Pages

20 April 2012

கோவை நினைவுகள் -10

கொங்கு நாடு கல்லூரி மற்றும் அதனைச் சுற்றி இருந்த பகுதிகள் என் கண்முன்னால் வெகு வேகமாக வளர்ச்சி பெற்றது. நான் 1997-2006 வரை அங்கு தான் படித்தேன். முதலில் மாரியம்மன் கோவில், பார்த்திபன் மருத்துவமனை, மகாலட்சுமி பேக்கரி, ஞானாம்பிகை மில் இவற்றைத் தவிர பெரிய கட்டிடங்கள் என்று எதுவும் இல்லை. நல்ல சாப்பாடு சாப்பிடக்கூட ஐ.டி.ஐ பகுதிக்கு அல்லது டவுனுக்குத் தான் செல்ல வேண்டும். இன்று நீங்கள் ஒரு சென்ட் காலி மனை கூட அந்தப் பகுதியில் இல்லை. எனக்குத் தெரிந்து சோளக் காடாக இருந்த நிலங்கள் இன்று கான்கிரிட் காடாக மாறிவிட்டது. கட்டடங்களை விளைவிப்பதால் யாருக்கு என்ன பயன் ? எல்லாமே மாற்றங்களைச் சந்தித்தது, சந்தித்துக் கொண்டு இருக்கிறது. பார்த்திபன் மருத்துவமனை தவிர வேறு மருத்துவமனை அந்தப் பகுதியில் வேறு மருத்துவமனை இல்லை இன்று அப்படி இல்லை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஞானாம்பிகை மில்ஸ் இன்று அமைதியாக எங்கிருந்தோ வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு அதுவும் முழுக்க முழுக்கப் பெண்களைக் கொண்டு இயங்குகிறது. எப்போதும் அமைதியாக நீண்ட கதவுகள் சாத்தப்பட்டு, பெண்களுடன் பேசினாலே ஓடஓட விரட்டப்பட்ட காலம் மலையேறி எப்போதும் கதவுகள் திறக்கப்பட்டு, மலையாளக் கரையோரப் பெண்களின் தாயகமாய் மாறிப் போய்விட்டது. இப்போது நல்ல மெஸ் எல்லாம் ஓரளவு அந்தப் பகுதியில் தான் இருக்கிறது. எந்த மேட்டுப்பாளையம் பேருந்தும் நிறுத்த மாட்டார்கள் அப்போது எல்லாம். இதற்காகவே நான்கு ஐந்து பேருடன் பேருந்தை வழிமறிப்போம் ஒருவர் செல்லுவதற்கு. இன்றய நிலையில் வாகனங்களில் நெரிசலில் அந்தப் பகுதியே அல்லல் படும். இந்த சமுதாய மாற்றம் என்பது ஏதோ ஞானாம்பிகை மில் பகுதியில் மட்டும் நிகழவில்லை, ஒட்டுமொத்த தமிழகமும் இந்தப் போக்குத் தான். மக்கள் வீட்டில் இருப்பதைக் குறைத்துக் கொண்டு வீதிகளில் அதிகம் நேரம் செலவிடத் தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். நான் படிக்கும் காலங்களில் புடவை அணிந்த பெண்கள் அதிகம் என் கல்லூரியில் படித்தார்கள். இன்று அப்படி யாரையும் நீங்கள் பார்த்துவிடவே முடியாது. எல்லாமும் மாறிப் போனது. ஒரு அச்சு அசல் கிராமத்தானாய் கோவைக்குள் வந்த நானே இவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறேன். என் கல்லூரி காலங்களில் எனக்கு என் துறை சார்ந்து அறிமுகமாகி இன்று என் குடும்ப உறுப்பினர் ஆகிப் போனவர் என் அண்ணா முத்துக்குமார். அவரின்றி என்னில் எதுவும் நிகழ்வதில்லை. என்னில் என் தந்தை ஏற்படுத்திய பெரும் தாக்கத்திற்கு சற்றும் குறைவில்லா தாக்கத்தை ஏற்படுத்தியவர். என்னைப் பல வழிகளில் ஆற்றுப் படுத்தியவர். அவரின்றி நான் இன்று இல்லை. முதுகலைப் படிப்பின் போது அறிமுகமானார். ஆய்வின் போது மிகமிகச் சாதாரணமாகத் தான் தொடங்கியது எங்களின் நட்பு. மாலை நேரங்களில் அளவளாடும் போது மெல்ல மெல்ல நட்பாகி பின் காதலாகி கசிந்துருக ஆரம்பித்தது. அவரைப் பிரிந்திருந்த நாட்களில் எல்லாம் ஏதோ இழந்த ஒரு உணர்வு வந்து ஆட்கொள்ளும். ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணாவின் வீட்டில் கூடச் சொல்லுவார்கள் ' கூடவே சுத்துறியே செவ்வாழ' என்கிற தொனியில் கிண்டல் பன்னுவார்கள். என் ஆய்வில் எனக்கு என்ன எல்லாம் தெரியுமோ அது முழுவதும் அவருக்கும் தெரியும். அவர் சரி என்று சொல்லிவிட்டால் எனக்கு இரண்டாம் சிந்தனை என்று ஒன்று வந்ததே இல்லை. படிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர் இல்லை மோகம் கொண்டவர். சரியான திசைகாட்டி இன்றி தடுமாறும் ஓடம் போல என்னவெல்லாமோ படித்தார், முதலில் இளங்கலை கணிதம், பின் இளங்கலை தமிழ் என்று இலக்கற்ற அம்பு போல. பின்னர் என் தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் முதுகலைத் தமிழ் படிப்பது என்று முடிவு செய்தார். தனது குடும்பத்தின் ஆபத்பாந்தவன் அவர், எந்த ஒரு சிக்கலும், இல்லை பிரச்சனையும் இவரிடம் தான் முதலில் வரும். இவரும் ஊருக்கு உழைக்கும் உத்தமர் போல செயலில் இறங்கி ஊணுறக்கம் மறந்து அவர்களின் துன்பம் தனது போல கண்துஞ்சாமல் காரியமாற்றச் சென்றுவிடுவார். தனக்காக அவர் செலவிட்ட நேரங்கள் மிகவும் குறைவு இன்றும் கூட அது தான் தொடர்கிறது. முதுகலைத் தமிழ் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தான் முடித்தார். பின்னர் என் சாத்தான் வேலையை அவரிடம் காட்டி உடனே அவரை ஆய்வில் சேருமாறு தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்தேன். அவருக்கு முதலில் தயக்கம் அதிகமாகி பின்னர் ஒருவழியாக 'சரி வேணும்னா நான் M.Phil பண்ணுறேன்' என்றார். 

