Pages

5 April 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -1

'என்னங்க நேரமாச்சு, இன்னும் கிளம்பலைங்களா' என்ற என் மனைவியின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. மெல்ல தலைமாட்டில் இருந்த என் அலைபேசியில் நேரம் பார்த்தேன், 6.30 எனக்காட்டியது. இன்னும் நேரம் இருக்கு என்றெண்ணிய படி மீண்டும் குட்டித்தூக்கம் போட நினைத்த அடுத்த கணத்தில் மீண்டும் 'ஏனுங்க டீ கொண்டாரவா' என்ற குரல். மெல்ல எழுந்து மடிக்கணினியை எழுப்பிவிட்டு அது எழுமுன் பல்துளக்கி முகம் கழுவச் செல்லும் போதே என் மனைவி டீயுடன் வந்தார். 

'டாக்ஸி சொல்லீட்டீங்களா, எல்லா documentம் எடுத்தாச்சான்னு பார்த்துருங்க, அங்க போயிட்டு அத scan பண்ணி அனுப்பு இத scan பண்ணி அனுப்புன்னு தொல்ல பண்ணாதீங்க' என்றவரிடம். 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க' என்றுவிட்டு முகம் கழுவச் சென்றேன்.

' கொஞ்சம் புளிச்சாதங் கிண்டுறேன், சப்பாத்தியும் செய்யுறேன்'

'நாந்தான் அங்க ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னேன்ல, இத டிரைன்ல தொரந்தாலே எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருக்கும், எதுவும் வேண்டாம்'

'என்ன பேசுறீங்க, 6 மணிநேரம் போகனும், அந்த சாண்ட்விச் எல்லாம் எப்படித்தான் மனுசங்க சாப்புடூறாங்களோ, அடுத்தவங்களுக்கா சாப்புடூறீங்க'

'நல்ல formல இருக்க‌ போல' என்று சொல்லிவிட்டு பல்துளக்க ஆரம்பித்தேன்.

       

இன்று தான் வேலைக்குச் சேரவேண்டும். எடின்பராவில் தான் வேலை. நாங்கள் லண்டனிலிருந்து 2 மணி தொடர்வண்டிப் பயணத்தொலைவில் உள்ள லஃபரோவில் (Loughborough) இருக்கிறோம். லஃபரோ தொடர்வண்டி பாதையில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. லண்டனிலிருந்து இங்கிலாந்தின் அல்லது பிரிட்டனின் உள்நோக்கிப் பயணப்படும் யாரும் இந்த ஊரைக் கடந்து தான் செல்லவேண்டும். 


 

பெரும்பாலும் எல்லா வண்டிகளும் இங்கு நிற்கும். மிகச்சிறியதுமில்லாத, பெரிதும் இல்லாத‌ அழகான ஊர். நூற்றாண்டுப் பழமையான லஃபரோ பல்கலைக்கழகமும் (Loughborugh University) அதன் 15000 மாணவர்களும் 3000 பல்கலை ஊழியர்களும் தான் இந்த ஊரின் அடிநாதம். 

    

ஒருகாலத்தில் சர்ச்சுகளில் வைக்கப்படும் பெரிய மணிகள் செய்வதும், காலுக்கு அணியும் சாக்ஸ் செய்வதும் தான் அடிப்படைத் தொழிலாக இருந்துள்ளது. இங்கு செய்யப்பட்ட ஆலய மணிகள் உலகெங்கிலும் ஏன் இந்தியாவின் பல்வேறு கிருத்துவப் பேராலயங்களிலும் கூட‌ வைக்கப்பட்டுள்ளது. இப்போதும் அவை இயக்கத்தில் இருப்பதாகவே இங்கு உள்ள அருங்காட்சியகத்தில் சொல்கிறார்கள். இன்று இவற்றின் வரலாற்றை அருங்காட்சியகங்களில் தான் பார்க்க முடியும் என்றாலும் அந்த மணிகளின் எச்சமாக இன்றும் பெரிய டவர் ஒன்று ஊரின் நடுவில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. சாக்ஸ் தொழிலின் நினைவாக டவுன் சென்டர் எனப்படும் ஊர்மத்தியில் ஒரு சாக்ஸ் அணிந்த மனிதனின் சிலையும் இருக்கிறது. ஊரின் நடுவில் இருக்கும் பூங்காவில் கட்டப்பட்டுள்ள அந்த பெல்டவருக்குள் எக்கச்சக்க மணிகள் பெரிதும் சிறிதுமாக பல பெயர்களின் நினைவைச் சுமந்து கொண்டிருக்கும். அதில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தவர்களின் நினைவில் அவர்களின் குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. கடந்த இரண்டு வருடம் இங்கு வேலை செய்து அலுத்து மீண்டும் வேலை தேடியலைந்து ஒருவழியாக எடின்பராவில் வேலை கிடைத்து நீண்ட காத்திருப்புக்குப் பின் விசாவும் வந்து இன்று சேரவேண்டும். எனவே தான் இந்த எடின்பரா பயணம்.


