Pages

29 May 2012

கற்றது கைமண் அளவு- 28/05/2012


அதிக வேலைப்பளு மற்றும் தொடர் பயணங்கள் காரணமாக கடந்த பத்து நாட்களாக எழுத இயலவில்லை. இன்றும் கூட கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்கிற முடிவோடு தான் கணிணியின் முன் அமர்ந்தேன். ஆனாலும் தொடர் அழைப்புகளும் அழுத்திய வேலைப் பளுவும் என்னைச் சோர்வுறச் செய்தன என்பது மட்டும் என்னவோ உண்மை...தேர்வுகள் எப்போதும் மிகுந்த மன அழுத்தம் கொடுக்க கூடிய ஒன்று. சென்றவார +2 தேர்வு முடிவுகள் ஒரு கலைவையான உணர்வினைத் தான் எனக்குக் கொடுத்தது. எங்களின் அருகிருக்கும் கிராமத்தில் படித்த மாணவர்களில் சிலர் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கியிருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் நகரங்களில் பயின்ற உறவினர்களின் குழந்தைகள் ஏனோ மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தது எனக்குச் சிலவற்றை உணர்த்தியது...ஒன்று நகரத்தின் பள்ளி மாணவர்களின் கவனம் கலைக்க எத்தனையோ வழிகள் மேலும் அவர்களுக்கு ஒரு மிதப்பு இருக்கவே செய்கிறது. கிராமத்தில் இவற்றின் இடையூறுகள் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனாலும் குறைவு மேலும் ஒரு முனைப்பு அவர்களிடம் இருக்கவே செய்கிறது. சரியான வழிகாட்டலுடன் வரும் கிராமத்து மாணவர்கள் பலர் உயரங்கள் தொடவே செய்கின்றனர். நகரத்துப் பெற்றோர்களும் எப்படி எல்லாம் நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் வாங்கி அடுத்து கட்டத்துக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று விடும் வல்லமை நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பரின் மகள் 10 வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று இம்முறை தேர்ச்சி பெற்றதே பெரிய காரியம் என்கிற அளவில் மதிப்பெண் வாங்கியது எனக்கு பேர‌திர்ச்சி தான். அவளின் மேல் வைக்கப்பட்ட மனச்சுமை அவளை சுத்தமாக முடக்கி விட்டது என்று தான் நான் சொல்வேன். எனக்கு அவளின் பாட அறிவின் மேல் அளவுகடந்த நம்பிக்கை உண்டு. நண்பர் பணத்தினைக் கொட்டி நல்ல கல்லூரியில் நல்ல ஒரு துறையை அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சென்றவாரம் நடந்த சில நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தன. குறிப்பாக என் வேலை நிமித்தம் சில இடங்களுக்கு இரண்டடுக்குப் பேருந்தில் செல்ல நேர்ந்தது. மேல்லடுக்கில் அமர்ந்து செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மேலே சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பள்ளிச் சிறுமிகள் யாருடனோ கைபேசியில் கதைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் என்ன பேசுகிறார்க்ள் என்று கவனிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் பேச்சு நாகரீகமற்று ஒரே இறைச்சலாக இருந்தது. எனக்கு இங்கிருக்கும் பள்ளி மாணவர்களின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும் அவர்கள் அடுத்துச் செய்த காரியம் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இருவரும் முத்தமிடுவதும், தங்களின் அங்கங்களை.....என்று அநாகரீகத்தின் உச்சகட்ட எல்லைவரை சென்றது. இதற்கு மேல் இங்கிருந்தால் சரிப்படாது என்று நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு முன் நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அன்று முழுவதும் இந்தச் சூழ்நிலையில் எப்படி என் குழந்தையை வளர்ப்பது என்கிற எண்ணம் என்னை படுத்தி எடுத்துவிட்டது.........