நானும் என் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் காலத்தை எட்டியிருந்தேன். எனக்கோ அவசரம் நான் இங்கிருந்து சென்றுவிட்டால் அவர் முனைவர் ஆய்விற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார் என்கிற சந்தேகம் வேறு. அதனால் நான் M.Phil வேண்டாம் முனைவர் ஆய்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றேன். அவர் எப்போதும் போல 'M.Phil பண்ணுறதுன்னா சரி, இல்லைன்னா என்ன விடு' என்றார் தெளிவாக. சரி வந்த வரை லாபம் என்று போய் M.Phil சேர்ந்தோம். ஆம் சேர்ந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த M.Phil ஆய்வு என் ஆய்விலும் பலப்பல மாற்றங்களைத் தரப் போகிறது என்கிற உண்மை தெரியாமல் பம்பரமாய் காரியமாற்றினோம். நான் செய்யும் ஆய்வு இயற்பியல் சார்ந்தது, அவரின் ஆய்வு தமிழ் சார்ந்தது. இவை எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு படும், எப்படி அடிப்படையில் ஒன்றாகும். அவரின் ஆய்வுகள் என் ஆய்வுகளை எப்படிப் பாதிக்கும். இவற்றுக் கெல்லாம் ஒரு தனிப் பதிவு தான் எழுத வேண்டும். அவரின் நெறியாளர் அவருக்கு அளித்த தலைப்பு 'அம்மன் ஊஞ்சல் பாடல்கள்'. எங்களை கோவில் கோவிலாக அலைய வைத்த தலைப்பு. கோவை அம்மன் கோவில்கள் நிறைந்த நகரம். வேறு நகரங்களில் இது போன்று இல்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையில் இப்படி இல்லை வேறு நகரங்களைப் பொறுத்தவரையில் எனக்குத் தெளிவான அறிவில்லை. ஆனால் கோவையில் பெரிதும் சிறிதுமாக அம்மன் கோவில்கள் நிறைந்திருக்கும். பெரும்பாலானவை மண்ணின் தெய்வங்கள், முறைப்படுத்தப் பட்ட பெருந்தெய்வங்களில் இருந்து முற்றிலும் விலகி முழுக்க முழுக்க மண்ணின் மைந்தர்களால் கொண்டாடப் படும் தெய்வங்கள். எங்களுக்கு கோவில் என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்து ஒட்டிக் கொள்ளும். குடும்ப நண்பர்கள் சேர்ந்தால் மட்டுமே கோவில் செல்வது இல்லை எனில் குடும்ப நச்சரிப்புக்காகச் செல்வது என்கிற எழுதப்படாத விதியிலிருந்து விலக்காக ஆடிமாதம் முழுக்க கோவில் செல்ல ஆரம்பித்தோம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறிப்பாக ஆடி மாதங்களில் அம்மனை ஊஞ்சலில் இருத்திப் பாடல்கள் பாடுவார்கள் இதனைப் பதிவு செய்வது அதன் நுணுக்கங்களை ஆய்வது என்பது தான் ஆய்வின் கருப்பொருள். நாங்கள் நினைத்தது போல எளிதாக அமையவில்லை. எல்லாக் கோவில்களுக்கும் செல்ல முடியாது என்பதனால் வெள்ளைக் கிணற்றில் உள்ள குலதெய்வக் கோவில்கள் மட்டும் இலக்காகக் கொண்டோம். ஆனால் அங்கு பாடப்பட்ட பாடல்களில் பல சினிமா மெட்டில் பாடப்பட்ட பாடல்களாகவே இருந்தன. ஒன்றிரண்டு அசலான பாடல்கள் வந்து விழுந்த ஆட்களை எல்லாம் தெரிந்தெடுத்து தனியாக பேட்டி கண்டு என்று மிகவும் மெனக்கட்டு பாடல்கள் சேகரித்தோம். சேகரித்த பாடல்களை நான் எழுதுவேன் அண்ணா பிழை திருத்தி சரிசெய்வார். இதனுடன் கோவில்களின் வரலாறுகளையும் சேகரித்து அதன் கதைகளில் எவை சரியான கதை எவை கட்டுக் கதை எனத் தரம் பிரித்து என்று ஒரு வழியாக ஆய்வேட்டை நிறைவு செய்தோம். தினமும் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கும் ஆய்வேடு எழுதும் போதெல்லாம். நான் இவற்றை நீக்கிவிடலாம் என்பேன் அவர் இல்லை இருக்கட்டும் இது சரியாக இருக்கிறது என்பார். இறுதியில் முட்டிக்கொள்ளும் இருவருக்கும். சில மணித்துளிகள் மௌனத்தில் கரையும் பின்னர் மீண்டும் காரசார விவாதம் நடக்கும். எப்படியோ ஒருவழியாய் ஆய்வேடு நிறைவு பெற்றது. ஆனாலும் எங்களுக்கு முழுத்திருப்தி வரவில்லை. 

