Pages

9 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -3

மெல்ல நகர்ந்த தொடர்வண்டி செஸ்டர்பீல்டு நோக்கி வேகமெடுக்க ஆரம்பித்தது. என் மின்னணு புத்தகப் படிப்பானை எடுத்து வைத்து விட்டு என் ஸொவெட்டரைக் கழட்டி வைத்துவிட்டு என் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் சூரியன் மேகங்களை விட்டு வெளியே வரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பசுமை வண்ணம். ஏனோ என் மனம் நம் ஊரின் தொடர்வண்டிப் பயணத்தினையும் அதன் வெப்பக் காற்றையும் அசைபோடத் தொடங்கியது. தொடர்வண்டியை ஆங்கிலேயர்கள் என்னவோ அவர்களின் வியாபாரத் தேவைகளுக்காகத் தான் அமைத்தார்கள் எனினும் இன்று தொடர்வண்டி இல்லாமல் இந்தியாவின் மூலை முடுக்குகளை இணைப்பது என்னவோ குதிரைக் கொம்பு தான். ஆனால் இன்னும் நம் தொடர்வண்டிகளின் தரமும் சேவையும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. வசந்த காலம் பிரிட்டன் முழுவதும் ஆரம்பித்திருக்கிறது. மார்ச் மாதத்தின் இறுதி வாரங்கள் நாடு முழுவதும் ஒரு உஷ்ண அலை, வெப்பம் 23-28 டிகிர் செல்சியஸ் பதிவாகியது. இது கடந்த 50 வருடங்களில் மிகவும் அதிகம். ஆனால் இந்த வாரம் அப்படியே நிலைமை தலைகீழ். வெப்பநிலை 10க்கும் குறைவு, மேலும் ரோடுகளில் உறைபனி அபாயமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனாலும் வசந்த காலத்தின் வருகையை இருப்புப் பாதை ஓரங்களில் பூத்திருக்கும் மலர்களிலும், துளிர்க்கும் இலைகளிலும் காண முடிந்தது. 100 அடி தூரத்திற்கு மேல் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை ஒரே புகை மூட்டம் வேறு. 

கம்பளி போர்த்திய அந்த ஆட்டுக்குட்டிகளும் குதிரைகளும் என்ன தான் இந்தக் குளிரில் தலையைக் கவிழ்ந்து செய்து கொண்டிருக்கும். ஈரமான புல் நன்றாக இருக்குமா என்ன? சிறிது நேரம் இதைச் சுற்றித்தான் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. பஞ்சுப் பொதிகள் போல ஆடுகள் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன மேய்ப்பன் யாருமின்றி. எங்கும் பசுமை தரை முழுதும், நீண்ட மரங்கள் யாவும் தன் வேர் எப்படி நிலத்தினுள் புதைந்திருக்குமோ அப்படி அதன் கிளைகளும் இலைகளற்று. நிலப்பரப்புகள் எதுவும் சமதளத்தில் இல்லை மேடும் பள்ளமும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தது. நிலங்களின் மேடுகளில் சில அப்படியே மைக்ரோ சாப்ட்டின் லோகோ போலவே இருந்தது. இந்த மாறி வரும் நிலப்பரப்பு தான் பிரிட்டனை மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேறுபடுத்துவதாக என் நண்பன் ஒருவன் ஒருமுறை சொன்னது நினைவிற்கு வந்தது. நான் எந்த ஐரோப்பிய நாடும் இதுவரை சென்றதில்லை எனவே எனக்கு இதைப் பற்றிய எந்த அபிப்ராயமும் இல்லை. இந்த நேரத்திற்கெல்லாம் தொடர்வண்டி நல்ல வேகமெடுத்திருந்தது. தூரத்தில் தெரிந்த மரங்கள் தொடர்வண்டியோடும் அருகிருந்த மரங்கள் பின்னோக்கி வேகமாகவும் சென்று கொண்டே இருந்தன. இது ஒரு இயற்பியலின் எளிமையான சக்தி வாய்ந்த தத்துவம்.மெல்ல மனது சார்பியல் தத்துவம், இயக்கம், பூமியின் சுழற்சி, ஒளியின் வேகம் என்று சிந்திக்கத் தொடங்கியது. எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் விபத்தில்லை. எல்லாவற்றுக்குள்ளும் ஒரு ஒழுங்கு இருக்கிறது, எல்லா ஒழுங்கிற்குள்ளும் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கும் இருக்கிறது. இன்னும் அறிவியல் தெளிவு படுத்த வேண்டியவை என்கிற பட்டியல் மிகவும் அதிகம் என்று தான் தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற சிந்தனையும், பார்வையும் தொடர்வண்டியில் செய்யப்பட்ட அறிவிப்பு கலைத்துப் போட்டது. அடுத்த நிலையம் இன்னும் சிறிது நேரத்தில் வருகிறது என்றும் உங்கள் உடமைகளைச் சரி பார்த்துக் கொண்டு இறங்கத் தயாராகவும்...என்ற அறிவிப்பினைக் கடந்து என் இருக்கைக்கு ஆபத்தும் வந்து சேர்ந்தது.

_________________________________________________________________________________________________________ 

இயற்பியலின் தத்துவங்கள் குறிப்பாக சார்பியல் பற்றியும் விளக்கங்கள் பற்றியும் நிறைய தமிழ் வலைப்பூக்கள் காணக் கிடைத்தது. அவற்றில் சில மேலே படிக்க

http://rajasankarstamil.blogspot.co.uk/2010/08/41.html
http://puthiyavanonline.blogspot.co.uk/2008/11/blog-post_25.html
http://www.jeyamohan.in/?p=21446

_________________________________________________________________________________________________________ 

No comments:

Post a Comment