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றவாரம் பிரிட்டன் கொழுந்துவிட்டு எரிந்தது என்றால் மிகை இல்லை. எங்கும் அதிகபட்ச வெப்பம் 24-26 பாகை செல்சியஸ் ஆக இருந்தது..இருக்கிறது. எடின்பரா கொஞ்சம் பரவாயில்லை...பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் (18 பாகை செல்சியஸ்) இரவு நேரங்களில் 10-12 ம் ஆக இருந்தது. சூரியனின் கதிர் வீச்சு இங்கு மிகவும் அதிகம் மற்றும் புற ஊதாக் கதிர்களின் (UV rays) அடர்த்தியும் அதிகம் என்பதால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சராசரியை விடவும் அதிகமாக இருக்கும். வெள்ளக்கார மக்கள் துணி துறந்து அரை நிர்வாண பக்கிரிகளாய் உலாவருகின்றனர். ஊருக்கு பேசியபோது அவர்களும் இங்கும் தாங்க முடியாத வெக்கையா இருக்குப்பா என்று சொன்னார்கள்...அதிக வெப்பத்தால் வெளியில் சென்று விளையாட முடியாமல், துண்டை நனைத்து அதை விரித்து அதன் மேல் படுத்திருந்த சிறுவயது நினைவுகள் ஏனோ வந்து போனது....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிரியாவில் வன்முறை வரைமுறையற்று சென்று கொண்டிருக்கிறது...சிறுவர்கள் முதற்கொண்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் ஏனோ மனதினை அறுத்தது...வன்முறையின் மேல் மனிதர்களுக்கு இருக்கும் பற்று எப்போது அற்றுப் போகும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு பாக்கிஸ்தானிய தம்பதியினர் தங்கள் மகளைக் கொன்ற சம்பவம் சென்றவாரச் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது....இதனைப் பார்த்த இளைய மகள் போலீஸிடம் சொல்லியிருக்கிறார் அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து...இந்தப் பெண் ஒரு கடையில் திருடும் போது மாட்டிக் கொண்டு ஏதேதோ சொல்லி தப்புவதற்கு முயலும் போது தனது அக்காவை தனது பெற்றோர் தன் கண் முன்னால் கொன்றனர் என்று சொல்லி ஆரம்பித்து வைக்க போலீஸ் இதன் ஆதி அந்தபற்றி விசாரணை செய்யத் தொடங்கியிருக்கிறது...... அவர்களுக்கு கிடைத்த பதில்...இங்கேயே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் மேனாட்டு கலாச்சாரப் படி 15 வயதில் தனக்கான ஆண் நண்பரை வைத்துக் கொள்வது, இன்ன பிற சமாச்சாரங்களுடன் வளைய வந்தவரை பெற்றோர் கண்டித்து பாக்கிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றிருக்கிறார்கள். பின்னர் ஏதோ பிரச்சனையில் மீண்டும் இங்கிலாந்து வந்து அந்தப் பெண்ணை கொன்று விட்டார்கள் என்று தங்கை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அப்பாட ஒரு வழியா ஐ.பி.எல் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதைப் பற்றியே பேசிக் கொள்(ல்)வார்கள். நான் இறுதிப் போட்டி கூட காண முடியவில்லை...பெரிய விருப்பமும் இல்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார இசைப் பேரரசனின் மயக்கும் மெலடி....எப்போது கேட்டாலும் இதனுள் இருக்கும் இளமைத் துள்ளல் என்னைக் கட்டிப் போடும்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தவார ஆவணப்படம்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


20 May 2012

கற்றது கைமண் அளவு- 20/05/2012எப்படியோ அதிர்ஷ்ட தேவதை மீண்டும் தோனியை கடைசி நாலு இடங்களில் விட்டுச் சென்றுள்ளாள். எனக்கு என்னவோ சென்னை தான் இந்த முறையும் வெல்லுவார்கள் என்றே தோன்றுகிறது. என்ன தான் மாற்றுக் கருத்து இந்த கிரிக்கெட் தொகுப்பு ஆட்டங்கள் பற்றி இருந்தாலும் பார்க்க சுவையானதாகவே இருக்கிறது. மக்கள் வேலை வெட்டி எல்லாம் விட்டு விட்டு இதே வேலையாக இருப்பது தான் கவலை அளிக்கிறது....ஐ.பி.எல்.துளிகள்:

ஐ.பி.எல் தொடரில் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடக்கின்றன. அணிகளுக்குள்ளும் வெளியேயும் என்று இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடந்த கொஞ்சம் கலவையான சில நிகழ்வுகள்....

அமெரிக்க பெண்ணிடம் தவறாக நடக்கு முயன்ற புகாரின் பேரில் பெங்களூரு  ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் லூக் போமர்பச் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். 

