Pages

6 May 2012

கற்றது கைமண் அளவு- 06/05/2012


பிறந்த தினம்:

     
“என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை"

- சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி.

மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை!

இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார்க்சியம்" எனும் தத்துவத்தை பிரசவிக்க அடித்தளமாக இருந்தது!

மார்க்சியத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் மனைவிதான் ஜென்னி!

தன் வீட்டுப் பொருளாதாரம் சுழியமாகிப் போன நிலையில் உலகத் தொழிலாளர்களின் உரிமைப் புரட்சிக்கு சுழிபோட்டவர் கார்ல் மார்க்ஸ்.. இன்று அவரது பிறந்த நாள்! (மே 5)

தொழிலாளியின் உழைப்பு, அதற்கு கொடுக்கும் விலை, அது செல்லும் பாதை, அதனால் சமுதாயத்தில் எப்படியான மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பதையெல்லாம் தம் வறுமையையும் பொருட்படுத்தாமல் ஆராய்ந்து ஆராய்ந்து "மார்க்சியம்" எனும் தத்துவத்துக்கு மூலவேராக "மூலதனம்" எனும் பெருநூலைக் கொடுத்தவர் காரல்மார்க்ஸ்!

பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான ரைன் நதிக்கரையோரத்தில் யூத மதத்தில் 1818-ம் ஆண்டு மே 5-ம் நாள் பிறந்தார் மார்க்ஸ்! படிப்பை முடித்த கையோடு ரைன் கெஜட் எனும் பத்திரிகையில் சேர்ந்தார்... பத்தே மாதத்தில் அதன் ஆசிரியரானார்! அவரது கட்டுரைகள் ஜெர்மனி மக்களுக்கு உதயசூரியனை முன்னிறுத்தியது!

ஏடும் எழுதுகோலும் எடுத்தாலே சிறைவாசம் என்ற அடக்குமுறையை எதிர்நோக்கிய கார்ல் மார்க்ஸுக்கு கரம் கொடுத்தவர் ஏங்கெல்ஸ்! இந்த தோழர்கள்தான் இன்றும் பெயரைக் கேட்டாலே சிலிர்க்க வைக்கும் "கம்யூனிஸ்டுகளின்" காட் பாதர்கள்!

நாடு கடத்தப்பட்ட காலங்களிலும் கூட தன் சிந்தனையை இழந்துவிடவில்லை! வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் வறுமையின் கோரப் பிடியில் உயிரிழக்க.. தாமோ மரணத்தின் விளிம்பில் நிற்க.. அந்தக் காலத்தில்தான் காலப்பொக்கிஷமான "மூலதனம்" என்ற நூலை எழுதி முடிக்கிறார் கார்ல் மார்க்ஸ்.

உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்களை மூலதனமாகக் கொண்டு முதலாளி வர்க்கம் அவர்களையே சுரண்டும் கொடூரங்களை அ, ஆனா பாடம் எடுப்பதுபோல மூலதனத்தில் பகிரங்கப்படுத்தியவர் மார்க்ஸ்

மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் வரலாற்று நூல்களே இன்றைய இடதுசாரி உலகத்துக்கு ஆணிவேர்! இவர்களது தத்துவங்களை ஏந்தியவர்கள்தான் லெனினும் மாவோவும்! இவர்களுக்கே தொடர்பில்லாத தேசங்களில்தான் இவர்களது லட்சியங்கள் நிறைவேறி இருக்கின்றன!

மாமேதை மார்க்ஸின் சிந்தனைகள் நூற்றாண்டுகளைக் கடந்தும் விடுதலையை நேசிக்கும் எந்தத் தலைமுறையும் கையில் ஏந்தக் கூடிய புரட்சிகர ஆயுதமாகவே இருக்கும்!

நன்றி:தட்ஸ்தமிழ்

==========================================================================================

சம்பவம்:

நேற்று சிறிது உடல்நலக் குறைவு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இரவு 12 மணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் வீட்டிலிருந்து சிறிய‌ தொலைவு என்பதால் நடந்தே சென்றேன். வாடகை வாகனமும் கிடைக்கவில்லை எனவே நடந்து சென்று ஆலோசனை பெறச் சென்றேன். அவசரச் சிகிச்சை நகரின் மையப்பகுதியில் இருப்பதால் எப்போதும்  அந்தப் பகுதி முழுவதும் கலகலப்பாக யுவன்களும் யுவதிகளும் நிறைந்திருக்கும். நான் செல்லும் போதே அரை நிர்வாணப் பெண்களால் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருந்தது. சுற்றிலும் இருக்கும் பஃப்களிலும் இரைச்சலான இசை வழிந்து கொண்டிருந்தது. பகலில் இருக்கும் அந்தப் பகுதி முற்றிலும் உருமாறி இருந்தது. தீடீரென ஒரு பெண் சாலையின் மையப்பகுதிக்குச் சென்று தன் ஆடையைத் தூக்கி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். சாலையில் சென்ற கார்கள் இவரின் வருகையால் ஸதம்பித்து நிற்க அந்தப் பெண் எதைப் பற்றிய உணர்வும் அற்று நின்றுகொண்டு ஆனந்தமாக தன் வேலையைச் செய்துகொண்டிருந்தார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் உடல் நலக் குறைவு சட்டென்று சரியானது போன்ற மாயை எனக்குள் கணப் பொழுதில் வந்து சென்றது. ஒரு வழியாக தர்ம தரிசனம் முடிந்து என் மருத்துவரைப் பார்த்துத் திரும்பினேன். எனக்குள் அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்மனைவியிடம் இதனைப் பற்றிச் சொன்னேன், "இதப் பாக்கத் தான் நடுராத்திரில போனிங்களா" என்று என்னை நக்கலாகப் பார்த்தார்.


==========================================================================================

ஒரு திரைப்படம்:

காதல் திரைப்படம் பார்த்த போது அதன் தாக்கம் வெகு நாட்கள் மனதுக்குள் இருந்தது. எனவே பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் :18/9 திரைப்படத்தினைப் பார்க்கும் ஆவல் எனக்குள் அதிகமாக இருந்தது. படத்தினைப் பற்றிய எல்லா வலைப்பூக்களிலும் வந்திருந்த விமர்சனங்களும் என் தம்பி படம் பார்த்துச் சிலாகித்ததும் எனக்குள் படத்தினைப் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியிருந்தன. எனவே நேற்றே இணையத்தில் தரைவிறக்கம் செய்து (என்ன செய்யுறது இங்க ரிலீஸ் ஆகலயே..) பார்த்தேன். பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களில் தனக்குள் இழுத்துக் கொண்டது திரைப்படம். இரண்டாம் பகுதியின் கதையும் முதல் பகுதியின் கதையும் மெல்ல இரண்டு சலனமற்ற ஆறுகள் கலப்பதைப் போன்று வடிக்கப்பட்ட திரைக்கதையும் என்னைத் திரைப்படத்துடன் கட்டிப் போட்டது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தினைக் கொடுத்தது. கவிதையாய் மெல்ல மனதினை அழுத்தும் முடிவும் ஒரு முழுமையினைத் தந்தது. மிக நல்ல பெயரினை தமிழ் சினிமாவிற்கும், இயக்குநருக்கும் பெற்றுத்தரும். இந்திய சினிமாவின் 100வது வருடம் தொடங்கிய நாளில் வெளியான மிகச்சிறந்த படைப்பு.


==========================================================================================

துளிகள்:

இங்கிலாந்தின் மழையளவு எப்போதையும் விட அதிகமாக பெய்து ஆறுகளில் எல்லாம் வெள்ளம். இதனை கண்கூடாகவும் பார்க்க முடிந்தது. மேலும் மே மாதத்தில் வழக்கதை விட குறைவான வெப்பம் வேறு. கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை ஆனால் குளிரும் கூடவே காற்றும் என்று கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது வெளியில் செல்ல.

ஒரு வழியாக மாவோயிஸ்ட்டுக்கள் கலெக்டரை விடுவித்துவிட்டார்கள் 13 தினங்களுக்கு பின்னர். "நான் களைப்பாக இருக்கிறேன்.கடத்தல்   விவகாரத்தை பற்றி பேசுவதற்கு முன்பு,வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை பார்க்க   விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். என்ன டீலிங் என்பது தான் தெரியவில்லை.

இனி இந்திய ரயில்கள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் எங்கு சென்று கொண்டிருக்கின்றன என்கிற தகவல்கள் எல்லாம் இந்த இணைய தளத்தில் காணலாம் http://www.trainenquiry.com/.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்காக அவர் ஒரு வருடம் சிறையில் இருக்கவும் போகிறாராம். பாத்து சார் ரொம்ப நாள் வைச்சிரப் போறாங்க....


==========================================================================================


இந்த வார ஆவணப்படம்.==========================================================================================

சில பாடல்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஒட்டிக் கொள்ளும். இந்தப் பாடலும் அது போலத் தான்.....==========================================================================================

1 comment:

 1. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills,videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete