காக யுனெஸ்கோ ஒரு பொன்மொழியையும் வெளியிட்டு உள்ளது.  'நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்’ என்பதே அது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் கல்வி கற்றோரின் எண்ணிக்கை  பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. 1947-ம் ஆண்டு 90 சதவிகிதமாக இருந்த  கல்லாதவர்கள் எண்ணிக்கை 2000-ல் 40 சதவிகிதமாக குறைந்தது.


2011-ல் கற்றோரின் சதவிகிதம் சதவிகிதம் 74.04 ஆக அதிகரித்துள்ளது.  ஆனால்,  கல்வியறிவு வளர்ச்சி வளர்ந்த அளவுக்கு வாசிக்கும் பழக்கம் தமிழர்களிடையே போதிய  அளவுக்கு வளரவில்லை.

அதே நேரத்தில், தமிழரிடையே நூல் வாசிப்புத் திறன் முற்றிலும் குறைந்துவிட்டது என  ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான  நாளிதழ்கள், வார இதழ்கள், இருவார இதழ்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இப்போது  பத்து மடங்குக்கு மேல் பெருகியுள்ளது. வாசிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  கூடிக்கொண்டே இருக்கிறது. இது பாராட்டத்தக்க விஷயமாகும்.

யுனெஸ்கோ உலக மக்களின் வாசிப்பு அளவை கணக்கிட்டது. அது உலக மக்களின்  சராசரி வாசிப்பு ஆண்டுக்கு 150 பக்கங்கள் என்றும், இந்திய மக்களின் வாசிப்பு 32  பக்கங்கள் என்றும் குறிப்பிடுகிறது. 32 பக்கங்கள் கூட சிறந்த நூல்களைத்  தேர்ந்தெடுத்துப் படிக்கப்பட்டவை அல்ல. அவற்றில் பாட நூல்களும் பத்திரிகைகளும்  அடங்கும் என்கிறது அந்தத் தகவல்.

பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமும், இரு பதிப்புக்கு மேல் வெளியிடப்படுவது என்பது  அரிதாக இருக்கிறது. புத்தகம் வாங்கும் மற்றும் படிக்கும் ஆர்வம் போதிய அளவுக்கு  இல்லாததால் மறுபதிப்புகள் வெளியாவதில்லை.

உலக புத்தக தினத்தையட்டி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் அரிய  புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், மிகவும் பழமை வாய்ந்த அரிய  புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

பழைய சென்னை மாகாண வரலாறு, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாறு, இந்திய  மக்கள்தொகை,  தமிழ் இலக்கியக் களம், அந்த கால மாவட்ட நிர்வாகமுறை, அரிய  புகைப்படங்களுடன் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, பழங்காலத்து ஓவியங்கள்  உள்ளிட்டவை தொடர்பாக 17-ம் நூற்றாண்டு, 19-ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டில்  வெளியிடப்பட்ட அரிய புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. அளவிலும்,  எடையிலும் அதிகமாக இருந்த சில புத்தகங்களும் இடம் பெறுகிறது.

நல்ல புத்தகத்தை சிறந்த ஆசான் எனலாம்.

புத்தகங்கள் பற்றிய சுவைகள்:

* புத்தகங்கள் ஒருவரின் கற்பனைத்திறன் வளரப் பயன்படுகின்றன.

* புத்தகங்கள் படிக்கும் போது மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம் போன்ற பல்வேறு  உணர்வுகள் நமக்கு ஒரு சேர ஏற்படுகின்றன.

* புத்தகங்கள் நம்மைத் அவற்றின் காலத்திற்கு இட்டுச் செல்கின்றன.

* மாவீரன் நெப்போலியன் போர்க்களத்திற்குக் கூட புத்தகங்களை எடுத்து செல்வதை  வழக்கமாக கொண்டிருந்தான்.

* நேரு, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் புத்தகப்  பிரியர்கள்.


இன்னொரு காரணம்..!

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் மிகேல் டி  செர்வான்டீஸ் சாவெத்ரா (Miguel de Cervantes Saavendra)மறைந்த தினத்தை  போற்றும் வகையில் உருவாக்கப்பட்டது இந்தத் தினம் என்று சொல்லப்படுவதும் உண்டு.  ஷேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த மிகேல் புதினங்கள், நாடகங்கள், கவிதைகள் என்று  இலக்கியத்தில் புதுமைகள் படைத்தார்.                                                                                                                          இவரின் டான் கொய்ஜொடி டி லா மஞ்சா (Don quijote de la Mancha) நூல்  மிகவும் புகழ்பெற்றது. இதில் வரும் டான் கொய்ஜொடி ஆகாய கனவுகளும் ஏக்களும்  நிறைந்த சாதாரண மனிதன். அவன் இல்லாத தேசம் ஒன்றுக்கு தனை ராஜாவாக  நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான் கதை. இதை வீரம், சோகம், காதல் ரசம்  சொட்டச் சொட்டவும், நகைச்சுவையாகவும் எழுதி இருக்கிறார்.  


ஜூன் 3 - உலக தமிழ் புத்தக தினம்

தமிழக முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் மூன்றாம்  தேதியை, உலக புத்தக தினமாக (World Tamil Book Day) தமிழ் பதிப்பாளர்கள்  சங்கம் முடிவு கொண்டாடி வருகிறது.

தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றியுள்ள பங்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு  மேற்கொள்ளப்பட்டது.  தமிழ் மொழியை செம்மொழியாக ஆக்கியதில் கருணாநிதி  வெற்றி பெற்றுள்ளார். பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் தமிழ் நூல்களின்  எண்ணிக்கையை 600-லிருந்து 1000 ஆக உயர்த்தினார்.

ஒரு கோடி ரூபாயை தன் சொந்த நிதியிலிருந்து வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வட்டி  தொகையில் 5 தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் ஒரு லட்ச ரூபாய் வழங்க  ஏற்பாடு செய்திருக்கிறார்.

நடப்பு 2012 ஆம் ஆண்டு பரிசுக்கு உரியவர்களை டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர்  ராமகுருநாதன், பாலரமணி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்துள்ளது.

அதன் விவரம்:

1. தமிழ் உரைநடை இலக்கியம் -  மா.ர.போ.குருசாமி

2. தமிழ் கவிதை இலக்கியம் -  சிற்பி பாலசுப்பிரமணியம்

3. தமிழ் நாடக இலக்கியம் - கே.பி.அறிவானந்தம்

4. தமிழ் புனைவு இலக்கியம் - விக்கிரமன்

5. ஆங்கில இலக்கிய எழுத்தாளர் - பிரேமா நந்தகுமார்

6. பிற இந்திய மொழி எழுத்தாளர் (கொங்கணி மொழி இலக்கியம்) - பிரான்சிஸ் டி  சவ்சா

இந்த எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், வெள்ளிக் கேடயம்,  பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படும். பரிசளிப்புவிழா, இன்று மாலை 6 மணிக்கு  சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது.விழாவுக்கு தொழிலதிபர்  நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்குகிறார்.தி.மு.க. பொதுச்செயலாளர்  அன்பழகன் பரிசுகளை வழங்குகிறார்.

22 April 2012

கற்றது கைமண் அளவு - 22/04/2012

ஏப்ரல் 20 எனது பிறந்த தினம். இந்த முறை குடும்பத்தினரைத் தாண்டி முகநூலிலும், தொலைபேசியிலும், நேரிலும் என்று வாழ்த்துச் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. சென்ற வாரம் முழுவதும்கடுமையான வேலைப் பளு காரணமாக எழுத இயலவில்லை. பிறந்த தினத்தின் அன்றும் அப்படியே...ஆனால் முகநூல் மட்டும் பார்த்து வாழ்த்துக்களுக்கு நன்றி சொன்னேன். நான் பிறந்த தினத்தில் தான் இந்த உலகை மாற்றிய (ஏதோவொரு வகையில்) பெருமக்கள் பிறந்த தினம். இதில் பெருமைப் பட்டுக்கொள்ளவும், இவர் போல வேண்டாம் என்று சொல்லவும் என இரண்டு பட்டியல் உள்ளது. சில எனக்குப் பிடித்தவை இங்கே....

570 – முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப் படவில்லை) பிறந்த நாள்
1889 – அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனி யை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945) பிறந்த நாள்
1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1945 - இரண்டாம் உலகப் போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த தினம்.
1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.

நான் பிறந்த நாளில் பிறந்தவர்களை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனால் என் அலுவலக நண்பர் ஒருவர் இந்த நாளில் தான் பிறந்தேன் என்று சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இவற்றை எல்லாம் தாண்டி 2011 வேதியலில் நோபல் பரிசு பெற்ற பேரா. டான் செக்மான் (Dan Shechtman) அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது என்பது மிகவும் மகிழ்வான தருணமாக அமைந்தது. Dan Shechtman அறிவியலில் ஒரு கலகக் காரர் என்றே சொல்லலாம். இயற்பியலில் படிகங்கள் என்பதற்கு ஒரு விளக்கம் உண்டு, 'ஒரு அணு அல்லது மூலக்கூறு ஒரு சீரான இடைவெளியில் அடுக்கப்பட்டு எந்தப்பக்கத்திலிருந்து பார்த்தாலும் ஒரே அளவுடையதாக இருக்கும்' என்பது. எடுத்துக்காட்டாக,  நூற்றுக் கணக்கான கனசதுரங்களை சீரான இடைவெளியில் அடுக்கிவிட்டு எங்கிருந்து பார்த்தாலும் ஒரே தோற்றத்ததினை தரும் அல்லவா மேலும் மிகவும் துள்ளியமாக ஒரு கனசதுரத்தை மட்டும் குறிப்பிட்ட அளவு சுழற்றும் போது எந்த ஒரு மாற்றமும் இருக்காது தானே. இந்த நிலையினை மிகத் துள்ளியமாக x-கதிர்கள் கொண்டும், மிக நுண்ணிய உருப்பெருக்கி கொண்டும் அளவிட்டு 1, 2, 3, 4 மற்றும் 6 முறை சுழற்றும் போது மட்டும் தான் அவை தனது பழைய நிலையினை அடையும் என்று இயற்பியலார்கள் கருதினர். 5 முறை சுழற்றும் போதும் 6 மேல் சுழற்றும் போதும் இவை தனது துவக்கப் புள்ளியை அடைவதில்லை எனவே அவை படிகங்களாக இருப்பதில்லை. ஆனால், Dan Shechtman 5 முறை சுழற்றும் போதும் இவை தனது நிலையிலிருந்து மாறுவதில்லை மாறாக இவை ஏறத்தாழ படிகங்களாகவே உள்ளன என 1982 ஆம் ஆண்டு தனது ஆய்வில் தெரிவித்தார். இது காலங்காலமாக பின்பற்றிய நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானது என்று அவரைத் தனது பல்கலைக் கழகம் வேலையிலிருந்து நீக்கியது. அவர் ஒரு அறிவியலாளர் அல்ல என்று ஒதுக்கி வைக்கப்பட்டார். 12 ஆண்டுகள் கழித்து அவரின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு இன்று நோபல் பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரின் எழுச்சிமிக்க உரையும் அதனை அவர் முடித்தவுடன் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட விடாமல் பத்து நிமிடம் கைகளைத்தட்டியதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


அவரின் உரை ஊப்சலா பல்கலைக்கழகத்தில் நடந்தது.