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் லூக் மீது பாலியல் புகார் கொடுத்த அமெரிக்கப் பெண் இப்போது அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,மேட்ச் பிக்சிங் எனப்ப்டும் போட்டி  நிர்ணயத்துக்காக இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று ஆட்ட நிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதால்,மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் ஆறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தொலைக்காட்சி ஒன்று  நடத்திய ரகசிய பேரம் மூலம் தெரியவந்த 5 வீரர்களை சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர். அவரும் ஐபிஎல் போட்டிகளைத் தடை செய்ய வேண்டும் என்று டிவியில் முழங்கிக் கொண்டிருந்தார். 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறது. பிரிட்டனில் தன் மகனை அடித்தே கொன்றிருக்கிறார் ஒரு பெண். எனக்கு அந்தப் படங்களைப் பார்த்த போதும் அதன் செய்தியைப் பார்த்த போதும் நெஞ்சு பதறிப்போனது. சிறிது நேரத்திற்கு முன்பு கூட ஒரு குழந்தையை ஒரு பெண் துவைத்து எடுப்பது போன்ற ஒரு காணொளி ஒன்றினை முகநூலில் பார்த்தேன். என் இதயத்துடிப்பு ஒரு நிமிடம் நின்று போனது. நண்பர்களே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதற்குக் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2012 ஜூலை 27ம் தேதியன்று லண்டனில் துவங்க உள்ள 27வது ஒலிம்பிக் தொடருக்கான ஒலிம்பிக் ஜோதி,கிரீஸின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டு இங்கிலாந்துக்கு இது கொண்டுவரப்படும். ஒலிம்பியாவில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒலிம்பிக் ஜோதி,பல நாடுகள் வழியாக 78 நாட்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படும்.  இதன் பிறகு இந்த ஜோதி இங்கிலாந்தில் மட்டும் 8 நாட்கள் பயணம் மேற்கொண்டு இறுதியாக லண்டன் வந்தடையும். நாங்கள் இருக்கும் தெருவின் வழியாகவும் இந்த முறை செல்லும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இளையராஜாவின் இசைக்கு பாடல் வரிகள் தேவையே இல்லை என்று நிரூபிக்கும் இன்னொரு பாடல். தமிழ் சினிமாவில் அதிக அளவு ஹிட் படங்கள் கொடுத்த இராமராஜனுக்கு இவரின் இசை எப்போதும் மிகவும் சிறப்பாக இருக்கும்..... ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நான் பார்த்து வியந்த ஆவணப்படங்களில் ஒன்று....

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17 May 2012

மதன் கேள்வி! விகடன் பதில்!


மதன் கேள்வி! விகடன் பதில்!

விகடனில் மதன் இனி இல்லை என்பது கொஞ்சம் கேட்கச் சிரமமாகத்தான் இருக்கிறது....ஆனால் விகடனின் முடிவு எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.


க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்.

உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!
மேற்கண்ட கேள்வி - பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்...
...பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

- மதன்
தன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்

நன்றி : ஆனந்தவிகடன்

13 May 2012

கற்றது கைமண் அளவு- 13/05/2012


  

இன்று அன்னையர் தினம். தாய் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. நாம் வழிபடும் அனைத்து அம்மன்களும் நம் தாய் வழிபாட்டின் நீட்சியே. தாய் இல்லாத உலகின் வெறுமை கற்பனைக்கும் எட்டாத ஒன்று. நம் இனக்குழுக்கள் எல்லாம் தாய்வழிச் சமூகமே. தாய்வழிபாடு (அ) அம்மன் வழிபாடு செய்யும் எந்தச் சமூகமும் அல்லது இனமும் தொன்மைச் சமூகமே. அண்மைக்காலமாக அதிகரித்துள்ள அன்னையர் தின கொண்டாட்டம் என்பது முதன் முதலாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் 1908-ல் கொண்டாடப்பட்டது. இன்று உலகம் முழுவதும் 70 நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் என்கிற அளவில் நிறுத்தி விடாமல் தினமும் அவர்களைத் தொழுவது நம் கடமைகளில் ஒன்றாய் கொள்ளலாம்.
==================================================================================================

நீதிமன்ற அதிரடிகள்:

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள்  முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அப்படியே தமிழ்நாட்டுல இருக்குற இலவசத்தையும் நிறுத்தி உத்தரவிடுங்க, எசமான் உங்களுக்கு புண்ணியமாப் போகும்...!

