Pages

11 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -4


செஸ்டர்ஃபீல்டு நிலையத்தில் வண்டி நிற்கவும், அளவுக்கு அதிகமானவர்கள் ஏறினார்கள். நான் பயணம் செய்த பெட்டி மனிதர்களால் நிறையத் தொடங்கியது. ஒருவர் என்னருகில் வந்து இது என் இருக்கை என்று என்னோடு மல்லுக்கு நின்றார். நான் இருந்த இருக்கை எண் F13.

நான் ' உங்களின் இருக்கை எண் என்ன?'

அவர் '13 தான். நீங்கள் என் இருக்கையில் தான் அமர்ந்திருக்கிறீர்கள்'

'இல்லை. இது என் முன்பதிவு இருக்கை, உங்களின் பயணச்சீட்டை சரிபாருங்கள்'

'நான் தவறு செய்வதில்லை. இது என் முன்பதிவு இருக்கை. தயவு செய்து எழுந்திருங்கள்' மிகவும் உறுதியாகச் சொன்னார்.

நான் என் பயணச் சீட்டை அவரிடம் காண்பித்தேன். என்னிடம் வாக்குவாதம் செய்தவர் கொஞ்சம் வயதானவர் வேறு. எனக்கு இருக்கை மாறி பயணம் செய்வதில் ஒன்றும் சிரமம் இல்லை தான். ஆனால் எங்களின் வாக்குவாதத்திற்கு இடையே அந்தப் பெட்டி முழுவதும் நிரம்பி விட்டிருந்தது. மேலும் என் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பெட்டி பெட்டியாகச் செல்வது என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

ஒருவழியாக நான் என் குரலை உயர்த்த எத்தனித்து அவரிடம் ' உங்களின் பயணச்சீட்டை நான் பார்க்கலாமா' என்றேன். அவர் 'கண்டிப்பாக' என்று தனது பயணச்சீட்டைத் தேட ஆரம்பித்தார். 

  
இதற்குள் தொடர்வண்டி நகர ஆரம்பித்திருந்தது. அவரின் முன்பதிவு இருக்கை C13. அவர் தவறாகப் புரிந்து கொண்டு என்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனக்கு கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. அவர் என்னருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்து கொண்டு 'மன்னிக்கவும், நான் இங்கே அமர்ந்து இருந்து விட்டு அடுத்த நிலையம் வரும்போது மாறிக் கொள்ளவா ?' என்றார். நானும் ' மிக்க மகிழ்ச்சி, எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை' என்றேன்.

பின்னர் சிநேகமாக ' நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' என்றார். நான் என் வரலாற்றை அவருக்குச் சுருக்கக் குறிப்பு வரைந்தேன். அவரைப் பற்றி நான் கேட்காமலே சொல்ல ஆரம்பித்தார். தன் வரலாறு சொல்ல ஆரம்பித்த‌ ஸ்டுவர்ட்க்கு வயது 68, தற்போது ஸ்காட்லாந்தில் வசிக்கும் அவர் ஒரு மீனவர் என்பதும் ஏதோ ஒரு வேலை நிமித்தம் அவர் செஸ்டர்ஃபீல்ட் வந்திருக்கிறார் என்பதும் தெரிந்து கொண்டேன். அவரின் வயதை என்னால் 68 என்று நம்ப முடியவில்லை. நல்ல திடகாத்திரமான உடம்பு. அவரின் கை குழுக்கலில் இருந்த உறுதி என்பன எல்லாம் என்னை அசர வைத்தன. பின்னர் மீன் பற்றிய பேச்சு வந்தது. நான் அவரின் மீன் பிடிக்கும் தொழில் பற்றிக் கேட்டேன். அவரின் கூட்டுறவு மீன் பிடிக்கும் முறை பற்றிச் சொன்னார். அவர்கள் பிடிக்கும் மீன்களை நேரடியாக மக்களிடமே அன்றாடம் விற்கிறார்கள். இடைத்தரகர்கள் யாரும் அல்லாமல். மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருவதாகவும் சொன்னார். என் ஆய்வு பற்றியும் பேச்சுத் திரும்பியது. நான் என் ஆய்வு பற்றியும் அதன் சமூக அக்கறை பற்றியும் சொல்லி முடித்தேன். அதற்குள் ஸெஃபீல்ட் தொடர்வண்டி நிலையம் வந்திருந்தது. ஸ்டுவர்ட்டும் என்னிடம் விடைபெற்று தன் பெட்டிக்குச் செல்வதாகவும் அது ஜன்னலோர இருக்கை என்பதால் செல்வதாகவும் கூறினார். மேலும் அவரின் பெரிய உருவத்தை அந்த இருக்கையில் இருத்த முடியாமல் சிரமப் பட்டார். அவரின் முன்பதிவு இருக்கை வயதானவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த இருக்கைகள் கொஞ்சம் அகலமாகவும், கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளும் வசதியுடனும் இருக்கும்.