_________________________________________________________________________________________________________ 


இளையராஜாவின் மயக்கும் இசையில் வெளியான இந்தப் பாடல் எப்போது கேட்டாலும் ஒரு மந்தகாசம் தொற்றிக் கொள்ளும்....


_________________________________________________________________________________________________________ 21 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -5

தொடர்வண்டி லீட்ஸ்லிருந்து யார்க் நோக்கிப் புறப்பட்டது, எனக்கும் பசிக்க ஆரம்பித்தது. மனைவி கொடுத்த புளிச்சாதத்தை கொஞ்சம் தயக்கத்துடன் தான் பிரித்தேன். எனக்கு நேரெதிர் இருக்கையில் இருந்த ஒரு பெண் சட்டெனத் திரும்பி வேறு பார்த்து என் வயிற்றில் புளி கரைத்தார். நான் கொஞ்சம் அவசர அவசரமாகத் தான் சாப்பிட்டு முடித்தேன். என்னை கொஞ்சம் ஆசுவாசிப் படுத்திக் கொள்ள சாப்பிட்டு முடித்து விட்டு பெட்டியை விட்டு கொஞ்சம் வெளியே வந்து காலாற நின்றுவிட்டு மீண்டும் என் இருக்கையில் சென்று என்னைப் பொருத்திக் கொண்டேன். தொடர்வண்டி வேகமெடுத்துச் சென்று கொண்டிருந்தது. வெளியே ஒரே கும்மிருட்டாய் வானம் இன்டிபென்டன்ஸ் டே படத்தில் வருவது போன்று குடைபிடித்திருந்தது. மெல்லச் சாரல் ஒரீரு துளியாய் என் ஜன்னலெங்கும் பட்டுத் தெரித்தவண்ணமாய் காற்றின் உந்துதலைப் புறந்தள்ள முடியாமல் வேகமாய் பின்னோக்கி விந்துக் கூட்டங்களைப் போல என் பின்னால் சென்று மறைந்தது. அந்த மழைத்துளியின் வீரியமும் காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்தது போல ஒரு பிரமிப்பை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்ட தொடர்வண்டி கொடுத்த வேளையில் கண்ணாடி ஜன்னல் முழுதும் யாரோ கல்லைக் கொண்டு எறிந்தது போல சடச்சட என சத்தம். ஆலங்கட்டி மழை பெரிய பெரிய பனிக் குண்டுகளாய் எங்கும் பொழிய ஆரம்பித்திருந்தது. நான் மெய்மறந்து அதனை ரசிக்கலானேன். இந்தச் சூழல் சற்று நேரம் தான் பின்னர் மழையும் பனியும் கலந்த கலவையாய் சிறிது நேரமும் பின்னர் மழைமட்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது. ஆலங்கட்டி மழை எப்படித் தோன்றுகிறது ?.பனிக்கட்டி மழை அல்லது சிறுசிறு பனிக்கட்டிகளாய் பொழிவது ஆலங்கட்டி மழை. இது சாதாரணமாக அதிக வெப்பமும் கொஞ்சம் குளிரும் இருக்கும் பகுதிகளில் நிகழும். நிலப்பரப்பில் இருக்கும் அதிக வெப்பத்தால் (15-25டிகிரி) ஈரப்பதமான  காற்றின் லேசான தன்மை அதனை மேல்நோக்கிச் செலுத்துகிறது. இந்தக் காற்றானது மேலே செல்லும் போது கிட்டத்தட்ட உறைநிலைக்குச் செல்கிறது. அப்படி உறை நிலையை அடையும் ஈரப்பதமான காற்றானது பனிக்கட்டிகளாய் மாறி கீழ் நோக்கி வரும் போது மேலும் ஈரப்பதத்தின் தன்மை கொண்டு பெரிய பனிக்கட்டிகளாய் பொழிகிறது. சென்ற வாரம் முழுதும் அடித்த வெயிலும் இந்த ஆலங்கட்டி மழைப் பொழிவிற்குக் காரணம். இதுவரை விழுந்த ஆலங்கட்டி மழைகளிலேயே 2010-ம் ஆண்டு ஜுலை மாதம் 23-ம் தேதி அமெரிக்காவின் விவியன் என்னுமிடத்தில் (Vivian, South Dakota) 20 செ.மீ விட்டமும் 0.88கிலோ கிராம் எடையும் கொண்ட பனிக்கட்டி விழுந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஆலங்கட்டி மழையால் ஏற்படும் பயிர் சேதத்தை அறிவுறுத்த கிருத்துவப் பேராலயங்களின் மணிகளை அடித்து மக்களை எச்சரித்துள்ளனர். 
 

தொடர்வண்டி மெல்ல யார்க் (York) நிலையத்திற்குள் நுழைந்தது. யார்க் நகரம் ஓஸ் மற்றும் ஃபோஸ் நதிகள் (Rivers Ouse and Foss) சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் சுவர் நகரம். வடக்கின் தலைநகரம் என்று இங்கிலாந்தில் அறியப்பட்ட நகரம். இதுவும் கூட யார்க்ஸயரில் இருக்கும் நகரம். யார்க் தொடர்வண்டி நிலையம் 1839 முதல் செயல்படுகிறது. லண்டனிலிருந்து எடின்பரா செல்லும் தொடர்வண்டிகள் நிச்சயம் நின்று செல்லும் வடகிழக்கு தொடர்வண்டி மண்டலத்தின் தலைநகரம்.மிகப் பிரமாண்டமான நான்கு கம்பளிப் பூச்சிகளை வரிசையாக நிற்க வைத்தது போன்ற இரும்புக் மேற்கூரை நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பது மட்டும். நடைமேடைகளுக்குச் செல்லும் இணைப்புப் பாலம் கூட கொஞ்சம் வேறுபட்டுத் தான் இருக்கும். இதற்குக் காரணம் முதலில் இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு பின்னர் மேற்கூரை அமைக்கப்பட்டது தான். இங்கு காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது தான் லண்டன் முதல் ஸ்காட்லாந்தின் இறுதி வரை உள்ள தொடர்வண்டிப் பாதை. இந்த நகரம் வேலைவாய்ப்பில் 90% தன்னிறைவை அடைந்த நகரம். அதிகம் வெளிநாட்டினரை ஈர்க்கும் பிரிட்டனின் நகரங்களில் 13வது இடத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த ஊர் சாக்லெட்டுகள் மிகவும் பிரபலம். நாம் சாப்பிடும் பெரும்பாலான பிரசித்தி பெற்ற சாக்லெட்களின் தலைநகராய் இருந்தது.இப்போது அவற்றில் பெரும்பாலனவை மூடப்பட்டு விட்டன.எப்போதும் யார்க் வழியாகச் செல்லும் தொடர்வண்டிகள் சிறிது நேரம் நின்று தான் செல்லும், இன்றும் அது போலத்தான். இந்த நிலையத்திற்குப் பின்னர் தொடர்வண்டி டார்லிங்டன் மற்றும் டர்காம் நிலையங்களில் தான் நிற்கும். யார்க்கிற்கும் டார்லிங்டன்னுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புகள் பெரும்பான்மை சமதளமாக எங்கெங்கும் பச்சைப் போர்வை போர்த்தியது போன்று அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இப்போது தொடர்வண்டி மெல்ல யார்க் நிலையத்திலிருந்து புறப்பட்டு டார்லிங்டன் நோக்கிச் செல்லத்தொடங்கியது...

20 April 2012

கோவை நினைவுகள் -10

கொங்கு நாடு கல்லூரி மற்றும் அதனைச் சுற்றி இருந்த பகுதிகள் என் கண்முன்னால் வெகு வேகமாக வளர்ச்சி பெற்றது. நான் 1997-2006 வரை அங்கு தான் படித்தேன். முதலில் மாரியம்மன் கோவில், பார்த்திபன் மருத்துவமனை, மகாலட்சுமி பேக்கரி, ஞானாம்பிகை மில் இவற்றைத் தவிர பெரிய கட்டிடங்கள் என்று எதுவும் இல்லை. நல்ல சாப்பாடு சாப்பிடக்கூட ஐ.டி.ஐ பகுதிக்கு அல்லது டவுனுக்குத் தான் செல்ல வேண்டும். இன்று நீங்கள் ஒரு சென்ட் காலி மனை கூட அந்தப் பகுதியில் இல்லை. எனக்குத் தெரிந்து சோளக் காடாக இருந்த நிலங்கள் இன்று கான்கிரிட் காடாக மாறிவிட்டது. கட்டடங்களை விளைவிப்பதால் யாருக்கு என்ன பயன் ? எல்லாமே மாற்றங்களைச் சந்தித்தது, சந்தித்துக் கொண்டு இருக்கிறது. பார்த்திபன் மருத்துவமனை தவிர வேறு மருத்துவமனை அந்தப் பகுதியில் வேறு மருத்துவமனை இல்லை இன்று அப்படி இல்லை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஞானாம்பிகை மில்ஸ் இன்று அமைதியாக எங்கிருந்தோ வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு அதுவும் முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்டு இயங்குகிறது. எப்போதும் அமைதியாக நீண்ட கதவுகள் சாத்தப்பட்டு, பெண்களுடன் பேசினாலே ஓடஓட விரட்டப்பட்ட காலம் மலையேறி எப்போதும் கதவுகள் திறக்கப்பட்டு, மலையாளக் கரையோரப் பெண்களின் தாயகமாய் மாறிப் போய்விட்டது. இப்போது நல்ல மெஸ் எல்லாம் ஓரளவு அந்தப் பகுதியில் தான் இருக்கிறது. எந்த மேட்டுப்பாளையம் பேருந்தும் நிறுத்த மாட்டார்கள் அப்போது எல்லாம். இதற்காகவே நான்கு ஐந்து பேருடன் பேருந்தை வழிமறிப்போம் ஒருவர் செல்லுவதற்கு. இன்றய நிலையில் வாகனங்களில் நெரிசலில் அந்தப் பகுதியே அல்லல் படும். இந்த சமுதாய மாற்றம் என்பது ஏதோ ஞானாம்பிகை மில் பகுதியில் மட்டும் நிகழவில்லை, ஒட்டுமொத்த தமிழகமும் இந்தப் போக்குத் தான். மக்கள் வீட்டில் இருப்பதைக் குறைத்துக் கொண்டு வீதிகளில் அதிகம் நேரம் செலவிடத் தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். நான் படிக்கும் காலங்களில் புடவை அணிந்த பெண்கள் அதிகம் என் கல்லூரியில் படித்தார்கள். இன்று அப்படி யாரையும் நீங்கள் பார்த்துவிடவே முடியாது. எல்லாமும் மாறிப் போனது. ஒரு அச்சு அசல் கிராமத்தானாய் கோவைக்குள் வந்த நானே இவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறேன். என் கல்லூரி காலங்களில் எனக்கு என் துறை சார்ந்து அறிமுகமாகி இன்று என் குடும்ப உறுப்பினர் ஆகிப் போனவர் என் அண்ணா முத்துக்குமார். அவரின்றி என்னில் எதுவும் நிகழ்வதில்லை. என்னில் என் தந்தை ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு சற்றும் குறைவில்லா தாக்கத்தை ஏற்படுத்தியவர். என்னைப் பல வழிகளில் ஆற்றுப் படுத்தியவர். அவரின்றி நான் இன்று இல்லை. முதுகலைப் படிப்பின் போது அறிமுகமானார். ஆய்வின் போது மிகமிகச் சாதாரணமாகத் தான் தொடங்கியது எங்களின் நட்பு. மாலை நேரங்களில் அளவளாடும் போது மெல்ல மெல்ல நட்பாகி பின் காதலாகி கசிந்துருக ஆரம்பித்தது. அவரைப் பிரிந்திருந்த நாட்களில் எல்லாம் ஏதோ இழந்த ஒரு உணர்வு வந்து ஆட்கொள்ளும். ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணாவின் வீட்டில் கூடச் சொல்லுவார்கள் ' கூடவே சுத்துறியே செவ்வாழ' என்கிற தொனியில் கிண்டல் பன்னுவார்கள். என் ஆய்வில் எனக்கு என்ன எல்லாம் தெரியுமோ அது முழுவதும் அவருக்கும் தெரியும். அவர் சரி என்று சொல்லிவிட்டால் எனக்கு இரண்டாம் சிந்தனை என்று ஒன்று வந்ததே இல்லை. படிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர் இல்லை மோகம் கொண்டவர். சரியான திசைகாட்டி இன்றி தடுமாறும் ஓடம் போல என்னவெல்லாமோ படித்தார், முதலில் இளங்கலை கணிதம், பின் இளங்கலை தமிழ் என்று இலக்கற்ற அம்பு போல. பின்னர் என் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் முதுகலைத் தமிழ் படிப்பது என்று முடிவு செய்தார். தனது குடும்பத்தின் ஆபத்பாந்தவன் அவர், எந்த ஒரு சிக்கலும், இல்லை பிரச்சனையும் இவரிடம் தான் முதலில் வரும். இவரும் ஊருக்கு உழைக்கும் உத்தமர் போல செயலில் இறங்கி ஊணுறக்கம் மறந்து அவர்களின் துன்பம் தனது போல கண்துஞ்சாமல் காரியமாற்றச் சென்றுவிடுவார். தனக்காக அவர் செலவிட்ட நேரங்கள் மிகவும் குறைவு இன்றும் கூட அது தான் தொடர்கிறது. முதுகலைத் தமிழ் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் முடித்தார். பின்னர் என் சாத்தான் வேலையை அவரிடம் காட்டி உடனே அவரை ஆய்வில் சேருமாறு தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தேன். அவருக்கு முதலில் தயக்கம் அதிகமாகி பின்னர் ஒருவழியாக 'சரி வேணும்னா நான் M.Phil பண்ணுறேன்' என்றார். 