திருமணமான பெண்கள் சீதையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். சீதையைப் போல வாழ வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தன்னுடன் வேலை இடத்திற்கு வந்து வசிக்க முடியாது என்று கூறிய மனைவியை விவாகரத்து செய்யக் கோரி ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் தான் இந்த அறிவுரை. என்னமோ போங்க ....!

பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள 21 வயது மாணவனுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அசாம் மாநிலம் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் பிதான் பருவா (21). மாணவர் தன்னை பெண்ணாக நினைத்து தான் பால் மாற்று அறுவைச் சிக்கிச்சை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அனுகியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் 'பிதான் ஒரு மேஜர். அவர் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கலாம். அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள யாரும் தடைவிதிக்க முடியாது. அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. பிதான் தனக்குள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கொலாபா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அது குறித்து விசாரித்து அச்சுறுத்தல்கள் ஏதும் இருந்தால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளனர். நல்லது தான்...

அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள் என்று கருத்து  தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்,இதனை ஒழிக்க மத்திய ,மாநில அரசின்  நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.சிலவற்றுக்கு உத்தரவு மட்டும் போதாது, மக்களின் மனதில் மாற்றம் வரவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நாம் குறைத்தாலே போதும் தானே....

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்திடம்  ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அளித்த ஆய்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்கு என்ன கருத்துச் சொல்லுறது...!

==================================================================================================
ஒரு நெகிழ்ச்சி:

வழக்கு எண் 18/9 திரைப் படத்தின் இயக்குநர் பாலஜி சக்திவேல் தனது தயாரிப்பாளர் மற்றும் மீடியாவினர் காலில் விழுந்து நன்றி சொன்னார். பார்த்தபோது கொஞ்சம் நெகிழ்வாக இருந்தாலும் என்ன கிறுக்குத் தனம் இது என்று தோன்றியது. 

==================================================================================================

காமெடி:

நித்யானந்தாவால் உலகில் உள்ள இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கின்றனர் என்று அகில பாரத இந்து மகா சபா கூறியுள்ளது. அகில பாரத இந்து மகா சபா தலைவர் சக்ரபாணி மகாராஜ் தலைமையிலான அதன் நிர்வாகக் குழுவினர்  மதுரை மடத்திற்கு வந்து கூறிய கருத்து தான் இது...மேலும் இவர் 'நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளை பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.அவர்கள் இந்து மத விரோதிகள்' என்றும் கூறியுள்ளார்.இது மட்டுமின்றி ஏகப்பட்ட சவால்கள், கலாட்டாக்கள், என்று நித்தியானந்தாவால் களைகட்டியிருக்கிறது. நடிகை ரஞ்சிதா தன்னுடன் இல்லை என்று இவரும், காஞ்சி சங்கராச்சாரியார் பற்றி எனக்குத் தெரியாதா, அவருக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று ரஞ்சிதாவும் மாறி மாறி வசை மாரி பொழிந்து கொண்டிருக்கின்றனர்.இப்பத்தான் காட்சி சூடு பிடிக்குது...

==================================================================================================


துளிகள்:

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஸி தோல்வியடைந்துள்ள  நிலையில்,புதிய அதிபராக பிரான்காய்ஸ் ஹோலண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக ஊடக விருது விழா ஒன்றில்,சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை பள்ளிகளில் சீன மொழியும் கற்றுத்தரப்படும். 'இலங்கை - சீன நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே இந்த நடவடிக்கை. சீன மொழி கற்பிக்கத் தேவையான மனிதவளம் மற்றும் அதற்கான செலவுகளை சீனாவே வழங்க முன்வந்து உள்ளது’ - இது இலங்கை கல்வித் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பெருமித அறிவிப்பு. 

