Pages

2 April 2012

கோவை நினைவுகள் -9


நண்பர்கள் இன்றி எவரின் உலகமும் நிறைவு பெறுவதில்லை. பால்ய பருவம் தொட்டு நரை கூடி கிழப்பருவம் எய்தும் வரை நண்பர்கள் தான் நமது வாழ்வின் பெரும் பகுதியை வடிவமைக்கிறார்கள். சில சமயம் கெட்ட விதமாக பல சமயங்களில் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும் விதமாக. என் நண்பர்கள் தான் சமூகத்தின் பல்வேறு தளங்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள். நெஞ்சைத் தேய்த்து பனைமரமேற முயன்றதும், குரங்கு பெடல் கூட்டி மிதிவண்டி பழகியதும், வீதியின் புழுதிகளில் உருண்டு கபடி விளையாடியதும், தாஜ்மகாலின் வனப்பையும் , இமையத்தின் முகடுகளில் சுழித்துக் கொண்டோடும் கங்கையின் கம்பீரத்தையும், முக்தி தரும் காசியின் கோவில்களும், அழுக்கடைந்த கங்கையின் இன்னொரு முகமும், முழுநிலவில் யாருமற்ற வெட்டவெளி வானாந்திரத்தில் கொல்கத்தாவிற்கும் பூரிக்கும் இடையே எந்த ஒரு பயமும் இன்றி வழிதேடியலைந்ததும், என்று அத்துனையும் அனுபவங்களிலும் நண்பர்களே துணையிருந்து தொடர்ந்து இருக்கிறார்கள். வாழ்வில் தடுமாறும் போதும் தடம் மாறும் போதும் சில சமயங்களில் அன்பாய் பல சமயங்களில் அதட்டலாய் இன்றும் அவர்களின் வழிகாட்டல் தொடர்கிறது. எத்தனை விதமான நண்பர்கள் எனக்கு, எல்லோரைப் பற்றியும் எழுதவேண்டும் என்பதே என் அவாவும் கூட. இந்தியா முழுவதும் பயணம் செய்தும் எங்கும் முனைவர் பட்ட ஆய்வுக்கான இடம் கிடைக்கவில்லை. கடைசியில் கோவையில் கொங்கு நாடு அறிவியல் கல்லூரியில் சேரும் வாய்ப்பு அமைந்தது. சேர்ந்த பொழுதில் என் நண்பர் ஒருவர் வெளிநாடுகளிலும் விண்ணப்பிக்கலாம் என்று ஆசைத் தூபம் போட்டார். எனவே ஆய்வில் முனைப்பில்லாமல் வெளிநாடு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி விண்ணப்பங்கள் ஏக ஜரூராக அனுப்பிக் கொண்டும் அவ்வப்போது துறைக்குச் செல்வதுமாக பொழுதுகள் சென்றன. இப்படியே கிட்டத் தட்ட ஒருவருடம் சென்றது. பின்னர் என் நெறியாளரின் கண்டிப்பின் பேரில் என் ஆய்வில் கவனம் செலுத்தலானேன்.

அந்தக் காலக் கட்டங்களில் எனக்கு அறிமுகமான என் நண்பன் தான் செங்கோடன். எனக்கு அவரை என் முதுநிலை காலஙகளில் தெரிந்திருந்தாலும் முனைவர் பட்ட ஆய்வில் தான் நெருக்கமானார். பொறுமையின் சிகரம், கடினமான உழைப்பாளி, எப்போதும் சிரித்த முகம், அதிர்ந்து பேசாத தன்மை என்று இவையெல்லாம் தான் என் நினைவில் வரும்.எங்கள் கல்லூரிக்கு ஆய்வு என்பது புதியது என்பதால் ஓயாத வேலை இருந்து கொண்டே இருக்கும். தேனீ போல ஒவ்வொன்றாக தேடித்தேடிச் சேர்த்த காலங்கள் அவை. எப்போதும் வேலையாகவும், ஆட்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். பகலில் அவர்களுடன் பேசவும், தேநீர் அருந்தவுமே நேரம் சரியாக இருக்கும். பகல் வேளைகளில் அதிக பட்ச தொந்தரவுகளின் காரணமாக பெரும்பான்மை இரவில் மட்டுமே என் ஆய்வுப் பணிகளைச் செய்வது வழக்கம்.

நண்பரும் தனது M.Phil முடித்துவிட்டு வேலைக்காக ஆளாப் பறந்து கொண்டிருந்தார். வெகு தீவீர முயற்சிக்குப் பின் நண்பரும் ஒரு கல்லூரியில் அப்போது தான் விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தார். அவர் தன் கல்லூரி முடித்து நேராக எங்களின் ஆய்வகம் வந்து என்னுடன் நான் வீடு செல்லும் வரை கூடவே இருப்பார். நான் கிளம்பும் போது என்னுடன் வந்து என்னை பேருந்து ஏற்றிவிட்டு அவர் தன் அறைக்குச் செல்வார். சில சமயங்களில் இரவு 2 மணியெல்லாம் கூட ஆகும். அதுவரை அவர் அடுத்த நாள் வகுப்புக்கு தயார் செய்வதும் இல்லை என் ஆய்வில் உதவுவதுமாக இருப்பார். இது ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல என் ஆய்வு முடிந்து நான் முனைவர் பட்டம் வாங்க  எடுத்துக் கொண்ட நான்கு ஆண்டுகளும் தொடர்ந்தது. அவர் என்னுடன் இல்லை என்றால் அவர் கோவையில் இல்லை என்று பொருள். ஒரு நாள் கூட முகச் சுழிப்போ இல்லை கோபமோ கொண்டதில்லை. என்னிடம் அவர் கோபித்துக் கொண்டதே இல்லை. எப்போதும் என்னை brother என்று தான் அழைப்பார். இப்போதும் கூட யாராவது வீதியில் யாராவது brother என்றழைத்தால் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்க்கிறேன் செங்கோடனைத் தேடி. ஒரு நாள் மிகவும் சோகமாக என்னிடம் வந்து 'Brother, என்னை கல்லூரி விடுதில கண்டிப்பாத் தங்கச் சொல்லிட்டாங்க, என்ன செய்யுறதுங்க, எனக்கு துளி கூட விருப்பமில்லீங்க' என்றார். அப்போது நான் கிட்டத்தட்ட என் ஆய்வின் இறுதியில் இருந்தேன். அவரைச் சமாதானம் செய்வதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது. நீண்ட சமாதனத்திற்குப் பின் ஒரு வழியாக விடுதிக்குச் செல்ல சம்மதித்தார். அவரின் திருமணம் முடிந்து ஒரு முறை தொலைபேசினேன் பின்னர் இப்போது தான் வெகு காலத்திற்குப் பின் மீண்டும் பேசினேன். ஆனாலும் எப்போதும் என்னிடம் மாறாத அன்புடனே இருக்கிறார். அவர் பேசி நான் கேட்டதை விட நான் பேசி அவர் தான் அதிகம் கேட்டிருக்கிறார். என்னிடம் இப்போது கூட 'ஊருக்கு எப்போ வாரீங்க' என்பது தான் அவரின் முதல் வார்த்தையாக இருந்தது. 

1 comment:

  1. நம்ம ஏரியா பக்கம்...கொங்கு நாடு காலேஜ் ...நினைவுகள் தொடருமா...

    ReplyDelete