 


ஸெஃபீல்டு (Sheffield) ஒரு அருமையான நகரம். யார்க்ஸயரில் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் கவுன்டிகளில் யார்க்ஸயர் தனித்துவம் வாய்ந்தது. பழமையும் புதுமையும் மிகச்சரியான கலவையான இந்த நகரம் ஸெஃப் நதிக்கரையில் ( River Sheaf) அமைந்துள்ளது. இரண்டு மூன்று முறை என் நண்பருடன் வந்துள்ளேன். ஒரு முறை நண்பரின் நண்பரைப் பார்க்கவும் மறு முறை இங்குள்ள மீடொஹாலில் (Meadow Hall) எனக்கு கோட் (coat) எடுப்பதற்கும் வந்துள்ளேன். மூன்றாம் முறை விசித்திரமாக நானும் நண்பரும் யார்க்ஸயரின் லீட் (Leeds) நகரிலிருந்து வரும் போது புதிதாக ஒரு வழியில் லஃபரோ செல்லலாம் என்றெண்ணி எங்கெங்கோ அலைந்து கடைசியில் ஸெஃபீல்டு செல்வது என்று முடிவாகி அங்கிருந்து வழியை நாம் கண்டுபிடிக்கலாம் என்று சென்றோம். இது தவிர தொடர்வண்டி மாறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில், தொடர்வண்டி நிலையத்திற்கு சில முறை வந்திருக்கிறேன். மிகவும் அழகான நகரம்.

நானும் நண்பரும் எனக்கு கோட் (Coat) வாங்க அலையோ அலையென்று அலைந்து மீடொஹாலில் வாங்கியது நினைவிற்கு வந்தது. மிகவும் குறைந்த விலையில், நல்ல தரத்துடன், நல்ல பிராண்ட் என்று நான் அடுக்கிய கட்டுப்பாட்டுக்குள் வாங்க எவ்வளவு மெனக்கட வேண்டும் என்பது அன்று தான் பார்த்தேன். நாம் எப்போதாவது அணியும் இதற்கு எதற்கு யானை விலை கொடுக்க வேண்டும் என்று லெஸ்டரிலிருந்து ஸெஃபீல்டு வரை எங்களின் பயணம் ஒரு கோட் தேடி நீண்டது. நண்பர் என்னோடு கடைகளுக்கு வருவது என்றாலே ஏதோ சுனாமியைப் பார்த்தவர் போல ஓட ஆரம்பித்ததும் அன்றிலிருந்து தான். எங்காவது போகலாம் என்று கூப்பிட்டால் ஒரு பத்து முறையாவது கேட்பார் 'எங்கே போகப்போறோம், கடைக்கு இல்லை தானே' என்று. அன்றும் அப்படித்தான் 'இங்கே உன்னால எடுக்க முடியலைன்னா உனக்கு தனியா துணி எடுத்துதான் தைக்க வேண்டும்' என்று கூறித்தான் அழைத்துச் சென்றார். எனக்கு மட்டும் என்ன அவரை டார்ச்சர் பண்ண வேண்டும் என்ற வேண்டுதலா என்ன ? ஸெஃபீல்டுக்கு மதியம் ஒரு மணிக்குச் சென்று இரவு 10 மணிக்குத் தான் அங்கிருந்து கிளம்பினோம்.அதிலிருந்து நான் ஷாப்பிங் என்றாலே என்னைக் கண்டு ஓட ஆரம்பித்து விடுவார். இது மாதிரியான அனுபவங்கள் தான் ஸெஃபீல்டு பற்றி எனக்கு. மேலும் இங்கிலாந்தின் கண்கவர் நிலப்பரப்புகளைக் காண வேண்டும் எனில் நீங்கள் ஸெஃபீல்டிலிருந்து மான்ஸஸ்டருக்கு தொடர் வண்டியில் பென்னீஸ் (Sheffield to Manchester via the pennines) வழியாகச் செல்ல வேண்டும், நிச்சயம் இன்னொரு முறை பயணம் செய்யத் தூண்டும் தொடர்வண்டிப் பாதை அது. நான் இங்கு காரில் வந்திருக்கிறேன் என்றாலும் எனக்கு தொடர்வண்டிப் பயணம் தான் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மெல்ல தொடர்வண்டி தனது பயணத்தை ஆரம்பித்தது லீட்ஸ் (Leeds) நோக்கி. மொத்தம் 40 நிமிடப் பயணம் தான். நிறையப் பேருக்கு லீட்ஸ் பற்றியும் அங்கு உள்ள கிரிக்கெட் மைதானம் பற்றியும் தெரிந்திருக்கும்.