அணு சக்திப் பயன்பாட்டுக்கு முன்னுதாரணமாக ஜப்பான் சொல்லப்பட்டது ஒரு காலம். இப்போது ஜப்பான் அணு சக்தியே இல்லா தேசம்! டோமாரி அணு மின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலையைக் கடந்த வாரம் மூடியதன் மூலம் தற்காலிகமாக அணு சக்தி இல்லா நாடாக மாறி இருக்கிறது ஜப்பான். ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அணு உலைகளில் சுனாமியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான் அரசு அணு உலைகளை மூடிவருகிறது. ஆனால், மூடப்பட்டுள்ள அணு மின் நிலையங்களை மீண்டும் தொடங்க, ஜப்பானிய நடைமுறைப்படி, அந்தந்த உள்ளாட்சி நிர்வா கங்களின் அனுமதி அவசியம். மக்கள் அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் வகையில் ஊருக்கு ஊர் பேரணிகளை நடத்திவரும் சூழலில், நிரந்தரமாகவே ஜப்பான் அணு சக்திக்கு விடை கொடுத்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் விளையாடத் தகுதிபெற்று இருக்கிறது இந்தியா. ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னாப்பா இணையே அந்தச் சாதனை ஜோடி. 2010 டெல்லி காமென்வெல்த் போட்டியிலும் இதே ஜோடிதான் தங்கம் தட்டியது.

உத்தரப்பிரதேச மாநில ஃபதேபூரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஹரிச்சந்திராவின் கோரிக்கை மனு, ஜனாதிபதி அலுவலகத்தையே அதிரவைத்தது. 'நான் தற்கொலை செய்துகொள்ள இந்திய அரசு சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை. ''சீனியர் அதிகாரிகளின் அதீத டார்ச்சர் காரணமாக 35 வயதிலேயே முடி கொட்டி, பார்வை மங்கி பலவீனமாகிவிட்டேன். எனக்கு வாழவே பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த முடிவு'' என்கிறார் ஹரிச்சந்திரா. அதற்கு ஃபதேபூர் மாவட்ட எஸ்.பி-யான சதுர்வேதி, ''ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அனுமதிப்பதற்கு எல்லாம் சட்டத்தில் இடம் இல்லை. தாமாகவே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு சாகலாம். அதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது'' என்று 'ஐடியா’ சொல்லி, கண்டனங்களைச் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். 

(நன்றி விகடன்)


==================================================================================================
இந்த வார ஆவணப்படம். 


=================================================================================================
இந்தப் பாடல் என்னையும் அறியாமல் வாரத்தில் ஒரு 15-20 முறை பாடி விடுவேன்.... இளையராஜாவின் தாலாட்டும் மெல்லிசை.


==================================================================================================

7 May 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -6

 


தொடர்வண்டி டார்லிங்டன் மற்றும் டர்காம் தாண்டி நியுகாஸலில் வந்து நின்றது. இங்கிருந்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடின்பரா சென்றுவிடலாம் என்கிற நினைப்பே எனக்கு மகிழ்வாக இருந்தது. இந்த நிலையம் இங்கிலாந்தின் வடக்கில் இருக்கும் பெரிய நிலையம். இங்கிலாந்தின் கடைசி எல்லை நகரம் என்று கூடச் சொல்லலாம். மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகர் டைன் நதிக்கரையில் அமைந்துள்ளது. தொடர்வண்டி நகருக்குள் நுழையும் போதே வலதுபுறம் இந்த நதி பக்கவாட்டில் ஓடிவரும். இதன் கரையில் அமைந்துள்ள மிகுந்த கலையம்சம் கொண்ட பாலங்களும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். பெரும்பாலான தொடர்வண்டி நிலையங்கள் ஒரே வடிவமைப்பில் தான் பிரிட்டன் முழுவதும் இருக்கும். அந்த பிரமாண்டமான இரும்புக் கூரைக்குள் தொடர்வண்டிகள் உள் நுழைவதும் வெளிவருவதும் பார்ப்பதற்கு பேரானந்தமாக இருக்கும். 1080ம் வருடம் இராபர்ட் என்ற அரசனால் கட்டப்பட்ட கோட்டையினைக் கொண்டு தான் இந்த நகரின் பெயரும் இன்று வரை அழைக்கப்படுகிறது. இந்நகர் கம்பளி உற்பத்திக்கு பெயர் போனது. கால மாற்றம் மற்றும் தேவையின் காரணமாக பின்னர் இங்கு நிலக்கரி அகழ்வு என்பது முதன்மை தொழிலாகி பின்னர் இன்று வரை பெரும் கப்பல் கட்டும் துறைமுகங்களைக் கொண்ட நகராக திகழ்கிறது. மேலும் இங்கு இரவு வாழ்க்கை என்பது மிகுந்த விசேசமிக்கதாகவும் இங்கு தயாரிக்கப் படும் பீர் (Newcastle Brown Ale ) பிரபலமானதாகவும் இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கான the first Carbon Neutral town என்று அறிவிக்கப்பட்ட நகரமும் இது தான். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் சீன புத்தாண்டுக் கொண்டாட்டமும், மார்ச் மாதம் நடக்கும் அறிவியல் திருவிழாவும், ஏப்ரலில் நடைபெறும் பீர் திருவிழாவும், மே மாதத்தில் நடைபெறும் இசைத் திருவிழா மற்றும் சர்வதேச திரைப்பட விழாவும், ஜூன் மாதம் ஐரோப்பாவின் மிகப் பெரிய பயணக் கண்காட்சி (The Hoppings), ஜூலை மாதம் பிரிட்டனின் சுற்றுச்சூழல் திருவிழா மற்றும் "Family Fun Day" and "Carnival Day" போன்ற நிகழ்ச்சிகளும் என்று வருடம் முழுமைக்கும் நடக்கும் திருவிழாக்கள் இந்நகரை ஒரு பெரிய சுற்றுலா தளமாகவும், கேளிக்கை நகராகவும் மாற்றி இருக்கின்றன என்றால் மிகையில்லை.

