Pages

7 May 2012

லஃபரோ முதல் எடின்பரா வரை -6

 


தொடர்வண்டி டார்லிங்டன் மற்றும் டர்காம் தாண்டி நியுகாஸலில் வந்து நின்றது. இங்கிருந்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடின்பரா சென்றுவிடலாம் என்கிற நினைப்பே எனக்கு மகிழ்வாக இருந்தது. இந்த நிலையம் இங்கிலாந்தின் வடக்கில் இருக்கும் பெரிய நிலையம். இங்கிலாந்தின் கடைசி எல்லை நகரம் என்று கூடச் சொல்லலாம். மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகர் டைன் நதிக்கரையில் அமைந்துள்ளது. தொடர்வண்டி நகருக்குள் நுழையும் போதே வலதுபுறம் இந்த நதி பக்கவாட்டில் ஓடிவரும். இதன் கரையில் அமைந்துள்ள மிகுந்த கலையம்சம் கொண்ட பாலங்களும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். பெரும்பாலான தொடர்வண்டி நிலையங்கள் ஒரே வடிவமைப்பில் தான் பிரிட்டன் முழுவதும் இருக்கும். அந்த பிரமாண்டமான இரும்புக் கூரைக்குள் தொடர்வண்டிகள் உள் நுழைவதும் வெளிவருவதும் பார்ப்பதற்கு பேரானந்தமாக இருக்கும். 1080ம் வருடம் இராபர்ட் என்ற அரசனால் கட்டப்பட்ட கோட்டையினைக் கொண்டு தான் இந்த நகரின் பெயரும் இன்று வரை அழைக்கப்படுகிறது. இந்நகர் கம்பளி உற்பத்திக்கு பெயர் போனது. கால மாற்றம் மற்றும் தேவையின் காரணமாக பின்னர் இங்கு நிலக்கரி அகழ்வு என்பது முதன்மை தொழிலாகி பின்னர் இன்று வரை பெரும் கப்பல் கட்டும் துறைமுகங்களைக் கொண்ட நகராக திகழ்கிறது. மேலும் இங்கு இரவு வாழ்க்கை என்பது மிகுந்த விசேசமிக்கதாகவும் இங்கு தயாரிக்கப் படும் பீர் (Newcastle Brown Ale ) பிரபலமானதாகவும் இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கான the first Carbon Neutral town என்று அறிவிக்கப்பட்ட நகரமும் இது தான். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் சீன புத்தாண்டுக் கொண்டாட்டமும், மார்ச் மாதம் நடக்கும் அறிவியல் திருவிழாவும், ஏப்ரலில் நடைபெறும் பீர் திருவிழாவும், மே மாதத்தில் நடைபெறும் இசைத் திருவிழா மற்றும் சர்வதேச திரைப்பட விழாவும், ஜூன் மாதம் ஐரோப்பாவின் மிகப் பெரிய பயணக் கண்காட்சி (The Hoppings), ஜூலை மாதம் பிரிட்டனின் சுற்றுச்சூழல் திருவிழா மற்றும் "Family Fun Day" and "Carnival Day" போன்ற நிகழ்ச்சிகளும் என்று வருடம் முழுமைக்கும் நடக்கும் திருவிழாக்கள் இந்நகரை ஒரு பெரிய சுற்றுலா தளமாகவும், கேளிக்கை நகராகவும் மாற்றி இருக்கின்றன என்றால் மிகையில்லை.

   

இந்நகருக்கு நான் சென்றதில்லை ஓரிரு முறை தொடர்வண்டி மாறிய அனுபவம் தவிர. தொடர்வண்டி டைன் நதியின் மேல் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான பாலத்தினைக் கடந்து தான் நியூகாஸல் நிலையத்தினை அடையும். பார்க்க மிக அருமையாக ரம்மியமாய், ஒய்யாரமாய் டைன் நதி வடக்கு கடலை நோக்கிச் செல்லும் அழகே அழகு தான். வண்டி நிலையம் அடைந்து நிற்கவும் மீண்டும் மக்கள் கூட்டம் வந்து மொய்துக்கொள்ளவும் சரியாக இருந்தது. நான் இருந்த இருக்கையின் அருகில் இருந்த இடம் காலியாக இருந்தது இதுவரை. மெல்ல மக்கள் தங்களுக்கான இடங்களில் அமரவும், சிலர் காலியாக இருக்கும் இடங்கள் தேடி அமரவும் சற்று அவகாசம் எடுத்துக் கொண்டனர். எனது இருக்கையும் ஒருவரால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டு மேலும் மக்கள் தங்களுக்கான இருக்கையை பிடிக்க முடியாமலும் நிற்கவும் ஆரம்பித்திருந்தனர். தொடர்வண்டி மெல்ல தனது பயணத்தினைத் தொடங்கவும் வெளியே மழையும் பனியும் கலந்த கலவையாக வானம் பொழியத் தொடங்கியது. நானிருந்த அமைதிப் பெட்டி மக்களின் ஆக்கிரமிப்பால் அதன் அமைதியை இழந்து சராசரிப் பெட்டியாகியிருந்தது. புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் 'தொடர்வண்டி  இன்னும் 15 நிமிடங்களில் இருப்புப் பாதை செப்பனிடும் பணி காரணமாக தொடர்வண்டி நிறுத்தப் படும் என்றும், அது சரிசெய்யப் பட்டு 30 நிமிடங்களில் மறுபடியும் பயணம் தொடரும்' என்றும் அறிவிக்கப் பட்டது. சரி 30 நிமிடம் தானே என்ன‌வாகி விடப் போகிறது என்று என் மடிக் கணிணியைத் திறந்து பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் பெறும் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன். தொடர்வண்டியின் வேகம் படிப்படியாகக் குறைந்து நிற்க ஆரம்பித்தது. நானும் படிப்பதில் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கினேன். வெளியில் மழை நின்று பனிப் பொழிவு மிகுந்த காற்றுடன் தொடங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த பெரியவர் என் கவனம் கலைக்க 'ஓட்டுநர் உரிமம் பெறவா?' என்றார். நானும் அப்போது தான் அவரின் முகத்தினைப் பார்த்தேன், நல்ல பெரிய மீசை உதட்டில் சிநேகமான புன்னகை என்று சட்டென்று கவனம் ஈர்த்தார். நான் 'ஆம் ஒரு முறை முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன்' என்றேன்.2 comments:

  1. எடின்பராவுக்கு பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தருகிறது கட்டுரை. ஓட்டுநர் உரிமம் விரைவில் பெற்றிட வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நன்றி தோழரே

    ReplyDelete