Pages

7 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -2

 

தொடர் வண்டி டார்பி (Derby)க்கு 25 நிமிடங்களில் சென்று சேர்ந்தது. நான் வேறு வழியை அடைத்துக் கொண்டு இருந்தேன். வண்டி நிற்கவும் மெதுவாகத் தான் என்னால் இறங்க முடிந்தது. எனக்குப் பின்னால் இறங்க வேண்டியவர்கள் வரிசையில் நிற்பது வேறு என்னைப் பதட்டமடையச் செய்தது. நான் இறங்கிய பிளாட்பாரம் எண் 2 அடுத்த வண்டி இன்னும் 35 நிமிடங்களில் பிளாட்பாரம் ஒன்றிலிருந்து செல்லும். என் சுமைகளை அடுத்த நடைமேடைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தொடர்வண்டி மெதுவாகச் செல்ல ஆரம்பிக்கவும், அந்த இரண்டாம் எண் நடைமேடை காலியாகவும் சரியாக இருந்தது. பின்னர் இரண்டு கைகளிலும் இரண்டு பெட்டிகளை இழுத்துக் கொண்டு சுமைதூக்கியை (Lift) நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எனது முன்பதிவுஅமைதிப் பெட்டியில் (Quiet Coach) என்பதால் அது சரியாக நிற்கும் இடத்திற்கு அருகில் என் பெட்டிகளை வைத்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தேன். சுமைகளைத் தூக்கி வந்ததால் இவ்வளவு நேரமும் குளிர் தெரியவில்லை. உடலின் வெப்பமும் மனதின் வேகமும் சிறிது குறைந்த‌ போது குளிரின் தன்மையை உணர ஆரம்பித்திருந்தேன். இந்த டார்பி தொடர்வண்டி நிலையம் லஃபரோ போன்று சிறிய நிலையம் அல்ல.

 
டெர்வன்ட் ( River Derwent) நதிக்கரையில் அமைந்துள்ள இந்த டார்பி நகரம் டார்பி ஷெயர் கவுன்டியின் தலைநகரமாகும். இங்கிலாந்தின் 18வது பெரிய நகரமான இதன் பெயர்க்காரணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இங்கிலாந்து ரோமன் அரசின் காலணியாக இருந்தபோது இது ஐந்து கோட்டை நகரங்களில் ஒன்றாக 'மான்களின் கிராமம்' ( "Village of the Deer") என்கிற பொருளில் Deoraby என்று அழைக்கப்பட்டு பின்னர் டார்பி (Derby) என்றானது. தொடர்வண்டிகளின் தொடக்க காலத்திலிருந்து டார்பி மிக முக்கியமான தொடர்வண்டி நிலையமாக இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் லண்டனுக்கும் எடின்பராவுக்கும் இடையில் இருந்த மிக முக்கியமான நிலையம் இன்றும் கூட அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. மேலும் டார்பி தான் பிரிட்டனின் மிக முக்கியமான தொழிற்புரட்சியின் தலைநகரமாக 18ம் நூற்றாண்டில் இருந்திருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக இயக்கப்பட்ட புகைவண்டி இயந்திரம் கூட இங்கு செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது தான். பணக்காரர்களின் அடையாளமான ரோல்ஸ்ராய் கார் தொழிற்சாலையும் இங்கு தான் 1907ல் தொடங்கப்பட்டது. இப்போதும் கூட இந்த நகரில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக இருக்கும் பல கட்டிடங்களைக் காண முடியும். இங்கு உள்ள 212 அடி உயரமுள்ள கிருத்தவ தேவாலயம் கட்டடக்கலையின் உச்சமாக இன்றளவும் இருக்கிறது.


இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு பலமுறை நண்பர்களுடன், அலுவல் காரணமாக, குடும்பத்தினருடன் என்று பல்வேறு காரணங்களுக்காக வந்திருக்கிறேன். தனியாக இப்போது தான் வந்திருக்கிறேன். தூரத்திலிருந்து வந்து நின்ற மற்றொரு தொடர்வண்டியில் என் நண்பர் ஒருவர் இறங்கினார். நான் அவரைக் கவனித்த அதே நேரத்தில் அவரும் என்னைப் பார்த்து கையசைத்து விட்டு அருகில் வந்து பேசலானார். அவர் என்னிடமிருந்து விடைபெறவும் நான் செல்ல வேண்டிய தொடர்வண்டி  (cross country express) வருவதற்கும் சரியாக இருந்தது. என் முன்பதிவு பெட்டி சரியாக என் முன்னால் நின்றது. அதன் கதவுகள் திறக்கப்பட என் பெட்டிகளை ஒவ்வொன்றாக் உள்ளே ஏற்றி அதற்கான இடத்தில் வைத்துவிட்டு என் இருக்கை நோக்கி நடந்தேன். பெட்டியில் மொத்தமாக என்னையும் சேர்த்து பத்துப் பேர் இருந்திருப்பார்கள். இது ஒன்றுதான் இந்தப் பெட்டிகளில் வசதி. அலைபேசியில் பேசக்கூடாது, சத்தம் போடக்கூடாது என்பது இந்தப் பெட்டிகளின் விதி. பெரும்பாலும் செய்தித் தாள் திருப்பும் சத்தமும் மடிக்கணினி சத்தமும் சில நேரம் கேட்கும். மெல்ல தொடர்வண்டி கிளம்பவும் மிகவும் வெப்பமாக உணர்ந்தேன். என் மின்னணு புத்தகப் படிப்பான் (e book reader !!!...இதற்குச் சரியான பெயர் இருந்தால் சொல்லவும்) எடுத்து வைத்துவிட்டு அகலமான கண்ணாடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்த நேரத்தில் தொடர்வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.

தொடரும்....

No comments:

Post a Comment