Pages

21 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -5

தொடர்வண்டி லீட்ஸ்லிருந்து யார்க் நோக்கிப் புறப்பட்டது, எனக்கும் பசிக்க ஆரம்பித்தது. மனைவி கொடுத்த புளிச்சாதத்தை கொஞ்சம் தயக்கத்துடன் தான் பிரித்தேன். எனக்கு நேரெதிர் இருக்கையில் இருந்த ஒரு பெண் சட்டெனத் திரும்பி வேறு பார்த்து என் வயிற்றில் புளி கரைத்தார். நான் கொஞ்சம் அவசர அவசரமாகத் தான் சாப்பிட்டு முடித்தேன். என்னை கொஞ்சம் ஆசுவாசிப் படுத்திக் கொள்ள சாப்பிட்டு முடித்து விட்டு பெட்டியை விட்டு கொஞ்சம் வெளியே வந்து காலாற நின்றுவிட்டு மீண்டும் என் இருக்கையில் சென்று என்னைப் பொருத்திக் கொண்டேன். தொடர்வண்டி வேகமெடுத்துச் சென்று கொண்டிருந்தது. வெளியே ஒரே கும்மிருட்டாய் வானம் இன்டிபென்டன்ஸ் டே படத்தில் வருவது போன்று குடைபிடித்திருந்தது. மெல்லச் சாரல் ஒரீரு துளியாய் என் ஜன்னலெங்கும் பட்டுத் தெரித்தவண்ணமாய் காற்றின் உந்துதலைப் புறந்தள்ள முடியாமல் வேகமாய் பின்னோக்கி விந்துக் கூட்டங்களைப் போல என் பின்னால் சென்று மறைந்தது. அந்த மழைத்துளியின் வீரியமும் காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்தது போல ஒரு பிரமிப்பை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்ட தொடர்வண்டி கொடுத்த வேளையில் கண்ணாடி ஜன்னல் முழுதும் யாரோ கல்லைக் கொண்டு எறிந்தது போல சடச்சட என சத்தம். ஆலங்கட்டி மழை பெரிய பெரிய பனிக் குண்டுகளாய் எங்கும் பொழிய ஆரம்பித்திருந்தது. நான் மெய்மறந்து அதனை ரசிக்கலானேன். இந்தச் சூழல் சற்று நேரம் தான் பின்னர் மழையும் பனியும் கலந்த கலவையாய் சிறிது நேரமும் பின்னர் மழைமட்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது. ஆலங்கட்டி மழை எப்படித் தோன்றுகிறது ?.பனிக்கட்டி மழை அல்லது சிறுசிறு பனிக்கட்டிகளாய் பொழிவது ஆலங்கட்டி மழை. இது சாதாரணமாக அதிக வெப்பமும் கொஞ்சம் குளிரும் இருக்கும் பகுதிகளில் நிகழும். நிலப்பரப்பில் இருக்கும் அதிக வெப்பத்தால் (15-25டிகிரி) ஈரப்பதமான  காற்றின் லேசான தன்மை அதனை மேல்நோக்கிச் செலுத்துகிறது. இந்தக் காற்றானது மேலே செல்லும் போது கிட்டத்தட்ட உறைநிலைக்குச் செல்கிறது. அப்படி உறை நிலையை அடையும் ஈரப்பதமான காற்றானது பனிக்கட்டிகளாய் மாறி கீழ் நோக்கி வரும் போது மேலும் ஈரப்பதத்தின் தன்மை கொண்டு பெரிய பனிக்கட்டிகளாய் பொழிகிறது. சென்ற வாரம் முழுதும் அடித்த வெயிலும் இந்த ஆலங்கட்டி மழைப் பொழிவிற்குக் காரணம். இதுவரை விழுந்த ஆலங்கட்டி மழைகளிலேயே 2010-ம் ஆண்டு ஜுலை மாதம் 23-ம் தேதி அமெரிக்காவின் விவியன் என்னுமிடத்தில் (Vivian, South Dakota) 20 செ.மீ விட்டமும் 0.88கிலோ கிராம் எடையும் கொண்ட பனிக்கட்டி விழுந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஆலங்கட்டி மழையால் ஏற்படும் பயிர் சேதத்தை அறிவுறுத்த கிருத்துவப் பேராலயங்களின் மணிகளை அடித்து மக்களை எச்சரித்துள்ளனர். 
 

தொடர்வண்டி மெல்ல யார்க் (York) நிலையத்திற்குள் நுழைந்தது. யார்க் நகரம் ஓஸ் மற்றும் ஃபோஸ் நதிகள் (Rivers Ouse and Foss) சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் சுவர் நகரம். வடக்கின் தலைநகரம் என்று இங்கிலாந்தில் அறியப்பட்ட நகரம். இதுவும் கூட யார்க்ஸயரில் இருக்கும் நகரம். யார்க் தொடர்வண்டி நிலையம் 1839 முதல் செயல்படுகிறது. லண்டனிலிருந்து எடின்பரா செல்லும் தொடர்வண்டிகள் நிச்சயம் நின்று செல்லும் வடகிழக்கு தொடர்வண்டி மண்டலத்தின் தலைநகரம்.மிகப் பிரமாண்டமான நான்கு கம்பளிப் பூச்சிகளை வரிசையாக நிற்க வைத்தது போன்ற இரும்புக் மேற்கூரை நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பது மட்டும். நடைமேடைகளுக்குச் செல்லும் இணைப்புப் பாலம் கூட கொஞ்சம் வேறுபட்டுத் தான் இருக்கும். இதற்குக் காரணம் முதலில் இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு பின்னர் மேற்கூரை அமைக்கப்பட்டது தான். இங்கு காட்டப்பட்டுள்ள படத்தில் இருப்பது தான் லண்டன் முதல் ஸ்காட்லாந்தின் இறுதி வரை உள்ள தொடர்வண்டிப் பாதை. இந்த நகரம் வேலைவாய்ப்பில் 90% தன்னிறைவை அடைந்த நகரம். அதிகம் வெளிநாட்டினரை ஈர்க்கும் பிரிட்டனின் நகரங்களில் 13வது இடத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த ஊர் சாக்லெட்டுகள் மிகவும் பிரபலம். நாம் சாப்பிடும் பெரும்பாலான பிரசித்தி பெற்ற சாக்லெட்களின் தலைநகராய் இருந்தது.இப்போது அவற்றில் பெரும்பாலனவை மூடப்பட்டு விட்டன.எப்போதும் யார்க் வழியாகச் செல்லும் தொடர்வண்டிகள் சிறிது நேரம் நின்று தான் செல்லும், இன்றும் அது போலத்தான். இந்த நிலையத்திற்குப் பின்னர் தொடர்வண்டி டார்லிங்டன் மற்றும் டர்காம் நிலையங்களில் தான் நிற்கும். யார்க்கிற்கும் டார்லிங்டன்னுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புகள் பெரும்பான்மை சமதளமாக எங்கெங்கும் பச்சைப் போர்வை போர்த்தியது போன்று அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இப்போது தொடர்வண்டி மெல்ல யார்க் நிலையத்திலிருந்து புறப்பட்டு டார்லிங்டன் நோக்கிச் செல்லத்தொடங்கியது...

No comments:

Post a Comment