பல்வேறு சந்தர்பங்களில் எடின்பரா சென்றிருக்கிறேன் என்றாலும் இந்த முறை தொடர்வண்டிப் பயணம் காரணம் வேறு என்ன விமான டிக்கெட்டின் கடுப்பேற்றும் விலைதான். தொடர்வண்டியிலும் குறைவான கட்டணம் எல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் ஒரு மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் உபயோகிக்கும் பயணச்சீட்டு மேலும் எனது பொதிகளை எல்லாம் எடுத்துச் செல்லலாம் என்பதும் தான் தொடர்வண்டிப் பயணத்தின் முக்கிய நோக்கம். என் பொதிகள் என்றால் ஏதோ குடும்பப் பாரத்தைச் சுமந்து செல்கிறேன் என்றெண்ணி விடாதீர்கள், அத்தனையும் என் புத்தகங்கள். என் மனைவியின் வார்த்தைகளில் காகிதக் குப்பைகள். அவை மட்டுமே இரண்டு பெரிய சூட்கேஸ் இருந்தது. இவற்றைக் கொண்டு சென்று விட்டால் போதும், மற்றவை பெரிதாக ஒன்றுமில்லை, வெறும் துணிமணிகள் தான். நாங்கள் இருப்பது முழுவதும் furnish செய்யப்பட்ட வீடு என்பதால் எதுவும் எடுத்துக் கொண்டு போகவேண்டியது இல்லை. புத்தகங்கள் சேருவதை எப்படித்தான் குறைப்பது, நானாக வாங்குவதும், என் நண்பர்கள் இந்தியா சென்றால் வாங்கி வருவதும், முத்துக்குமார் அண்ணா கோவையிலிருந்து குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையேனும் அனுப்பும் புத்தகப் பொதிகளும் தான் காரணம். எக்காரணம் கொண்டும் புத்தகங்கள் மட்டும் தொலைக்கவோ இல்லை இரவல் கொடுக்கவோ மாட்டேன். எனவே புத்தகம் சேருவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. இந்த இரண்டு பெட்டிகளும் என் நண்பரின் வீட்டில் வைத்துவிட்டு பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் கொண்டு செல்கிறேன். மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது எடுத்துச் செல்ல. லண்டனுக்குக் புத்தகங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று யாராவது சொல்லியிருந்தால் பேசாமல் அனுப்பித்தான் வைத்திருப்பேன். ஏனென்றால் லண்டனின் தொடர்வண்டி நிலையங்கள் பெரும்பான்மை எரிச்சலை ஏற்படுத்துவன என்னளவில். எடின்பரா என்பதாலும் ஒரே ஒரு முறைதான் வண்டி மாற வேண்டும் என்பதாலும் தான் இவற்றை எடுத்துச் செல்வது என்று தீர்மானித்தேன்.

 

வீட்டிலிருந்து 5 நிமிடப் பயணம் தான் தொடர்வண்டி நிலையம். எனவே டாக்ஸி 7.45க்கு வரச் சொல்லியிருந்தேன். அவரும் சரியாக வெளியேவந்து அழைப்பு மணியடிக்கவும் நான் வெளியே செல்லக் கிளம்பவும் சரியாக இருந்தது. என் இரண்டு பெட்டிகளையும் ஏற்ற உதவி செய்தார். இவை போக என் உடுப்புகளும் சான்றிதழ்களும் கொண்ட பேக் மற்றும் என் மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொதி. சற்று கடுப்போடு தான் அவற்றினை வாங்கிக் கொண்டேன். தொடர்வண்டி நிலையம் சென்று எனது பயணத்திற்காக நான் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளின் அசல் வடிவை ( இணைய முன்பதிவுகளில் வெறும் பயணம் செய்யும் இடங்களும் நேரமும் மட்டும் தான் இருக்கும்) பெற்றுக்கொண்டு செல்லவேண்டும். எனக்கு முன்னால் பயணச்சீட்டு எடுக்கச் சென்றவர் என் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தார். என் தொடர்வண்டி வரும் நேரம் வேறு இன்னும் 5 நிமிடங்கள் தான் இருந்தது. ஒரு வழியாக தன் சோதனை எல்லாம் முடித்துக் கொண்டு எனக்கு வழிவிட்டு மன்னிப்பு வேறு கேட்டுச்சென்றார். நான் எனக்கான சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு முதல் பிளாட்பாரம் நோக்கி வேகமாகச் செல்லவும் நான் செல்ல வேண்டிய தொடர்வண்டி வந்து சேரவும் சரியாக இருந்தது. ஒரு சீன நண்பனின் உதவியுடன் என் பெட்டிகளை ஏற்றி ஒருவழியாக எனக்கான இருக்கைக்குச் செல்லாமல் கதவின் முன்னே இருக்கும் இடைவெளியில் நின்று கொண்டேன். இன்னும் 23 நிமிடங்களில் அடுத்த தொடர் வண்டி மாறுவதற்கான டார்பி (Derby) நிலையம் வந்துவிடும். மீண்டும் என் அலைபேசியில் அடுத்த தொடர்வண்டியின் நேரம் மற்றும் நிற்கும் பிளாட்பாரத்தின் எண்ணையும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன்.

(தொடரும்)

 _________________________________________________________________________________________________________

மேலும் லஃபரோ (Loughborough) பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்:


 2012-03-23 16.20.16.jpg
1. http://www.loughborough.towntalk.co.uk/
2. http://www.lboro.ac.uk/about/history/index.html
3.http://www.loughboroughcarillon.com/
4.http://www.taylorbells.co.uk/oldweb/

No comments:

Post a Comment