   

இந்நகருக்கு நான் சென்றதில்லை ஓரிரு முறை தொடர்வண்டி மாறிய அனுபவம் தவிர. தொடர்வண்டி டைன் நதியின் மேல் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான பாலத்தினைக் கடந்து தான் நியூகாஸல் நிலையத்தினை அடையும். பார்க்க மிக அருமையாக ரம்மியமாய், ஒய்யாரமாய் டைன் நதி வடக்கு கடலை நோக்கிச் செல்லும் அழகே அழகு தான். வண்டி நிலையம் அடைந்து நிற்கவும் மீண்டும் மக்கள் கூட்டம் வந்து மொய்துக்கொள்ளவும் சரியாக இருந்தது. நான் இருந்த இருக்கையின் அருகில் இருந்த இடம் காலியாக இருந்தது இதுவரை. மெல்ல மக்கள் தங்களுக்கான இடங்களில் அமரவும், சிலர் காலியாக இருக்கும் இடங்கள் தேடி அமரவும் சற்று அவகாசம் எடுத்துக் கொண்டனர். எனது இருக்கையும் ஒருவரால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டு மேலும் மக்கள் தங்களுக்கான இருக்கையை பிடிக்க முடியாமலும் நிற்கவும் ஆரம்பித்திருந்தனர். தொடர்வண்டி மெல்ல தனது பயணத்தினைத் தொடங்கவும் வெளியே மழையும் பனியும் கலந்த கலவையாக வானம் பொழியத் தொடங்கியது. நானிருந்த அமைதிப் பெட்டி மக்களின் ஆக்கிரமிப்பால் அதன் அமைதியை இழந்து சராசரிப் பெட்டியாகியிருந்தது. புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் 'தொடர்வண்டி  இன்னும் 15 நிமிடங்களில் இருப்புப் பாதை செப்பனிடும் பணி காரணமாக தொடர்வண்டி நிறுத்தப் படும் என்றும், அது சரிசெய்யப் பட்டு 30 நிமிடங்களில் மறுபடியும் பயணம் தொடரும்' என்றும் அறிவிக்கப் பட்டது. சரி 30 நிமிடம் தானே என்ன‌வாகி விடப் போகிறது என்று என் மடிக் கணிணியைத் திறந்து பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் பெறும் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியின் வேகம் படிப்படியாகக் குறைந்து நிற்க ஆரம்பித்தது. நானும் படிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கினேன். வெளியில் மழை நின்று பனிப் பொழிவு மிகுந்த காற்றுடன் தொடங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த பெரியவர் என் கவனம் கலைக்க 'ஓட்டுநர் உரிமம் பெறவா?' என்றார். நானும் அப்போது தான் அவரின் முகத்தினைப் பார்த்தேன், நல்ல பெரிய மீசை உதட்டில் சிநேகமான புன்னகை என்று சட்டென்று கவனம் ஈர்த்தார். நான் 'ஆம் ஒரு முறை முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன்' என்றேன்.6 May 2012

கற்றது கைமண் அளவு- 06/05/2012


பிறந்த தினம்:

     
“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை"

- சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி.

மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை!

இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார்க்சியம்" எனும் தத்துவத்தை பிரசவிக்க அடித்தளமாக இருந்தது!