நானும் என் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் காலத்தை எட்டியிருந்தேன். எனக்கோ அவசரம் நான் இங்கிருந்து சென்றுவிட்டால் அவர் முனைவர் ஆய்விற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார் என்கிற சந்தேகம் வேறு. அதனால் நான் M.Phil வேண்டாம் முனைவர் ஆய்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றேன். அவர் எப்போதும் போல 'M.Phil பண்ணுறதுன்னா சரி, இல்லைன்னா என்ன விடு' என்றார் தெளிவாக. சரி வந்த வரை லாபம் என்று போய் M.Phil சேர்ந்தோம். ஆம் சேர்ந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த M.Phil ஆய்வு என் ஆய்விலும் பலப்பல மாற்றங்களைத் தரப் போகிறது என்கிற உண்மை தெரியாமல் பம்பரமாய் காரியமாற்றினோம். நான் செய்யும் ஆய்வு இயற்பியல் சார்ந்தது, அவரின் ஆய்வு தமிழ் சார்ந்தது. இவை எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு படும், எப்படி அடிப்படையில் ஒன்றாகும். அவரின் ஆய்வுகள் என் ஆய்வுகளை எப்படிப் பாதிக்கும். இவற்றுக் கெல்லாம் ஒரு தனிப் பதிவு தான் எழுத வேண்டும். அவரின் நெறியாளர் அவருக்கு அளித்த தலைப்பு 'அம்மன் ஊஞ்சல் பாடல்கள்'. எங்களை கோவில் கோவிலாக அலைய வைத்த தலைப்பு. கோவை அம்மன் கோவில்கள் நிறைந்த நகரம். வேறு நகரங்களில் இது போன்று இல்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையில் இப்படி இல்லை வேறு நகரங்களைப் பொறுத்தவரையில் எனக்குத் தெளிவான அறிவில்லை. ஆனால் கோவையில் பெரிதும் சிறிதுமாக அம்மன் கோவில்கள் நிறைந்திருக்கும். பெரும்பாலானவை மண்ணின் தெய்வங்கள், முறைப்படுத்தப் பட்ட பெருந்தெய்வங்களில் இருந்து முற்றிலும் விலகி முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களால் கொண்டாடப் படும் தெய்வங்கள். எங்களுக்கு கோவில் என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்து ஒட்டிக் கொள்ளும். குடும்ப நண்பர்கள் சேர்ந்தால் மட்டுமே கோவில் செல்வது இல்லை எனில் குடும்ப நச்சரிப்புக்காகச் செல்வது என்கிற எழுதப்படாத விதியிலிருந்து விலக்காக ஆடிமாதம் முழுக்க கோவில் செல்ல ஆரம்பித்தோம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறிப்பாக ஆடி மாதங்களில் அம்மனை ஊஞ்சலில் இருத்திப் பாடல்கள் பாடுவார்கள் இதனைப் பதிவு செய்வது அதன் நுணுக்கங்களை ஆய்வது என்பது தான் ஆய்வின் கருப்பொருள். நாங்கள் நினைத்தது போல எளிதாக அமையவில்லை. எல்லாக் கோவில்களுக்கும் செல்ல முடியாது என்பதனால் வெள்ளைக் கிணற்றில் உள்ள குலதெய்வக் கோவில்கள் மட்டும் இலக்காகக் கொண்டோம். ஆனால் அங்கு பாடப்பட்ட பாடல்களில் பல சினிமா மெட்டில் பாடப்பட்ட பாடல்களாகவே இருந்தன. ஒன்றிரண்டு அசலான பாடல்கள் வந்து விழுந்த ஆட்களை எல்லாம் தெரிந்தெடுத்து தனியாக பேட்டி கண்டு என்று மிகவும் மெனக்கட்டு பாடல்கள் சேகரித்தோம். சேகரித்த பாடல்களை நான் எழுதுவேன் அண்ணா பிழை திருத்தி சரிசெய்வார். இதனுடன் கோவில்களின் வரலாறுகளையும் சேகரித்து அதன் கதைகளில் எவை சரியான கதை எவை கட்டுக் கதை எனத் தரம் பிரித்து என்று ஒரு வழியாக ஆய்வேட்டை நிறைவு செய்தோம். தினமும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கும் ஆய்வேடு எழுதும் போதெல்லாம். நான் இவற்றை நீக்கிவிடலாம் என்பேன் அவர் இல்லை இருக்கட்டும் இது சரியாக இருக்கிறது என்பார். இறுதியில் முட்டிக்கொள்ளும் இருவருக்கும். சில மணித்துளிகள் மௌனத்தில் கரையும் பின்னர் மீண்டும் காரசார விவாதம் நடக்கும். எப்படியோ ஒருவழியாய் ஆய்வேடு நிறைவு பெற்றது. ஆனாலும் எங்களுக்கு முழுத்திருப்தி வரவில்லை. 

இடைப்பட்ட காலங்களில் எங்களின் இலக்கிய அறிவையும் சமூக அக்கறையையும் கூர் தீட்ட 'தமிழோசை' என்கிற சிற்றிதழ் வேறு நடத்தத் தொடங்கி இருந்தோம். எண்ணற்ற சிற்றிதழ்களுக்கு மத்தியில் ஒரு கலங்கரை விளக்காய் திகழவேண்டும் என்கிற ஒரு உயரிய சிந்தனையில் பல்வேறு தடைகள், மறைமுக எதிர்ப்புகள் தாண்டி ஆரம்பிக்கப் பட்டது தான் 'தமிழோசை'. சிறப்பான கட்டுரைகள், சிந்தனைவாதிகளின் நேர்காணல் என்று ஒரு சரியான கலவையாய் எங்களின் தமிழோசை ஜெயகாந்தன் அவர்களால் முதன்முதலில் விஜயா பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது. நான் கவிஞனாக கட்டுரையாளனாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள, அண்ணா அனைத்துப் பொறுப்பும் சுமந்து ஆசிரியராய் இருந்தார். நான் பெரும் தளபதியாய் அவருக்குத் துணை நின்றேன். இந்தத் தருண‌த்தில் தான் நாட்டார் வழக்காற்றியலின் பிதாமகன் முனைவர்.லூர்து ஐயா அவர்களைச் சந்திக்கும் பெரு வாய்ப்புக் கிடைத்தது. சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் அவரின் குடும்பத்தில் ஒருவராய் ஆகிப் போகும் வாய்ப்பு எங்களுக்கு வாய்த்தது. கோவை ஞானி ஐயா, லூர்து ஐயா என்று இரு பெரும் இமையங்களில் ஒரே நேரத்தில் சஞ்சரிக்கும் பெரும் பேறு பெற்றோம் இருவரும். எங்களின் ஆய்வில் இவர்களின் நேரடியான தொடர்பு என்பது கிஞ்சித்தும் இல்லை. ஆனால், அவர்களின் ஆளுமை எங்களின் ஆய்வில் ஒரு பாரிய மாற்றத்தைக் கொணர்ந்தது. குறிப்பாக என் ஆய்வில் அதுவரை எனக்கு ஒரு தெளிவில்லை.ஏதோ ஆய்வேட்டைச் சமர்ப்பித்து விட்டு ஒரு நல்ல பணம் காய்க்கும் வேலை வாங்கிவிட்டால் என் பிறவிப் பலன் அடைந்த ஒரு பேறு அடைந்து விடுவேன் என்கிற மனோநிலை முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்ட தருணங்கள் அவை தான். ஒரு சரியான ஆய்வு இந்தச் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தினை மாற்றி அமைத்து விடும் என்கிற பெரும் நம்பிக்கை எனக்குள் விதைக்கப்பட்டதும் அப்போது தான்.