 
எனக்கு லீட்ஸ் என்றால் ஒன்று மட்டும் தான் நினைவிற்கு வரும். அது கடந்த வருடம் என் ஆய்வின் திட்ட வளர்ச்சி பற்றிய ஒரு கூட்டத்திற்குச் சென்றது. என் ஆய்வின் ஆய்வாளருடன் தான் அந்தப் பயணம். நான் இப்போது பயணப்படும் அதே வழித்தடத்தில் தான் அதுவும். வாழ்வில் என்னால் எப்போதும் மறக்க முடியாத பயணம் அது. என் ஆய்வுத் திட்டப் பணிகள் எதிர்பார்த்த இலக்கை நோக்கிப் பயணிக்கவில்லை. ஆனால் அது தோல்வியும் அல்ல. ஆய்வும் கூட ஒரு நோக்கமற்ற நோக்குடன் தான் ஆரம்பமானது. அதில் நான் மட்டுமே பங்கு பெற்றிருக்கவில்லை. மொத்தம் ஆறு பெரிய பல்கலைக் கழகங்கள் சேர்ந்து நடத்தும் ஆய்வு. எல்லோரும் ஒரே மாதிரியான பங்களிப்பைச் செய்தால் தான் அது சரியான வழியில் சென்றிருக்கும். ஆனால் அவரவர் தன்முனைப்புக் கொண்டு நான், நீ என்கிற போக்கில் சற்று பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம். என் ஆய்வு மேலாளர் என்னை பழியிடுவது என்ற முடிவுடன் அந்த review meeting ற்கு வந்து கொண்டிருந்தார். எனவே தான் சொல்வதை அங்கே சொல்லவேண்டும் என்கிற ரீதியில் தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். யாரும் எனக்கு அப்படி ஒரு அறிவுரை வழங்கியதில்லை. வாய் இருப்பதற்காக கண்ட கண்ட உதாரணம் எல்லாம் சொல்லி அவர் வழி நெடுக எனக்களித்த அறிவுரை என்னை எரிச்சலின் உச்சத்திற்குத் தான் கொண்டு சென்றது. நான் என் ஆய்வுகளை மனப்பூர்வமாகத் தான் செய்கிறேன், எனக்கு இதில் எந்த ஒரு சங்கடமோ இல்லை நாம் வேறு வேலை பார்த்திருக்கலாம் என்றோ ஒரு போதும் நினைத்தது இல்லை அந்த அறிவுரைக்குப் பின் முதல் முறையாக நினைத்தேன் 'தெரியாமல் இந்த வேலைக்கு வந்து விட்டோம் என்று. இவன் கிட்ட எல்லாம் நாம கேட்கணும் என்கிற தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டு review meeting ல் இவன் கழுத்தை அறுப்பது என்கிற முடிவுடன் அவர் சொன்ன அத்தனைக்கும் தலையாட்டிக் கொண்டே வந்தேன். நான் அந்த நிமிடம் வரை சென்ற ஆண்டின் இறுதியில் இந்தியா திரும்பி விடும் எண்ணத்தில் தான் இருந்தேன். போதும் வெளிநாடுகளில் வேலைபார்த்தது என்ற நினைப்பிற்கு வந்திருந்தேன். இங்கிருப்பதால் எந்த ஒரு நலனும் இல்லை. எல்லோரையும் பிரிந்து எதற்காக இங்கே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் வேகமாக வளர்ந்திருந்த காலகட்டம் வேறு. என் எண்ணத்தை நான் அடியோடு மாற்றிக் கொண்டதும் கூட லீட்ஸ்ல் தான். அந்த review meetingல் அவர் என்னைக் குறை கூறினார் நான் ஏதோ சோம்பேறி என்பது போலவும் என்னால் தான் இந்தத் தாமதம் என்பது போலவும் பேசலானார். அவரஇதனைத் தான் சொல்லப் போகிறார் என்று எனக்குத் தெரியும் என்றாலும், மிகவும் கடுமையான வார்த்தைகளை அவர் பிரயோகித்த விதத்தில் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன். பேசுவதற்கு என் முறை வந்தபோது நான் என் பக்க வாதங்களை சரியான காரணங்களுடன் என்மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் என்னை என் ஆய்வில் கவனம் செலுத்த விடாமல் என் ஆய்வாளர் செய்வதாகவும் கடுமையாக ஆனால் உறுதியாக குற்றம் சாட்டினேன். என்னிடமிருந்து அவர் இதனை எதிர்பார்க்க வில்லை. எனவே என்னுடன் பேசுவதை அந்த இரண்டு நாளும் தவிர்த்து லீட்ஸ் தொடர்வண்டி நிலையத்தில் தான் சொன்னார். 'பிரிட்டனில் நீ எப்படி வேலை செய்கிறாய் என்று பார்க்கிறேன், இது தான் நீ செய்யும் கடைசி வேலை' என்றார். ' சரி பார்க்கலாம், இங்கு தான் வேலை பார்ப்பேன், உங்களால் என்ன செய்ய முடிகிறது என்று' கிட்டத்தட்ட சவால் விடும் தொனியில் தான் சொன்னேன். அது இப்போது உண்மையாகி நான் வேலையில் சேரப் போகிறேன் என்கிற கூடுதல் மகிழ்ச்சி வேறு என்னுள். எனவே லீட்ஸ் தொடர்வண்டி நிலையம் என் வாழ்வில் திருப்புமுனை என்று தான் கூற வேண்டும்.