மார்க்சியத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் மனைவிதான் ஜென்னி!

தன் வீட்டுப் பொருளாதாரம் சுழியமாகிப் போன நிலையில் உலகத் தொழிலாளர்களின் உரிமைப் புரட்சிக்கு சுழிபோட்டவர் கார்ல் மார்க்ஸ்.. இன்று அவரது பிறந்த நாள்! (மே 5)

தொழிலாளியின் உழைப்பு, அதற்கு கொடுக்கும் விலை, அது செல்லும் பாதை, அதனால் சமுதாயத்தில் எப்படியான மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதையெல்லாம் தம் வறுமையையும் பொருட்படுத்தாமல் ஆராய்ந்து ஆராய்ந்து "மார்க்சியம்" எனும் தத்துவத்துக்கு மூலவேராக "மூலதனம்" எனும் பெருநூலைக் கொடுத்தவர் காரல்மார்க்ஸ்!

பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான ரைன் நதிக்கரையோரத்தில் யூத மதத்தில் 1818-ம் ஆண்டு மே 5-ம் நாள் பிறந்தார் மார்க்ஸ்! படிப்பை முடித்த கையோடு ரைன் கெஜட் எனும் பத்திரிகையில் சேர்ந்தார்... பத்தே மாதத்தில் அதன் ஆசிரியரானார்! அவரது கட்டுரைகள் ஜெர்மனி மக்களுக்கு உதயசூரியனை முன்னிறுத்தியது!

ஏடும் எழுதுகோலும் எடுத்தாலே சிறைவாசம் என்ற அடக்குமுறையை எதிர்நோக்கிய கார்ல் மார்க்ஸுக்கு கரம் கொடுத்தவர் ஏங்கெல்ஸ்! இந்த தோழர்கள்தான் இன்றும் பெயரைக் கேட்டாலே சிலிர்க்க வைக்கும் "கம்யூனிஸ்டுகளின்" காட் பாதர்கள்!

நாடு கடத்தப்பட்ட காலங்களிலும் கூட தன் சிந்தனையை இழந்துவிடவில்லை! வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் வறுமையின் கோரப் பிடியில் உயிரிழக்க.. தாமோ மரணத்தின் விளிம்பில் நிற்க.. அந்தக் காலத்தில்தான் காலப்பொக்கிஷமான "மூலதனம்" என்ற நூலை எழுதி முடிக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்களை மூலதனமாகக் கொண்டு முதலாளி வர்க்கம் அவர்களையே சுரண்டும் கொடூரங்களை அ, ஆனா பாடம் எடுப்பதுபோல மூலதனத்தில் பகிரங்கப்படுத்தியவர் மார்க்ஸ்

மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் வரலாற்று நூல்களே இன்றைய இடதுசாரி உலகத்துக்கு ஆணிவேர்! இவர்களது தத்துவங்களை ஏந்தியவர்கள்தான் லெனினும் மாவோவும்! இவர்களுக்கே தொடர்பில்லாத தேசங்களில்தான் இவர்களது லட்சியங்கள் நிறைவேறி இருக்கின்றன!

மாமேதை மார்க்ஸின் சிந்தனைகள் நூற்றாண்டுகளைக் கடந்தும் விடுதலையை நேசிக்கும் எந்தத் தலைமுறையும் கையில் ஏந்தக் கூடிய புரட்சிகர ஆயுதமாகவே இருக்கும்!

நன்றி:தட்ஸ்தமிழ்

==========================================================================================

சம்பவம்:

நேற்று சிறிது உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இரவு 12 மணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் வீட்டிலிருந்து சிறிய‌ தொலைவு என்பதால் நடந்தே சென்றேன். வாடகை வாகனமும் கிடைக்கவில்லை எனவே நடந்து சென்று ஆலோசனை பெறச் சென்றேன். அவசரச் சிகிச்சை நகரின் மையப்பகுதியில் இருப்பதால் எப்போதும்  அந்தப் பகுதி முழுவதும் கலகலப்பாக யுவன்களும் யுவதிகளும் நிறைந்திருக்கும். நான் செல்லும் போதே அரை நிர்வாணப் பெண்களால் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருந்தது. சுற்றிலும் இருக்கும் பஃப்களிலும் இரைச்சலான இசை வழிந்து கொண்டிருந்தது. பகலில் இருக்கும் அந்தப் பகுதி முற்றிலும் உருமாறி இருந்தது. தீடீரென ஒரு பெண் சாலையின் மையப்பகுதிக்குச் சென்று தன் ஆடையைத் தூக்கி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். சாலையில் சென்ற கார்கள் இவரின் வருகையால் ஸதம்பித்து நிற்க அந்தப் பெண் எதைப் பற்றிய உணர்வும் அற்று நின்றுகொண்டு ஆனந்தமாக தன் வேலையைச் செய்துகொண்டிருந்தார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் உடல் நலக் குறைவு சட்டென்று சரியானது போன்ற மாயை எனக்குள் கணப் பொழுதில் வந்து சென்றது. ஒரு வழியாக தர்ம தரிசனம் முடிந்து என் மருத்துவரைப் பார்த்துத் திரும்பினேன். எனக்குள் அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்மனைவியிடம் இதனைப் பற்றிச் சொன்னேன், "இதப் பாக்கத் தான் நடுராத்திரில போனிங்களா" என்று என்னை நக்கலாகப் பார்த்தார்.


==========================================================================================

ஒரு திரைப்படம்:

காதல் திரைப்படம் பார்த்த போது அதன் தாக்கம் வெகு நாட்கள் மனதுக்குள் இருந்தது. எனவே பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் :18/9 திரைப்படத்தினைப் பார்க்கும் ஆவல் எனக்குள் அதிகமாக இருந்தது. படத்தினைப் பற்றிய எல்லா வலைப்பூக்களிலும் வந்திருந்த விமர்சனங்களும் என் தம்பி படம் பார்த்துச் சிலாகித்ததும் எனக்குள் படத்தினைப் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியிருந்தன. எனவே நேற்றே இணையத்தில் தரைவிறக்கம் செய்து (என்ன செய்யுறது இங்க ரிலீஸ் ஆகலயே..) பார்த்தேன். பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களில் தனக்குள் இழுத்துக் கொண்டது திரைப்படம். இரண்டாம் பகுதியின் கதையும் முதல் பகுதியின் கதையும் மெல்ல இரண்டு சலனமற்ற ஆறுகள் கலப்பதைப் போன்று வடிக்கப்பட்ட திரைக்கதையும் என்னைத் திரைப்படத்துடன் கட்டிப் போட்டது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தினைக் கொடுத்தது. கவிதையாய் மெல்ல மனதினை அழுத்தும் முடிவும் ஒரு முழுமையினைத் தந்தது. மிக நல்ல பெயரினை தமிழ் சினிமாவிற்கும், இயக்குநருக்கும் பெற்றுத்தரும். இந்திய சினிமாவின் 100வது வருடம் தொடங்கிய நாளில் வெளியான மிகச்சிறந்த படைப்பு.


==========================================================================================

துளிகள்:

இங்கிலாந்தின் மழையளவு எப்போதையும் விட அதிகமாக பெய்து ஆறுகளில் எல்லாம் வெள்ளம். இதனை கண்கூடாகவும் பார்க்க முடிந்தது. மேலும் மே மாதத்தில் வழக்கதை விட குறைவான வெப்பம் வேறு. கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை ஆனால் குளிரும் கூடவே காற்றும் என்று கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது வெளியில் செல்ல.

ஒரு வழியாக மாவோயிஸ்ட்டுக்கள் கலெக்டரை விடுவித்துவிட்டார்கள் 13 தினங்களுக்கு பின்னர். "நான் களைப்பாக இருக்கிறேன்.கடத்தல்   விவகாரத்தை பற்றி பேசுவதற்கு முன்பு,வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை பார்க்க   விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். என்ன டீலிங் என்பது தான் தெரியவில்லை.

இனி இந்திய ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் எங்கு சென்று கொண்டிருக்கின்றன என்கிற தகவல்கள் எல்லாம் இந்த இணைய தளத்தில் காணலாம் http://www.trainenquiry.com/.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்காக அவர் ஒரு வருடம் சிறையில் இருக்கவும் போகிறாராம். பாத்து சார் ரொம்ப நாள் வைச்சிரப் போறாங்க....


==========================================================================================


இந்த வார ஆவணப்படம்.==========================================================================================

சில பாடல்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஒட்டிக் கொள்ளும். இந்தப் பாடலும் அது போலத் தான்.....==========================================================================================