இடைப்பட்ட காலங்களில் எங்களின் இலக்கிய அறிவையும் சமூக அக்கறையையும் கூர் தீட்ட 'தமிழோசை' என்கிற சிற்றிதழ் வேறு நடத்தத் தொடங்கி இருந்தோம். எண்ணற்ற சிற்றிதழ்களுக்கு மத்தியில் ஒரு கலங்கரை விளக்காய் திகழவேண்டும் என்கிற ஒரு உயரிய சிந்தனையில் பல்வேறு தடைகள், மறைமுக எதிர்ப்புகள் தாண்டி ஆரம்பிக்கப் பட்டது தான் 'தமிழோசை'. சிறப்பான கட்டுரைகள், சிந்தனைவாதிகளின் நேர்காணல் என்று ஒரு சரியான கலவையாய் எங்களின் தமிழோசை ஜெயகாந்தன் அவர்களால் முதன்முதலில் விஜயா பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது. நான் கவிஞனாக கட்டுரையாளனாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள, அண்ணா அனைத்துப் பொறுப்பும் சுமந்து ஆசிரியராய் இருந்தார். நான் பெரும் தளபதியாய் அவருக்குத் துணை நின்றேன். இந்தத் தருண‌த்தில் தான் நாட்டார் வழக்காற்றியலின் பிதாமகன் முனைவர்.லூர்து ஐயா அவர்களைச் சந்திக்கும் பெரு வாய்ப்புக் கிடைத்தது. சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் அவரின் குடும்பத்தில் ஒருவராய் ஆகிப் போகும் வாய்ப்பு எங்களுக்கு வாய்த்தது. கோவை ஞானி ஐயா, லூர்து ஐயா என்று இரு பெரும் இமையங்களில் ஒரே நேரத்தில் சஞ்சரிக்கும் பெரும் பேறு பெற்றோம் இருவரும். எங்களின் ஆய்வில் இவர்களின் நேரடியான தொடர்பு என்பது கிஞ்சித்தும் இல்லை. ஆனால், அவர்களின் ஆளுமை எங்களின் ஆய்வில் ஒரு பாரிய மாற்றத்தைக் கொணர்ந்தது. குறிப்பாக என் ஆய்வில் அதுவரை எனக்கு ஒரு தெளிவில்லை.ஏதோ ஆய்வேட்டைச் சமர்ப்பித்து விட்டு ஒரு நல்ல பணம் காய்க்கும் வேலை வாங்கிவிட்டால் என் பிறவிப் பலன் அடைந்த ஒரு பேறு அடைந்து விடுவேன் என்கிற மனோநிலை முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்ட தருணங்கள் அவை தான். ஒரு சரியான ஆய்வு இந்தச் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தினை மாற்றி அமைத்து விடும் என்கிற பெரும் நம்பிக்கை எனக்குள் விதைக்கப்பட்டதும் அப்போது தான்.