லூர்து ஐயா அவர்கள் அறிமுகம் செய்த மானுடவியல் நூல் ஒன்று எங்களின் ஆய்வின் மொத்த வடிவத்தினையும் புரட்டிப் போட்டது. அந்த நூலினை முழுதும் கரைத்துக் குடித்து அதன் சாரம்சங்களை உள்வாங்கி எங்களின் ஆய்வின் முடிவினை மறுபடியும் எழுதினோம். நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்காத அளவிற்கு நாட்டார் வழக்காற்றின் ஒரு கூறினை முழுவதும் சமூகமானுடவியல் நோக்கில் மிகச் சரியான அளவில் தொகுக்கப்பட்ட ஒரு படைப்பாக வந்தது. அண்ணாவிற்கு மிகச் சிறந்த மரியாதையை தமிழறிஞர்கள் மத்தியில் தேடித்தந்தது. முத்தாய்ப்பாக அவருக்கு முனைவர் பட்ட ஆய்விற்கான முனைப்பினையும், அதற்கான வாய்ப்பினையும் வழங்கியது. நான் தான் அவரின் இரு வாய் மொழித்தேர்விற்கும் அருகிருக்கும் வாய்ப்பினை இழந்தேன். என் ஆய்வேடும் அங்கீகரிக்கப்பட்டு என் வாய் மொழித்தேர்வு முடிந்து என் ஆய்வினை தென்கொரியாவில் தொடர்வதற்காகச் செல்லவேண்டிய நாளும் வந்தது. எனக்குத் திருமணத்திற்கு பெண்பார்த்து திருமணம் முடிப்பதையும், ஊரில் எங்களின் வீடு கட்ட வேண்டிய பொறுப்பும் வழக்கம் போல அண்ணாவின் தலையில் விழுந்தது. நானும் அவரைப் பிரியும் நாள் சடுதியில் வந்து தொலைத்தது. தென்கொரியா செல்ல நானும், சென்னை வரை வழியனுப்ப என்னுடன் அவரும் என்று இருவரும் தொடர்வண்டியில் சென்னை சென்று பிறகு நான் கொரியாவிற்குப் பயணமானேன். வானூர்தியில் அமரும் வரை எனக்கு எதுவும் தெரியவில்லை வானூர்தி பறக்கத் தொடங்கும் போது துக்கம் என் நெஞ்சை அடைத்தது. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு ஒரே அங்கலாய்ப்பாய் இருந்தது. அவரின் முனைவர் ஆய்விற்கு உடனிருக்க முடியாமை இன்றும் கூட என்னைத் துக்கத்தில் ஆழ்த்தும். நான் அவருக்கு ஆறுதலாக ஒருபோதும் இருந்ததில்லை ஆனால் கூடவே இணைபிரியாமல் தோளோடு தோள் தொங்கி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னை வடிவமைத்ததில் எவரையும் விட அவரின் பங்கு மிக மிக அதிகம். அவர் செய்யலாம் என்றால் எனக்கு மலையையும் புரட்டிவிடும் திண்மை வந்து சேர்ந்துவிடும் மாயம் நானறியேன். 

14 April 2012

கற்றது கைமண் அளவு - 14/04/2012


ஏன் டைட்டானிக் ?


File:RMS Titanic 1.jpg

இதே நாள் 100 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் நூற்றாண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் பிரிட்டனிலிருந்து டைட்டனிக் போலவே ஒரு பிரமாண்டக் கப்பல் கிளம்பிச் சென்றது சென்றவாரம். கடந்த நூறு வருடங்களில் சமுத்திர வழிப் பயணங்கள் மிகவும் நவீனத்துவம் பெற்றுள்ளன. அதே அளவு விபத்துக்களும் நேர்ந்துள்ளன என்பதும் தான் எதார்த்தம். ஆனால் டைட்டானிக் கப்பலின் விபத்துக்கு மட்டும் அப்படி ஒரு வரவேற்பு (வரவேற்பு என்பது சரியான வார்த்தை இல்லை தான் என்றாலும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்). 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ந்தேதி உலகின் மிகவும் பிரமாண்டமான (அப்போதைக்கு) சொகுசுக் கப்பல் பிரிட்டனிலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டு வழியில் பனிப்பாறையில் மோதி அதில் பயணம் செய்த 1523 பேர் உயிரிழந்தனர். இது கடந்த நூறு வருடங்களில் நிகழ்ந்த மிகவும் கோரமான விபத்து தான். ஆனால், இது தான் உலகின் மிகப் பெரிய கப்பல் விபத்தா என்றால் அது தான் இல்லை. இதற்குப் பின் இதனை விட கொடூரமான, அதிக அளவு உயிர்களைக் காவு வாங்கிய பல்வேறு விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன (http://en.wikipedia.org/wiki/List_of_maritime_disasters). ஆனால் டைட்டானிக் போல புகழ் பெறவோ இல்லை முக்கியத்துவம் பெறவோ இயலவில்லை. இதன் எல்லாக் கொண்டாட்டங்களும் வியாபார நோக்கத்தினை உள்ளடக்கியது.

Cruise Map

டைட்டானிக்கின் பாரம்பரியம் என்பது அதன் விபத்துடன் முடிந்து விடவில்லை. திரைப்படங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், தனிப்பாடல்கள், ஆவணப்படங்கள், விவரணப் படங்கள் என்று நீண்டு இன்று அதே டைட்டானிக் சென்ற வழியில் ஒரு பயணத்தினையும் அதன் நேரடி ஒளிபரப்பும் கூட செய்யப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதன் மிக முக்கியக் காரணம் இதில் பயணம் செய்தவர்களில் 75% பேர் பெரும் செல்வந்தர்கள் அல்லது வாரிசுகள். இதனை ஒரு கொண்டாட்டமாகத்தான் மேற்கத்திய உலகம் பார்க்கிறது. இதன் மூலம் பெறப்படும் வருமானம் என்பது பல பில்லியன் பவுண்டுகள். ஏன் டைட்டானிக் விபத்து மட்டும் கிட்டத்தட்ட ஒரு கொண்டாட்டமாகவே பார்க்கப் படுகிறது. அதில் பயணம் செய்து இறந்தவர்கள் மட்டும் தான் மனிதர்களா என்ன ?. 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் (குறிப்பாக தாஜ் ஹோட்டலில்)எப்படி இந்தியா முழுவதும் நடந்த தாக்குதலாக வரித்துக் கொள்ளப்பட்டு பாக்கிஸ்தானுடன் இந்தியா கிரிக்ககெட் எல்லாம் விளையாடாது என்றெல்லாம் ஒரு மாயை ஏற்படுத்தப் பட்டதோ அது போலத்தான் இதுவும் என்று தோன்றுகிறது.

_________________________________________________________________________________________________________ 


ஏன் தமிழ்ப்புத்தாண்டு சித்திரையில் ?பத்து வருடங்களுக்கு முன்னால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை தமிழ்ப் புத்தாண்டு எது என்பதில். சித்திரையில் புத்தாண்டும், தையில் தமிழர் திருநாளும் என்று இருந்தது. இன்று ஒரே குழப்பம். சித்திரையில் புத்தாண்டு வேண்டாம் என்பவர்கள் யாருக்கும் சித்திரையின் மீது வெறுப்பில்லை ஜெயலலிதா மீது தான். (அதற்காக அவரும் உழவர்களுக்கு அறுசுவை உணவு, கருணாநிதிக்கு புளி வியாபாரி கதை என்றெல்லாம் ஓவராத் தான் அலட்டிகிறாரு). சித்திரையில் புத்தாண்டு அல்லது அதற்கு அருகாமையில் (கொஞ்சம் முன்னப்பின்ன) புத்தாண்டு கொண்டாடுபவர்கள் ஈரானியர்கள். நாம் ஆரியர்கள் என்று சொல்லுபவர்கள் கூட ஈரானியர்களாக இருப்பார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. இது நாள் வரை சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்று வாழ்த்துச் சொன்னவர்கள் எல்லோரும் இப்போது நிறுத்திக் கொண்டு வாழ்த்துச் சொல்பவர்களை ஏதோ எதிரி போல பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதை எப்படி உறுதி செய்தார்கள். என்ன மாதிரியான ஆய்வு அது எதுவும் விளங்கவில்லை. தமிழில் இப்போது மிக நுண்ணிய ஆய்வுகள் செய்யப் படுகின்றன. இருந்தாலும் இன்னும் அறிவியலின் துணை கொண்டும், வரலாற்றின் அகழ்வாய்வு துணை கொண்டும் இந்த ஆய்வுகள் செய்யப் படும் போது இன்னும் தூரம் தொடலாம் என்பது என் எண்ணம்.


இதனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள் http://kural.blogspot.co.uk/2012/04/blog-post.html

நாளை தென்கொரியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவார்கள் நண்பர்கள். என் இனிய இளவல் முனைவர் சுதாகர் இதற்கான தாயாரிப்புகளில் முனைப்புடன் இருப்பார். இந்த நிகழ்வினைக் காண விரும்புவர்கள் இதனைச் சுட்டிப் பார்க்கலாம். http://www.ustream.tv/channel/tny2012. இது நேரடி ஒளிபரப்பு. இதன் முழு காணொளி விரைவில் இங்கே தருகிறேன். 
_________________________________________________________________________________________________________ 
ஏன் இந்த வெறி ?

சென்ற வாரம் நிகழ்ந்த பூகம்பம் அதனைத் தொடர்ந்த சுனாமி எச்சரிக்கை எல்லாம் அதிகம் கலக்கத்தைக் கொடுத்தது. பெரிய அசம்பாவங்கள் நிகழவில்லை என்றவுடன் நிம்மதியாக இருந்தது. இயற்கையின் நிகழ்வுகளை நம்மால் அறிந்து அல்லது கணித்து எச்சரிக்கத்தான் முடியும். தினமலர் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள் என்ன ஒரு வெறி இருக்க வேண்டும் இவர்களுக்கு. 
_________________________________________________________________________________________________________ 

ஏன் இப்படி ?

(ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரை)

ருந்துக் கம்பெனிகள் புதிதாகக் கண்டுபிடிக்கும் மருந்து களை, முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதியான பிறகு மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். எவ்வித மான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதியான பிறகே, அந்த மருந்துகள் விற்பனைக்கு வரும். 
இந்த நடைமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, சட்ட விரோதமாக நேரடியாகவே மனிதர்களுக்கு மருந்துகளைக் கொடுத்துப் பரிசோதிப்பது, உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. அப்படிப் பட்ட நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நம் இந்தியா என்பதுதான் அதிர்ச்சி.
'புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், 2009-ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இறந்துவிட்டனர். இது போன்ற சட்ட விரோதப் பரிசோதனையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஸ்வாஸ்த்ய அதிகார் மஞ்ச் என்ற பொது நல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுதான் அகில இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா மற்றும் ஹெச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் மக்களைச் சாகடிப்பது கூடாது. இதைத் தடுக்கும் வகை யில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உரிய பதிலைத் தெரிவிக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மக்கள் நலவாழ்வு இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் ராகல் கைதோன்டி,
'நோயாளி யின் அனுமதி பெற்ற பின்னரே பரிசோதனையைத் தொடங்க வேண்டும். அந்தப் பரிசோதனை குறித்த முழு விவரங்களையும் நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண் டும். மருந்தினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்பட்டால், அதற்கு மருந்துக் கம்பெனியே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும். ஆனால், பெரும்பாலான மருந்துக் கம்பெனிகள் இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை.