 Coffee and Croissants 
அது தவிர லீட்ஸில் மூன்று நான்கு நாட்கள் எல்லாம் தங்கியிருந்திருக்கிறேன். யார்க்ஸயர் கவுண்டியின் காலை உணவு என்பது இங்கிலாந்தின் காலை உணவுகளில் சிறந்தது என்பது என் தாழ்மையான கருத்து. அவர்களின் அந்த சிற்றுண்டி இல்லை இல்லை பெரு விருந்து என்பதை அனுபவித்தால் உணர முடியும். பிரிட்டனைப் பொறுத்த வரை நீங்கள் எந்த ஹோட்டலில் தங்கினாலும் பெரும்பாலும் காலை உணவுடனே உங்களின் அறை கிடைக்கும். வெகு சில சமயங்களில் தான் உங்களின் அறை வாடகையுடன் தனியாக காலை உணவிற்கு என்று கட்டணம் சேர்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் அந்தந்தப் பிராந்திய உணவு வகைகள் மெனுவில் இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். கீழ்வரும் இந்த பெரிய பட்டியலுடன் டீ அல்லது காபி இவற்றிலும் சில வகைகள் இருக்கும் யார்க்ஸயரின் காலை உணவில் ( நல்ல தரமான தங்கும் விடுதிகளில்) பன்றி இறைச்சி,  புகையில் வாட்டப்பட்ட ஒருவகை மீன் ( kipper), புகையில் வாட்டிய சால்மன் வகை மீன் முட்டைத் துருவல், யார்க்ஷயர் போர்க் sausages, வீச்சு முட்டைகள் இவற்றுடன் கருப்பு புட்டிங், மெலிதாக வாட்டிய‌ தக்காளி, காளான், வறுத்த ரொட்டி, உருளைக்கிழங்கு,  வேகவைத்த பீன்ஸ், தக்காளி, காளான்கள் சீஸ் மற்றும் / அல்லது டோஸ்ட் செய்யப்பட்ட‌ பீன்ஸ் என்று நீளும். இதனுடன் பெரும்பாலும் சீரியலின் வகைகளும், ஓட்ஸ் என்பனவும் இடம்பெறும். நன்றாகச் சாப்பிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது தான் உண்மை.

தொடரும்......


No comments:

Post a Comment