லூர்து ஐயா அவர்கள் அறிமுகம் செய்த மானுடவியல் நூல் ஒன்று எங்களின் ஆய்வின் மொத்த வடிவத்தினையும் புரட்டிப் போட்டது. அந்த நூலினை முழுதும் கரைத்துக் குடித்து அதன் சாரம்சங்களை உள்வாங்கி எங்களின் ஆய்வின் முடிவினை மறுபடியும் எழுதினோம். நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்காத அளவிற்கு நாட்டார் வழக்காற்றின் ஒரு கூறினை முழுவதும் சமூகமானுடவியல் நோக்கில் மிகச் சரியான அளவில் தொகுக்கப்பட்ட ஒரு படைப்பாக வந்தது. அண்ணாவிற்கு மிகச் சிறந்த மரியாதையை தமிழறிஞர்கள் மத்தியில் தேடித்தந்தது. முத்தாய்ப்பாக அவருக்கு முனைவர் பட்ட ஆய்விற்கான முனைப்பினையும், அதற்கான வாய்ப்பினையும் வழங்கியது. நான் தான் அவரின் இரு வாய் மொழித்தேர்விற்கும் அருகிருக்கும் வாய்ப்பினை இழந்தேன். என் ஆய்வேடும் அங்கீகரிக்கப்பட்டு என் வாய் மொழித்தேர்வு முடிந்து என் ஆய்வினை தென்கொரியாவில் தொடர்வதற்காகச் செல்லவேண்டிய நாளும் வந்தது. எனக்குத் திருமணத்திற்கு பெண்பார்த்து திருமணம் முடிப்பதையும், ஊரில் எங்களின் வீடு கட்ட வேண்டிய பொறுப்பும் வழக்கம் போல அண்ணாவின் தலையில் விழுந்தது. நானும் அவரைப் பிரியும் நாள் சடுதியில் வந்து தொலைத்தது. தென்கொரியா செல்ல நானும், சென்னை வரை வழியனுப்ப என்னுடன் அவரும் என்று இருவரும் தொடர்வண்டியில் சென்னை சென்று பிறகு நான் கொரியாவிற்குப் பயணமானேன். வானூர்தியில் அமரும் வரை எனக்கு எதுவும் தெரியவில்லை வானூர்தி பறக்கத் தொடங்கும் போது துக்கம் என் நெஞ்சை அடைத்தது. அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கு ஒரே அங்கலாய்ப்பாய் இருந்தது. அவரின் முனைவர் ஆய்விற்கு உடனிருக்க முடியாமை இன்றும் கூட என்னைத் துக்கத்தில் ஆழ்த்தும். நான் அவருக்கு ஆறுதலாக ஒருபோதும் இருந்ததில்லை ஆனால் கூடவே இணைபிரியாமல் தோளோடு தோள் தொங்கி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னை வடிவமைத்ததில் எவரையும் விட அவரின் பங்கு மிக மிக அதிகம். அவர் செய்யலாம் என்றால் எனக்கு மலையையும் புரட்டிவிடும் திண்மை வந்து சேர்ந்துவிடும் மாயம் நானறியேன். 

No comments:

Post a Comment