முன்பெல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே இந்தப் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. தற்போது அங்குள்ள மக்கள் விழிப்பு உணர்வு பெற்றுவிட்டனர். ஏன், எதற்கு என கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். மக்களிடம் விஷயத்தைச் சொல்லி பரிசோதனை செய்யும்போது, இழப்பீடு, இன்ஷூரன்ஸ் போன்ற செலவுகள் அதிகரிக்கின்றன. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை நோக்கி, மருந்துக் கம்பெனிகளின் பார்வை திரும்பி இருக்கிறது. பணத்துக்கு ஆசைப்படும் ஒருசில மருத்துவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு தங்கள் சோதனையை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன.
'புதிதாக ஒரு மருந்து வந்திருக்கிறது. இலவசமாகவே உங்களுக்குத் தருகிறோம்’ என்று ஆசை காட்டி நோயாளிகளை மயக்கிவிடுகின்றனர் மருத்துவர்கள். அந்த மருந்துகளால் நாளடைவில் பக்க விளை வுகள் ஏற்படும்போது, வேறு பொய்யான காரணங்களைக் கூறிவிடுகின்றனர்.
2006 - 2011 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4,066 பரிசோதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளில் 2,163 பேர் இறந்துள்ளதாகக் கணக்குக் காட்டு கிறார்கள். இவர்களில் 22 பேருக்கு மட்டுமே இதுவரை இழப்பீடு கிடைத்துள்ளது. விதிகளைப் பின்பற்றி செய்யப்படும் பரிசோதனைகளிலேயே இவ்வளவு பாதிப்பு என்றால், சட்டவிரோதமாகச் செய்யப்படும் பரிசோதனைகளில் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும்?'' என்று கேள்வி எழுப்பியவர், மக்கள் விழிப்பு உணர்வுடன் செயல்படுவதற்காக சில ஆலோசனைகளையும் சொல்கிறார்.
''கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை நம்பிக் கொண்டு, அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவதை மக்கள் நிறுத்த வேண்டும். என்ன மருந்து, மாத்திரை கொடுக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. எனவே, என்ன மருந்து, எதற்கு உரியது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வெறும் மாத்திரையை மட்டும் உங்களிடம் கொடுத்துவிட்டு மருந்து அட்டையை அவரே வைத்துக்கொண்டால், புது மருந்து பரிசோதனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது... எச்சரிக்கையாக இருங்கள்'' என்கிறார்.
தற்போது தமிழ்நாட்டில் 176 புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்காகப் பதிவு செய்து இருக்கிறார் களாம். இது தவிர, சட்டவிரோதமாகப் பல பரிசோதனைகள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் பரிசோதனை எலியாக மாறி விடாதீர்கள், ஜாக்கிரதை!

(நன்றி:ஜுனியர் விகடன்)
_________________________________________________________________________________________________________ 

இந்த வார விவரணப் படம் சென்ற வாரத் தொடர்ச்சி.....

_________________________________________________________________________________________________________ 11 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -4


செஸ்டர்ஃபீல்டு நிலையத்தில் வண்டி நிற்கவும், அளவுக்கு அதிகமானவர்கள் ஏறினார்கள். நான் பயணம் செய்த பெட்டி மனிதர்களால் நிறையத் தொடங்கியது. ஒருவர் என்னருகில் வந்து இது என் இருக்கை என்று என்னோடு மல்லுக்கு நின்றார். நான் இருந்த இருக்கை எண் F13.

நான் ' உங்களின் இருக்கை எண் என்ன?'

அவர் '13 தான். நீங்கள் என் இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறீர்கள்'

'இல்லை. இது என் முன்பதிவு இருக்கை, உங்களின் பயணச்சீட்டை சரிபாருங்கள்'

'நான் தவறு செய்வதில்லை. இது என் முன்பதிவு இருக்கை. தயவு செய்து எழுந்திருங்கள்' மிகவும் உறுதியாகச் சொன்னார்.

நான் என் பயணச் சீட்டை அவரிடம் காண்பித்தேன். என்னிடம் வாக்குவாதம் செய்தவர் கொஞ்சம் வயதானவர் வேறு. எனக்கு இருக்கை மாறி பயணம் செய்வதில் ஒன்றும் சிரமம் இல்லை தான். ஆனால் எங்களின் வாக்குவாதத்திற்கு இடையே அந்தப் பெட்டி முழுவதும் நிரம்பி விட்டிருந்தது. மேலும் என் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பெட்டி பெட்டியாகச் செல்வது என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

ஒருவழியாக நான் என் குரலை உயர்த்த எத்தனித்து அவரிடம் ' உங்களின் பயணச்சீட்டை நான் பார்க்கலாமா' என்றேன். அவர் 'கண்டிப்பாக' என்று தனது பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார். 

  
இதற்குள் தொடர்வண்டி நகர ஆரம்பித்திருந்தது. அவரின் முன்பதிவு இருக்கை C13. அவர் தவறாகப் புரிந்து கொண்டு என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனக்கு கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. அவர் என்னருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டு 'மன்னிக்கவும், நான் இங்கே அமர்ந்து இருந்து விட்டு அடுத்த நிலையம் வரும்போது மாறிக் கொள்ளவா ?' என்றார். நானும் ' மிக்க மகிழ்ச்சி, எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை' என்றேன்.

பின்னர் சிநேகமாக ' நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' என்றார். நான் என் வரலாற்றை அவருக்குச் சுருக்கக் குறிப்பு வரைந்தேன். அவரைப் பற்றி நான் கேட்காமலே சொல்ல ஆரம்பித்தார். தன் வரலாறு சொல்ல ஆரம்பித்த‌ ஸ்டுவர்ட்க்கு வயது 68, தற்போது ஸ்காட்லாந்தில் வசிக்கும் அவர் ஒரு மீனவர் என்பதும் ஏதோ ஒரு வேலை நிமித்தம் அவர் செஸ்டர்ஃபீல்ட் வந்திருக்கிறார் என்பதும் தெரிந்து கொண்டேன். அவரின் வயதை என்னால் 68 என்று நம்ப முடியவில்லை. நல்ல திடகாத்திரமான உடம்பு. அவரின் கை குழுக்கலில் இருந்த உறுதி என்பன எல்லாம் என்னை அசர வைத்தன. பின்னர் மீன் பற்றிய பேச்சு வந்தது. நான் அவரின் மீன் பிடிக்கும் தொழில் பற்றிக் கேட்டேன். அவரின் கூட்டுறவு மீன் பிடிக்கும் முறை பற்றிச் சொன்னார். அவர்கள் பிடிக்கும் மீன்களை நேரடியாக மக்களிடமே அன்றாடம் விற்கிறார்கள். இடைத்தரகர்கள் யாரும் அல்லாமல். மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருவதாகவும் சொன்னார். என் ஆய்வு பற்றியும் பேச்சுத் திரும்பியது. நான் என் ஆய்வு பற்றியும் அதன் சமூக அக்கறை பற்றியும் சொல்லி முடித்தேன். அதற்குள் ஸெஃபீல்ட் தொடர்வண்டி நிலையம் வந்திருந்தது. ஸ்டுவர்ட்டும் என்னிடம் விடைபெற்று தன் பெட்டிக்குச் செல்வதாகவும் அது ஜன்னலோர இருக்கை என்பதால் செல்வதாகவும் கூறினார். மேலும் அவரின் பெரிய உருவத்தை அந்த இருக்கையில் இருத்த முடியாமல் சிரமப் பட்டார். அவரின் முன்பதிவு இருக்கை வயதானவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த இருக்கைகள் கொஞ்சம் அகலமாகவும், கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளும் வசதியுடனும் இருக்கும்.

 


ஸெஃபீல்டு (Sheffield) ஒரு அருமையான நகரம். யார்க்ஸயரில் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் கவுன்டிகளில் யார்க்ஸயர் தனித்துவம் வாய்ந்தது. பழமையும் புதுமையும் மிகச்சரியான கலவையான இந்த நகரம் ஸெஃப் நதிக்கரையில் ( River Sheaf) அமைந்துள்ளது. இரண்டு மூன்று முறை என் நண்பருடன் வந்துள்ளேன். ஒரு முறை நண்பரின் நண்பரைப் பார்க்கவும் மறு முறை இங்குள்ள மீடொஹாலில் (Meadow Hall) எனக்கு கோட் (coat) எடுப்பதற்கும் வந்துள்ளேன். மூன்றாம் முறை விசித்திரமாக நானும் நண்பரும் யார்க்ஸயரின் லீட் (Leeds) நகரிலிருந்து வரும் போது புதிதாக ஒரு வழியில் லஃபரோ செல்லலாம் என்றெண்ணி எங்கெங்கோ அலைந்து கடைசியில் ஸெஃபீல்டு செல்வது என்று முடிவாகி அங்கிருந்து வழியை நாம் கண்டுபிடிக்கலாம் என்று சென்றோம். இது தவிர தொடர்வண்டி மாறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில், தொடர்வண்டி நிலையத்திற்கு சில முறை வந்திருக்கிறேன். மிகவும் அழகான நகரம்.

நானும் நண்பரும் எனக்கு கோட் (Coat) வாங்க அலையோ அலையென்று அலைந்து மீடொஹாலில் வாங்கியது நினைவிற்கு வந்தது. மிகவும் குறைந்த விலையில், நல்ல தரத்துடன், நல்ல பிராண்ட் என்று நான் அடுக்கிய கட்டுப்பாட்டுக்குள் வாங்க எவ்வளவு மெனக்கட வேண்டும் என்பது அன்று தான் பார்த்தேன். நாம் எப்போதாவது அணியும் இதற்கு எதற்கு யானை விலை கொடுக்க வேண்டும் என்று லெஸ்டரிலிருந்து ஸெஃபீல்டு வரை எங்களின் பயணம் ஒரு கோட் தேடி நீண்டது. நண்பர் என்னோடு கடைகளுக்கு வருவது என்றாலே ஏதோ சுனாமியைப் பார்த்தவர் போல ஓட ஆரம்பித்ததும் அன்றிலிருந்து தான். எங்காவது போகலாம் என்று கூப்பிட்டால் ஒரு பத்து முறையாவது கேட்பார் 'எங்கே போகப்போறோம், கடைக்கு இல்லை தானே' என்று. அன்றும் அப்படித்தான் 'இங்கே உன்னால எடுக்க முடியலைன்னா உனக்கு தனியா துணி எடுத்துதான் தைக்க வேண்டும்' என்று கூறித்தான் அழைத்துச் சென்றார். எனக்கு மட்டும் என்ன அவரை டார்ச்சர் பண்ண வேண்டும் என்ற வேண்டுதலா என்ன ? ஸெஃபீல்டுக்கு மதியம் ஒரு மணிக்குச் சென்று இரவு 10 மணிக்குத் தான் அங்கிருந்து கிளம்பினோம்.அதிலிருந்து நான் ஷாப்பிங் என்றாலே என்னைக் கண்டு ஓட ஆரம்பித்து விடுவார். இது மாதிரியான அனுபவங்கள் தான் ஸெஃபீல்டு பற்றி எனக்கு. மேலும் இங்கிலாந்தின் கண்கவர் நிலப்பரப்புகளைக் காண வேண்டும் எனில் நீங்கள் ஸெஃபீல்டிலிருந்து மான்ஸஸ்டருக்கு தொடர் வண்டியில் பென்னீஸ் (Sheffield to Manchester via the pennines) வழியாகச் செல்ல வேண்டும், நிச்சயம் இன்னொரு முறை பயணம் செய்யத் தூண்டும் தொடர்வண்டிப் பாதை அது. நான் இங்கு காரில் வந்திருக்கிறேன் என்றாலும் எனக்கு தொடர்வண்டிப் பயணம் தான் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மெல்ல தொடர்வண்டி தனது பயணத்தை ஆரம்பித்தது லீட்ஸ் (Leeds) நோக்கி. மொத்தம் 40 நிமிடப் பயணம் தான். நிறையப் பேருக்கு லீட்ஸ் பற்றியும் அங்கு உள்ள கிரிக்கெட் மைதானம் பற்றியும் தெரிந்திருக்கும்.

 
எனக்கு லீட்ஸ் என்றால் ஒன்று மட்டும் தான் நினைவிற்கு வரும். அது கடந்த வருடம் என் ஆய்வின் திட்ட வளர்ச்சி பற்றிய ஒரு கூட்டத்திற்குச் சென்றது. என் ஆய்வின் ஆய்வாளருடன் தான் அந்தப் பயணம். நான் இப்போது பயணப்படும் அதே வழித்தடத்தில் தான் அதுவும். வாழ்வில் என்னால் எப்போதும் மறக்க முடியாத பயணம் அது. என் ஆய்வுத் திட்டப் பணிகள் எதிர்பார்த்த இலக்கை நோக்கிப் பயணிக்கவில்லை. ஆனால் அது தோல்வியும் அல்ல. ஆய்வும் கூட ஒரு நோக்கமற்ற நோக்குடன் தான் ஆரம்பமானது. அதில் நான் மட்டுமே பங்கு பெற்றிருக்கவில்லை. மொத்தம் ஆறு பெரிய பல்கலைக் கழகங்கள் சேர்ந்து நடத்தும் ஆய்வு. எல்லோரும் ஒரே மாதிரியான பங்களிப்பைச் செய்தால் தான் அது சரியான வழியில் சென்றிருக்கும். ஆனால் அவரவர் தன்முனைப்புக் கொண்டு நான், நீ என்கிற போக்கில் சற்று பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம். என் ஆய்வு மேலாளர் என்னை பழியிடுவது என்ற முடிவுடன் அந்த review meeting ற்கு வந்து கொண்டிருந்தார். எனவே தான் சொல்வதை அங்கே சொல்லவேண்டும் என்கிற ரீதியில் தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். யாரும் எனக்கு அப்படி ஒரு அறிவுரை வழங்கியதில்லை. வாய் இருப்பதற்காக கண்ட கண்ட உதாரணம் எல்லாம் சொல்லி அவர் வழி நெடுக எனக்களித்த அறிவுரை என்னை எரிச்சலின் உச்சத்திற்குத் தான் கொண்டு சென்றது. நான் என் ஆய்வுகளை மனப்பூர்வமாகத் தான் செய்கிறேன், எனக்கு இதில் எந்த ஒரு சங்கடமோ இல்லை நாம் வேறு வேலை பார்த்திருக்கலாம் என்றோ ஒரு போதும் நினைத்தது இல்லை அந்த அறிவுரைக்குப் பின் முதல் முறையாக நினைத்தேன் 'தெரியாமல் இந்த வேலைக்கு வந்து விட்டோம் என்று. இவன் கிட்ட எல்லாம் நாம கேட்கணும் என்கிற தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு review meeting ல் இவன் கழுத்தை அறுப்பது என்கிற முடிவுடன் அவர் சொன்ன அத்தனைக்கும் தலையாட்டிக் கொண்டே வந்தேன். நான் அந்த நிமிடம் வரை சென்ற ஆண்டின் இறுதியில் இந்தியா திரும்பி விடும் எண்ணத்தில் தான் இருந்தேன். போதும் வெளிநாடுகளில் வேலைபார்த்தது என்ற நினைப்பிற்கு வந்திருந்தேன். இங்கிருப்பதால் எந்த ஒரு நலனும் இல்லை. எல்லோரையும் பிரிந்து எதற்காக இங்கே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் வேகமாக வளர்ந்திருந்த காலகட்டம் வேறு. என் எண்ணத்தை நான் அடியோடு மாற்றிக் கொண்டதும் கூட லீட்ஸ்ல் தான். அந்த review meetingல் அவர் என்னைக் குறை கூறினார் நான் ஏதோ சோம்பேறி என்பது போலவும் என்னால் தான் இந்தத் தாமதம் என்பது போலவும் பேசலானார். அவரஇதனைத் தான் சொல்லப் போகிறார் என்று எனக்குத் தெரியும் என்றாலும், மிகவும் கடுமையான வார்த்தைகளை அவர் பிரயோகித்த விதத்தில் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன். பேசுவதற்கு என் முறை வந்தபோது நான் என் பக்க வாதங்களை சரியான காரணங்களுடன் என்மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் என்னை என் ஆய்வில் கவனம் செலுத்த விடாமல் என் ஆய்வாளர் செய்வதாகவும் கடுமையாக ஆனால் உறுதியாக குற்றம் சாட்டினேன். என்னிடமிருந்து அவர் இதனை எதிர்பார்க்க வில்லை. எனவே என்னுடன் பேசுவதை அந்த இரண்டு நாளும் தவிர்த்து லீட்ஸ் தொடர்வண்டி நிலையத்தில் தான் சொன்னார். 'பிரிட்டனில் நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன், இது தான் நீ செய்யும் கடைசி வேலை' என்றார். ' சரி பார்க்கலாம், இங்கு தான் வேலை பார்ப்பேன், உங்களால் என்ன செய்ய முடிகிறது என்று' கிட்டத்தட்ட சவால் விடும் தொனியில் தான் சொன்னேன். அது இப்போது உண்மையாகி நான் வேலையில் சேரப் போகிறேன் என்கிற கூடுதல் மகிழ்ச்சி வேறு என்னுள். எனவே லீட்ஸ் தொடர்வண்டி நிலையம் என் வாழ்வில் திருப்புமுனை என்று தான் கூற வேண்டும்.

 Coffee and Croissants 
அது தவிர லீட்ஸில் மூன்று நான்கு நாட்கள் எல்லாம் தங்கியிருந்திருக்கிறேன். யார்க்ஸயர் கவுண்டியின் காலை உணவு என்பது இங்கிலாந்தின் காலை உணவுகளில் சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து. அவர்களின் அந்த சிற்றுண்டி இல்லை இல்லை பெரு விருந்து என்பதை அனுபவித்தால் உணர முடியும். பிரிட்டனைப் பொறுத்த வரை நீங்கள் எந்த ஹோட்டலில் தங்கினாலும் பெரும்பாலும் காலை உணவுடனே உங்களின் அறை கிடைக்கும். வெகு சில சமயங்களில் தான் உங்களின் அறை வாடகையுடன் தனியாக காலை உணவிற்கு என்று கட்டணம் சேர்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அந்தந்தப் பிராந்திய உணவு வகைகள் மெனுவில் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். கீழ்வரும் இந்த பெரிய பட்டியலுடன் டீ அல்லது காபி இவற்றிலும் சில வகைகள் இருக்கும் யார்க்ஸயரின் காலை உணவில் ( நல்ல தரமான தங்கும் விடுதிகளில்) பன்றி இறைச்சி,  புகையில் வாட்டப்பட்ட ஒருவகை மீன் ( kipper), புகையில் வாட்டிய சால்மன் வகை மீன் முட்டைத் துருவல், யார்க்ஷயர் போர்க் sausages, வீச்சு முட்டைகள் இவற்றுடன் கருப்பு புட்டிங், மெலிதாக வாட்டிய‌ தக்காளி, காளான், வறுத்த ரொட்டி, உருளைக்கிழங்கு,  வேகவைத்த பீன்ஸ், தக்காளி, காளான்கள் சீஸ் மற்றும் / அல்லது டோஸ்ட் செய்யப்பட்ட‌ பீன்ஸ் என்று நீளும். இதனுடன் பெரும்பாலும் சீரியலின் வகைகளும், ஓட்ஸ் என்பனவும் இடம்பெறும். நன்றாகச் சாப்பிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது தான் உண்மை.

தொடரும்......


9 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -3

மெல்ல நகர்ந்த தொடர்வண்டி செஸ்டர்பீல்டு நோக்கி வேகமெடுக்க ஆரம்பித்தது. என் மின்னணு புத்தகப் படிப்பானை எடுத்து வைத்து விட்டு என் ஸொவெட்டரைக் கழட்டி வைத்துவிட்டு என் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் சூரியன் மேகங்களை விட்டு வெளியே வரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பசுமை வண்ணம். ஏனோ என் மனம் நம் ஊரின் தொடர்வண்டிப் பயணத்தினையும் அதன் வெப்பக் காற்றையும் அசைபோடத் தொடங்கியது. தொடர்வண்டியை ஆங்கிலேயர்கள் என்னவோ அவர்களின் வியாபாரத் தேவைகளுக்காகத் தான் அமைத்தார்கள் எனினும் இன்று தொடர்வண்டி இல்லாமல் இந்தியாவின் மூலை முடுக்குகளை இணைப்பது என்னவோ குதிரைக் கொம்பு தான். ஆனால் இன்னும் நம் தொடர்வண்டிகளின் தரமும் சேவையும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. வசந்த காலம் பிரிட்டன் முழுவதும் ஆரம்பித்திருக்கிறது. மார்ச் மாதத்தின் இறுதி வாரங்கள் நாடு முழுவதும் ஒரு உஷ்ண அலை, வெப்பம் 23-28 டிகிர் செல்சியஸ் பதிவாகியது. இது கடந்த 50 வருடங்களில் மிகவும் அதிகம். ஆனால் இந்த வாரம் அப்படியே நிலைமை தலைகீழ். வெப்பநிலை 10க்கும் குறைவு, மேலும் ரோடுகளில் உறைபனி அபாயமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனாலும் வசந்த காலத்தின் வருகையை இருப்புப் பாதை ஓரங்களில் பூத்திருக்கும் மலர்களிலும், துளிர்க்கும் இலைகளிலும் காண முடிந்தது. 100 அடி தூரத்திற்கு மேல் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை ஒரே புகை மூட்டம் வேறு. 

கம்பளி போர்த்திய அந்த ஆட்டுக்குட்டிகளும் குதிரைகளும் என்ன தான் இந்தக் குளிரில் தலையைக் கவிழ்ந்து செய்து கொண்டிருக்கும். ஈரமான புல் நன்றாக இருக்குமா என்ன? சிறிது நேரம் இதைச் சுற்றித்தான் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. பஞ்சுப் பொதிகள் போல ஆடுகள் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன மேய்ப்பன் யாருமின்றி. எங்கும் பசுமை தரை முழுதும், நீண்ட மரங்கள் யாவும் தன் வேர் எப்படி நிலத்தினுள் புதைந்திருக்குமோ அப்படி அதன் கிளைகளும் இலைகளற்று. நிலப்பரப்புகள் எதுவும் சமதளத்தில் இல்லை மேடும் பள்ளமும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தது. நிலங்களின் மேடுகளில் சில அப்படியே மைக்ரோ சாப்ட்டின் லோகோ போலவே இருந்தது. இந்த மாறி வரும் நிலப்பரப்பு தான் பிரிட்டனை மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேறுபடுத்துவதாக என் நண்பன் ஒருவன் ஒருமுறை சொன்னது நினைவிற்கு வந்தது. நான் எந்த ஐரோப்பிய நாடும் இதுவரை சென்றதில்லை எனவே எனக்கு இதைப் பற்றிய எந்த அபிப்ராயமும் இல்லை. இந்த நேரத்திற்கெல்லாம் தொடர்வண்டி நல்ல வேகமெடுத்திருந்தது. தூரத்தில் தெரிந்த மரங்கள் தொடர்வண்டியோடும் அருகிருந்த மரங்கள் பின்னோக்கி வேகமாகவும் சென்று கொண்டே இருந்தன. இது ஒரு இயற்பியலின் எளிமையான சக்தி வாய்ந்த தத்துவம்.மெல்ல மனது சார்பியல் தத்துவம், இயக்கம், பூமியின் சுழற்சி, ஒளியின் வேகம் என்று சிந்திக்கத் தொடங்கியது. எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் விபத்தில்லை. எல்லாவற்றுக்குள்ளும் ஒரு ஒழுங்கு இருக்கிறது, எல்லா ஒழுங்கிற்குள்ளும் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கும் இருக்கிறது. இன்னும் அறிவியல் தெளிவு படுத்த வேண்டியவை என்கிற பட்டியல் மிகவும் அதிகம் என்று தான் தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற சிந்தனையும், பார்வையும் தொடர்வண்டியில் செய்யப்பட்ட அறிவிப்பு கலைத்துப் போட்டது. அடுத்த நிலையம் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறது என்றும் உங்கள் உடமைகளைச் சரி பார்த்துக் கொண்டு இறங்கத் தயாராகவும்...என்ற அறிவிப்பினைக் கடந்து என் இருக்கைக்கு ஆபத்தும் வந்து சேர்ந்தது.

_________________________________________________________________________________________________________ 

இயற்பியலின் தத்துவங்கள் குறிப்பாக சார்பியல் பற்றியும் விளக்கங்கள் பற்றியும் நிறைய தமிழ் வலைப்பூக்கள் காணக் கிடைத்தது. அவற்றில் சில மேலே படிக்க

http://rajasankarstamil.blogspot.co.uk/2010/08/41.html
http://puthiyavanonline.blogspot.co.uk/2008/11/blog-post_25.html
http://www.jeyamohan.in/?p=21446

_________________________________________________________________________________________________________ 

7 April 2012

கற்றது கைமண் அளவு - 07/04/2012

ஆங்கிலம் ஒரு மொழிதான் அது அறிவன்று. ஆங்கிலேயர்கள் எல்லோரும் அறிவாளிகள் என்றால் அது முட்டாள் தனம் தான். தாய் மொழிவழிக் கல்வி தான் சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இன்று அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னனியில் இருக்கும் நாடுகள் யாவும் தாய்மொழி பயின்றவர்கள் தான். அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மூன்றாமாண்டு இ.சி.இ. படித்துவந்த மணிவண்ணன் தனது விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் வேட்டியை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணம் அவரின் ஆங்கில வழிக்கல்வி ஏற்படுத்திய தாக்கம் என்று தான் கூறுகிறார்கள். நான் எல்லாம் தாய்மொழி வழிக்கல்வி தான் பயின்றேன். பட்டப்படிப்பிற்குப் பின் தான் ஆங்கில வழிக்கல்வி. புரியாத மொழியில் பொறியியல்  பயின்ற ஒருவர் எப்படி அதன் முழுஅறிவையும் பெறமுடியும். ஆங்கிலம் மட்டுமே கற்ற ஆங்கிலேயர்கள் கூட வேலை இன்றி தவிப்பதை நான் இந்த நாட்டில் கண்டிருக்கிறேன். நம் பாடமுறைகள் மாறவேண்டும், நம் அனுகுமுறையும் கூட.


_________________________________________________________________________________________________________ 

’டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்தது’ என்கிற செய்தியும் அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ராணுவ ஆட்சி என்கிற ரீதியில் வந்த செய்திகளிலும் ஏதோ சிறிய உண்மை இருப்பதாகவே எனக்குப் படுகிறது. ராணுவத் தளபதி வி.கே.சிங்கைச் சுற்றி ஒரே சர்ச்சைகள். தனது பிறந்த தேதிகளில் குழப்பம், இராணுவ பலவீனம் குறித்த செய்திகள், அரசுக்கு எதிரான செய்திகள் என்று தன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப் படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார். ஆனாலும் இந்தியாவில் இராணுவ ஆட்சி, புரட்சி என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றுதான். இந்த பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளே தலையால் தண்ணி குடிக்கிறார்கள். எனவே இதெல்லாம் ஒரு மீடியாவின் சர்ச்சையும் ஒன்றுக்கும் லாயக்கற்ற மத்திய அரசின் கையாலகாத்தனமும் தான்.

_________________________________________________________________________________________________________ 

IPL கிரிக்கெட் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. நாமும் நம் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நமது அணிகளைத் தொடர ஆரம்பித்து விடுவோம். வருடாவருடம் இந்தத் தொல்லைவேறு. மின்கட்டணங்கள் சாதாரன‌ர்கள் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத உயர்வு அதே வேளை IPL கிரிக்கெட்டின் அதிகளவு போட்டிகள் அத்துனையும் மின்னொளியில் நடத்தப்படுகின்றன. சூடுசொரனையற்ற நாமும் நம் கைக்காசை செலவு செய்து கைதட்டி மகிழ்வோம். இதுபோலத்தான் பன்றிக் காய்ச்சலும். ஒவ்வொரு சீசனிலும் ஒரு காய்ச்சல். நமக்கு வராத வரை எதுவும் நம் செவியில் விழியில் விழாது. 

_________________________________________________________________________________________________________ 

வளர்ந்த நாடுகளில் சமையல் செய்வதும் பொருட்கள் வாங்குவதும் ஒரு பெரிய வேலையாக இருக்கிறது என்பது மிக நிதர்சனமான உண்மை. இந்தக் குறையைப் போக்க உலகில் முதன் முறையாக கொரியாவில் புதுமையான முறையில் ஒரு வெர்சுவல் ஷாப்பிங் ஸ்டோர் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஷாப்பிங் என்றாலே அது ஒரு பெரிய வேலையாக ஒருபக்கம் கருதப்படும் போது, இன்னொரு பக்கம் இது போன்ற வேலைகளைத் தொழில்நுட்பம் மிக எளிதாக்கி வருகிறது. இங்கு கூறப்பட்டுள்ள இந்த வெர்சுவல் ஷாப்பிங் நிச்சயம், என்பது ஷாப்பிங் செய்யும் நேரத்தினை மிச்சம் செய்யும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு பொருளையும் தேடி எடுத்து, அவை அனைத்தையும் பேக் செய்யும் வரை பெரிய கியூவில் காத்துகிடக்க வேண்டும். கொரியாவில் அறிமுகம் செய்துள்ள இந்த ஷாப்பிங்கில் சட்டென பொருட்களை எல்சிடி திரையின் மூலம் தேர்வு செய்து, பட்டென பணம் கொடுத்து வாங்கிட வேண்டியது தான் பாக்கி. கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியமே இங்கு இல்லை. 


_________________________________________________________________________________________________________ 
ஆங் சான் சூகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலமாக வீட்டுச் சிறையிலிருந்து மீண்டு வந்து நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரைப் பற்றி ஜுனியர் விகடனில் வெளிவந்திருக்கும் கட்டுரை இதோ....

சூகியின் தந்தையான ஆங் சான், பிரிட்டிஷாருக்கு எதிராக பர்மா ஆர்மியை உருவாக்கியவர். வரலாற்றுக் காலம் தொடங்கி சீனர்களும் மங்கோலியர்களும் சுரண்டிய மிச்சமாக இருந்தாலும், இயற்கை வளத்துக்குப் பஞ்சம் இல்லாத நாடு பர்மா. பூமிக்கு மேலே, வைரம் பாய்ந்த தேக்கு மரங்கள் என்றால், பூமிக்குக் கீழே வைரங்கள். 1885-ல் பிரிட்டி ஷாரின் காலனியாக, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோதுதான், பிரிட்டனுக்கு எதிராகக் களத்தில் குதித்தார் கல்லூரி மாணவராக இருந்த ஆங் சான். இரண்டாம் உலகப்போர் நடந்த நேரம். கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவராக இருந் தாலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் போர்த் தந்திரத்தோடு பிரிட்டனை எதிர்க்க ஜப்பானின் உதவியை நாடினார் ஆங் சான். பிரிட்டனைத் துரத்தியதும் ஆட்சியை உங்களி டம் ஒப்படைப்போம் என்று சொல்லி இருந்தது ஜப்பான். ஆனால், அந்தப் போரில் ஜப்பான் அடிவாங்கியதால், சுதந்திரம் கிடைக்க வில்லை.பிரிட்டன் தன் காலனி ஆதிக்கத்தை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தபோது, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற் றோடு பர்மாவும் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது. 1947-ல் பர்மாவின் முதல் அதிபராகப் பதவியேற்க இருந்த நேரத்தில், எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஆங் சான். அப் போது ஆன் சான் சூகிக்கு வயது இரண்டு. அப்பா பெயரான ஆங் சாம், பாட்டியின் பெயரான சூ, அம்மாவின் பெயரான கின்கி... இந்த மூன்றையும் இணைத்துக்கொண்டு ஆங் சான் சூகி ஆனார்!
ஆங் சான் சூகியின் தாய், பர்மாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். அதனால் தன் மூன்றாவது வயதிலேயே தன் தாயுடன் இந்தியாவுக்கு வந்து சிம்லாவிலும் டெல்லி யிலும் பள்ளிப் படிப்பை முடித்தார் சூகி. அதன் பிறகு, லண்டனில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை கல்லூரியில் முக்கியப் பாடங்களாக முடித்தார். ஐ.நா-வில் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் மியான்மர் என்று பெயர் மாற்றப்பட்ட பர்மாவில் சர்வாதிகார ஆட்சி தொடங்கியது. 1962-க்குப் பிறகு கொடூரமாக நடந்து கொள்ளத் தொடங்கினார் அதிபர் நீ வின். பிரிட்டிஷ்காரரான மைக்கேல் ஏரிஸ்ஸை மணந்த ஆங் சான் சூகிக்கு இரண்டு மகன்கள். மூன்று வயதில் பர்மாவை விட்டுச் சென்ற சூகி, 1988-ல் தாய் நாட்டைப் பார்க்க... இல்லை இல்லை.. உடல் நிலை சரியில்லாமல் இருந்த தாயைப் பார்க்க வந்த நேரத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சூகிக்கு மட்டும் அனுமதி கொடுத்துவிட்டு கணவருக்கும் இரண்டு மகன்களுக்கும் குடியுரிமை தர மறுத்தது ராணுவம். சர்வாதிகார அரசாங்கத்தின் கொடுமையைக் கண்டு ஆத்திரம் அடைந்தார் சூகி. அதே ஆண்டில் 8-வது மாதம் 8-ம் தேதி மியான் மரில் ஜனநாயகம் வேண்டி மிகப்பெரிய புரட்சி வெடித்தது. அந்த மகத்தான '8888’ போராட் டத்தில் கலந்துகொண்டார் சூகி. அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட புரட்சி அது. ராணுவத்தின் பிடி இறுகியது. சூகியை வீட்டுச் சிறையில் வைத்தது. 90-ம் ஆண்டில் அவருடைய தேசியக் குடியரசுக் கழகத்தினர் மகத்தான வெற்றி பெற்றபோதிலும், அவரிடம் ஆட்சியை ஒப்படைக் காமல் வீட்டுச் சிறையிலேயே வைத்தது. 86 சதவிகித ஓட்டுகள் பெற்றிருந்த நிலையிலும், 'தேர்தலில் தில்லுமுல்லு நடந்துவிட்டது’ என்று சொன்னது ராணுவம். ராணுவத்தின் அதிகாரத்துடன் நடந்த தேர்தல் வெற்றி குறித்து, இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டதைக் கண்டு உலகமே அதிர்ந்தது. இது போதாது என்று தேர்தலில் வென்ற பலருக்கும் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைத்தது.  அடுத்த ஆண்டு, சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. வீட்டுச் சிறையில் இருந்த சூகிக்குப் பதிலாக, அவருடைய மூத்த மகன் அலெக்ஸாண்டர் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். கணவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு, லண்டனில் உயிருக்குப் போராடியபோதும் ஆங் சான் சூகிக்கு வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை. ஐ.நா. சபையின் கோபி அன்னான், போப் ஆண்டவர் போன்ற பலரும் வேண்டுகோள் விடுத்தும், சர்வாதிகார அரசு அசைந்து கொடுக்கவே இல்லை. கடைசிவரை சூகியைச் சந்திக்காமலேயே இறந்து போனார் ஏரிஸ். அதன்பிறகு சூகி இங்கிலாந்து செல்வதற்கு, 'திரும்பி வரக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் அனுமதி கிடைத்தது. ஆனால், தாய் நாட்டைவிட்டுப் போக மாட்டேன் என்று உறுதியுடன் மறுத்து விட்டார் சூகி. 'ஊழலுக்குக் காரணம் அதிகாரம் அல்ல... அச்சமே. பதவியை இழந்து விடுவோமோ என்ற அச்சமே அதை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களைச் சீர்குலைக்கிறது’ என்ற சூகி உரத்துச் சொன்னது, உலக அளவில் கவனிக்கப்பட்டது. 
'மக்களுக்குத் தேவையானது என்ன என்பதை மிகக் கடைசியாக உணர்கிற விஷயத்தில் அரசியல் வாதிகள் அடிக்கடி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்’ என்பதுபோன்ற ஆவேச வார்த்தைகளுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும், சூகி அவரது தந்தையைப் போன்று ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவானவர் அல்ல. அவருடைய பாணி காந்தியப்பாதை. சிறையில் இருந்தபடியே ஆட்சியாளர்களை மிரளவைத்த தலைவர்களில் மண்டேலாவுக்குப் பிறகு, ஆங் சான் சூகிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த திங்கள்கிழமை, மியான்மரில் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின. 44 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 43 தொகுதிகளில் வென்றிருக்கிறது சூகியின் கட்சி. (கடந்த தேர்தலை அவர் புறக்கணித்து விட்டார்!) இத்தனைக்கும் ஓட்டுப் போடப் போன மக்களுக்குப் பல வகையில் அச்சுறுத்தல் கொடுத்தது அரசு. ஓட்டு போட்டதும் அழிப்பதற்கு வசதியாக, ஓட்டுச் சீட்டில் மெழுகு தடவி வைத்திருந்தது. இத்தனை திருவிளையாடல்கள் நடத்தியும் தோற்றுப்போனது அரசு. எல்லாவற்றையும் மீறி ஜனநாயகம் வெற்றி அடைந்து இருக்கிறது. ஆனாலும், இன்னமும் அசைந்து கொடுக்காத ராணுவ ஆட்சியின் மீது அத்தனை நாடுகளும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அதனால், உலக நாடுகள் மியான்மருக்குப் பொரு ளாதார நெருக்கடிகளைக் கொடுத்து எச்சரித்து இருக்கின்றன. மியான்மரில் சூகியை 'டாவ்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அதற்குத் தமிழ் அர்த்தம், 'அத்தை’. மியான்மர் மக்களுக்கு அத்தையாகிப்போன சூகிக்கு இப்போது வயது 66. மியான்மர் மட்டுமின்றி உலக மக்களின் ஆதரவையும் அன்பையும் அளவுக்கு அதிகமாகவே பெற்று இருந்தாலும், இன்னமும் அவருக்குத் துணையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர்... தனிமை.!

நன்றி: ஜுனியர் விகடன்


_________________________________________________________________________________________________________


இந்தவார ஆவணப்படம் சென்றவாரத் தொடர்ச்சி........

_________________________________________________________________________________________________________லஃபரோ முதல் எடின்பரா வரை -2

 

தொடர் வண்டி டார்பி (Derby)க்கு 25 நிமிடங்களில் சென்று சேர்ந்தது. நான் வேறு வழியை அடைத்துக் கொண்டு இருந்தேன். வண்டி நிற்கவும் மெதுவாகத் தான் என்னால் இறங்க முடிந்தது. எனக்குப் பின்னால் இறங்க வேண்டியவர்கள் வரிசையில் நிற்பது வேறு என்னைப் பதட்டமடையச் செய்தது. நான் இறங்கிய பிளாட்பாரம் எண் 2 அடுத்த வண்டி இன்னும் 35 நிமிடங்களில் பிளாட்பாரம் ஒன்றிலிருந்து செல்லும். என் சுமைகளை அடுத்த நடைமேடைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தொடர்வண்டி மெதுவாகச் செல்ல ஆரம்பிக்கவும், அந்த இரண்டாம் எண் நடைமேடை காலியாகவும் சரியாக இருந்தது. பின்னர் இரண்டு கைகளிலும் இரண்டு பெட்டிகளை இழுத்துக் கொண்டு சுமைதூக்கியை (Lift) நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எனது முன்பதிவுஅமைதிப் பெட்டியில் (Quiet Coach) என்பதால் அது சரியாக நிற்கும் இடத்திற்கு அருகில் என் பெட்டிகளை வைத்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன். சுமைகளைத் தூக்கி வந்ததால் இவ்வளவு நேரமும் குளிர் தெரியவில்லை. உடலின் வெப்பமும் மனதின் வேகமும் சிறிது குறைந்த‌ போது குளிரின் தன்மையை உணர ஆரம்பித்திருந்தேன். இந்த டார்பி தொடர்வண்டி நிலையம் லஃபரோ போன்று சிறிய நிலையம் அல்ல.

 
டெர்வன்ட் ( River Derwent) நதிக்கரையில் அமைந்துள்ள இந்த டார்பி நகரம் டார்பி ஷெயர் கவுன்டியின் தலைநகரமாகும். இங்கிலாந்தின் 18வது பெரிய நகரமான இதன் பெயர்க்காரணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இங்கிலாந்து ரோமன் அரசின் காலணியாக இருந்தபோது இது ஐந்து கோட்டை நகரங்களில் ஒன்றாக 'மான்களின் கிராமம்' ( "Village of the Deer") என்கிற பொருளில் Deoraby என்று அழைக்கப்பட்டு பின்னர் டார்பி (Derby) என்றானது. தொடர்வண்டிகளின் தொடக்க காலத்திலிருந்து டார்பி மிக முக்கியமான தொடர்வண்டி நிலையமாக இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் லண்டனுக்கும் எடின்பராவுக்கும் இடையில் இருந்த மிக முக்கியமான நிலையம் இன்றும் கூட அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. மேலும் டார்பி தான் பிரிட்டனின் மிக முக்கியமான தொழிற்புரட்சியின் தலைநகரமாக 18ம் நூற்றாண்டில் இருந்திருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக இயக்கப்பட்ட புகைவண்டி இயந்திரம் கூட இங்கு செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது தான். பணக்காரர்களின் அடையாளமான ரோல்ஸ்ராய் கார் தொழிற்சாலையும் இங்கு தான் 1907ல் தொடங்கப்பட்டது. இப்போதும் கூட இந்த நகரில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக இருக்கும் பல கட்டிடங்களைக் காண முடியும். இங்கு உள்ள 212 அடி உயரமுள்ள கிருத்தவ தேவாலயம் கட்டடக்கலையின் உச்சமாக இன்றளவும் இருக்கிறது.


இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு பலமுறை நண்பர்களுடன், அலுவல் காரணமாக, குடும்பத்தினருடன் என்று பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கிறேன். தனியாக இப்போது தான் வந்திருக்கிறேன். தூரத்திலிருந்து வந்து நின்ற மற்றொரு தொடர்வண்டியில் என் நண்பர் ஒருவர் இறங்கினார். நான் அவரைக் கவனித்த அதே நேரத்தில் அவரும் என்னைப் பார்த்து கையசைத்து விட்டு அருகில் வந்து பேசலானார். அவர் என்னிடமிருந்து விடைபெறவும் நான் செல்ல வேண்டிய தொடர்வண்டி  (cross country express) வருவதற்கும் சரியாக இருந்தது. என் முன்பதிவு பெட்டி சரியாக என் முன்னால் நின்றது. அதன் கதவுகள் திறக்கப்பட என் பெட்டிகளை ஒவ்வொன்றாக் உள்ளே ஏற்றி அதற்கான இடத்தில் வைத்துவிட்டு என் இருக்கை நோக்கி நடந்தேன். பெட்டியில் மொத்தமாக என்னையும் சேர்த்து பத்துப் பேர் இருந்திருப்பார்கள். இது ஒன்றுதான் இந்தப் பெட்டிகளில் வசதி. அலைபேசியில் பேசக்கூடாது, சத்தம் போடக்கூடாது என்பது இந்தப் பெட்டிகளின் விதி. பெரும்பாலும் செய்தித் தாள் திருப்பும் சத்தமும் மடிக்கணினி சத்தமும் சில நேரம் கேட்கும். மெல்ல தொடர்வண்டி கிளம்பவும் மிகவும் வெப்பமாக உணர்ந்தேன். என் மின்னணு புத்தகப் படிப்பான் (e book reader !!!...இதற்குச் சரியான பெயர் இருந்தால் சொல்லவும்) எடுத்து வைத்துவிட்டு அகலமான கண்ணாடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்த நேரத்தில் தொடர்வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.

தொடரும்....