Pages

29 May 2012

கற்றது கைமண் அளவு- 28/05/2012


அதிக வேலைப்பளு மற்றும் தொடர் பயணங்கள் காரணமாக கடந்த பத்து நாட்களாக எழுத இயலவில்லை. இன்றும் கூட கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்கிற முடிவோடு தான் கணிணியின் முன் அமர்ந்தேன். ஆனாலும் தொடர் அழைப்புகளும் அழுத்திய வேலைப் பளுவும் என்னைச் சோர்வுறச் செய்தன என்பது மட்டும் என்னவோ உண்மை...தேர்வுகள் எப்போதும் மிகுந்த மன அழுத்தம் கொடுக்க கூடிய ஒன்று. சென்றவார +2 தேர்வு முடிவுகள் ஒரு கலைவையான உணர்வினைத் தான் எனக்குக் கொடுத்தது. எங்களின் அருகிருக்கும் கிராமத்தில் படித்த மாணவர்களில் சிலர் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கியிருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் நகரங்களில் பயின்ற உறவினர்களின் குழந்தைகள் ஏனோ மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தது எனக்குச் சிலவற்றை உணர்த்தியது...ஒன்று நகரத்தின் பள்ளி மாணவர்களின் கவனம் கலைக்க எத்தனையோ வழிகள் மேலும் அவர்களுக்கு ஒரு மிதப்பு இருக்கவே செய்கிறது. கிராமத்தில் இவற்றின் இடையூறுகள் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனாலும் குறைவு மேலும் ஒரு முனைப்பு அவர்களிடம் இருக்கவே செய்கிறது. சரியான வழிகாட்டலுடன் வரும் கிராமத்து மாணவர்கள் பலர் உயரங்கள் தொடவே செய்கின்றனர். நகரத்துப் பெற்றோர்களும் எப்படி எல்லாம் நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் வாங்கி அடுத்து கட்டத்துக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று விடும் வல்லமை நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பரின் மகள் 10 வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று இம்முறை தேர்ச்சி பெற்றதே பெரிய காரியம் என்கிற அளவில் மதிப்பெண் வாங்கியது எனக்கு பேர‌திர்ச்சி தான். அவளின் மேல் வைக்கப்பட்ட மனச்சுமை அவளை சுத்தமாக முடக்கி விட்டது என்று தான் நான் சொல்வேன். எனக்கு அவளின் பாட அறிவின் மேல் அளவுகடந்த நம்பிக்கை உண்டு. நண்பர் பணத்தினைக் கொட்டி நல்ல கல்லூரியில் நல்ல ஒரு துறையை அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சென்றவாரம் நடந்த சில நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தன. குறிப்பாக என் வேலை நிமித்தம் சில இடங்களுக்கு இரண்டடுக்குப் பேருந்தில் செல்ல நேர்ந்தது. மேல்லடுக்கில் அமர்ந்து செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மேலே சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பள்ளிச் சிறுமிகள் யாருடனோ கைபேசியில் கதைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் என்ன பேசுகிறார்க்ள் என்று கவனிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் பேச்சு நாகரீகமற்று ஒரே இறைச்சலாக இருந்தது. எனக்கு இங்கிருக்கும் பள்ளி மாணவர்களின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும் அவர்கள் அடுத்துச் செய்த காரியம் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இருவரும் முத்தமிடுவதும், தங்களின் அங்கங்களை.....என்று அநாகரீகத்தின் உச்சகட்ட எல்லைவரை சென்றது. இதற்கு மேல் இங்கிருந்தால் சரிப்படாது என்று நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு முன் நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அன்று முழுவதும் இந்தச் சூழ்நிலையில் எப்படி என் குழந்தையை வளர்ப்பது என்கிற எண்ணம் என்னை படுத்தி எடுத்துவிட்டது.........

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றவாரம் பிரிட்டன் கொழுந்துவிட்டு எரிந்தது என்றால் மிகை இல்லை. எங்கும் அதிகபட்ச வெப்பம் 24-26 பாகை செல்சியஸ் ஆக இருந்தது..இருக்கிறது. எடின்பரா கொஞ்சம் பரவாயில்லை...பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் (18 பாகை செல்சியஸ்) இரவு நேரங்களில் 10-12 ம் ஆக இருந்தது. சூரியனின் கதிர் வீச்சு இங்கு மிகவும் அதிகம் மற்றும் புற ஊதாக் கதிர்களின் (UV rays) அடர்த்தியும் அதிகம் என்பதால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சராசரியை விடவும் அதிகமாக இருக்கும். வெள்ளக்கார மக்கள் துணி துறந்து அரை நிர்வாண பக்கிரிகளாய் உலாவருகின்றனர். ஊருக்கு பேசியபோது அவர்களும் இங்கும் தாங்க முடியாத வெக்கையா இருக்குப்பா என்று சொன்னார்கள்...அதிக வெப்பத்தால் வெளியில் சென்று விளையாட முடியாமல், துண்டை நனைத்து அதை விரித்து அதன் மேல் படுத்திருந்த சிறுவயது நினைவுகள் ஏனோ வந்து போனது....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிரியாவில் வன்முறை வரைமுறையற்று சென்று கொண்டிருக்கிறது...சிறுவர்கள் முதற்கொண்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் ஏனோ மனதினை அறுத்தது...வன்முறையின் மேல் மனிதர்களுக்கு இருக்கும் பற்று எப்போது அற்றுப் போகும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு பாக்கிஸ்தானிய தம்பதியினர் தங்கள் மகளைக் கொன்ற சம்பவம் சென்றவாரச் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது....இதனைப் பார்த்த இளைய மகள் போலீஸிடம் சொல்லியிருக்கிறார் அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து...இந்தப் பெண் ஒரு கடையில் திருடும் போது மாட்டிக் கொண்டு ஏதேதோ சொல்லி தப்புவதற்கு முயலும் போது தனது அக்காவை தனது பெற்றோர் தன் கண் முன்னால் கொன்றனர் என்று சொல்லி ஆரம்பித்து வைக்க போலீஸ் இதன் ஆதி அந்தபற்றி விசாரணை செய்யத் தொடங்கியிருக்கிறது...... அவர்களுக்கு கிடைத்த பதில்...இங்கேயே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் மேனாட்டு கலாச்சாரப் படி 15 வயதில் தனக்கான ஆண் நண்பரை வைத்துக் கொள்வது, இன்ன பிற சமாச்சாரங்களுடன் வளைய வந்தவரை பெற்றோர் கண்டித்து பாக்கிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றிருக்கிறார்கள். பின்னர் ஏதோ பிரச்சனையில் மீண்டும் இங்கிலாந்து வந்து அந்தப் பெண்ணை கொன்று விட்டார்கள் என்று தங்கை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அப்பாட ஒரு வழியா ஐ.பி.எல் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதைப் பற்றியே பேசிக் கொள்(ல்)வார்கள். நான் இறுதிப் போட்டி கூட காண முடியவில்லை...பெரிய விருப்பமும் இல்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார இசைப் பேரரசனின் மயக்கும் மெலடி....எப்போது கேட்டாலும் இதனுள் இருக்கும் இளமைத் துள்ளல் என்னைக் கட்டிப் போடும்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தவார ஆவணப்படம்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


No comments:

Post a Comment