Pages

6 June 2012

கற்றது கைமண் அளவு- 06/06/2012

இருவர்:

Diamond Jubilee state procession


இங்கிலாந்து இராணி பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பிரிட்டன் முழுவதும் சென்ற வாரத்தின் நான்கு நாட்கள் விடுமுறை.மழையும் வெயிலும் கலந்து கட்டி அடித்தது. மழையையும் பொருட்படுத்தாது மக்கள் வெள்ளமென பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்து இராணிக்கு வாழ்த்துச் சொன்னார்கள். பிரிட்டன் முழுவதும் பார்ட்டி, கொண்டாட்டம் என்று திருவிழா போல அமர்க்களப்பட்டது. அம்மையாரின் வயது 86. இன்னமும் பிரிட்டனுக்காக வெளிநாட்டுப் பயணமும் கைகுலுக்கள் என்று சிம்மாசனத்தை அலங்கரிக்கிறார். அரசியல்வாதிகளும் அரச குடும்பத்தைக் கொண்டு சாதித்துக் கொண்டது தான் அதிகம். இந்தத் தள்ளாத வயதிலும் தனது நிலையில் இருந்து விலகி வாரிசுக்கு இடம் கொடுக்க மனமில்லையா இல்லை அரசியல் காரணங்களா என்று தெரியவில்லை. இளவரசர் சார்லஸ் தான் பாவம். அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இலவு காக்கிறார். இந்த இராணிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை நமது 89 வயது இளைஞர் கலைஞர் அவர்கள். குடும்பதில் உள்ள குளறுபடியாலும், உட்கட்சி அரசியலாலும் இவருக்கும் ஓய்வில்லை. தன் வாழ்நாள் முழுவதும் முக்கால்வாசி சுயநலத்தோடும் கால்வாசி பொதுநலத்துடன் (இது கூட அளவு குறையுமே ஒழிய கூடுவதற்கான வாய்ப்பே இல்லை) இருந்து தன் வாழ்வின் கடைசி காலத்தைக் கூட நிம்மதியாக கழிக்க முடியாமல் வாரிசுகளின் சண்டை, மகளின் ஊழல் வழக்கு, என்று குடும்பத்து பிரச்சனைகளை முன்னிறுத்தி/பின்னிறுத்தியே அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. இவரை நம்பி காத்திருக்கும் ஸ்டாலினுக்கும் கதியில்லை. 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரு வெற்றி:

                                               
ஐ.பி.எல். கல்கத்தா அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட அம்மாநில முதல்வர் பெரிய விருந்து படாடோபம் என்று அசத்தி இருக்கிறார். ஒரு சாதாரண ஒரு லோக்கல் கிரிக்கெட்டிற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஒரு மாநில முதல்வர். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவராக தன்னை முன்னிறுத்தும் போது இன்று சிறுவர்களாக ( அதாவது ஓட்டு போடும் வயதினை அடையாத)உள்ளவர்கள் வளரும் போது ஒரு சிறிய மாற்றத்தினை அவர்கள் மனதில் விதைக்க மேலும் தான் நடப்பு விசயங்களில் கவனத்தோடு இருக்கிறேன் என்று சொல்ல அல்லது மக்களின் கவனத்தை திருப்ப என்று எவ்வளவோ இருக்கும் என்று நினைக்கிறேன்.

                                               
ஆனந்த் மேலும் ஒரு உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். மிகவும் மகிழ்வாக இருக்கிறது. எனக்கெல்லாம் செஸ் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரியும் எனில் அதற்கு முழுக் காரணமும் அவர் மட்டும் தான். இது போன்ற வெற்றிகள் பலரின் மனதில் புதிய மாறுதலைக் கொண்டுவரும். தமிழக அரசும் சதுரங்கம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அறிவித்ததுள்ளது. இந்தத் திட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படும் போது திறமையான நல்ல பல சதுரங்க வீரர்களை அடையாளம் காண இயலும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இருவிழா:

கமல் கலந்து கொண்ட இரு விழாக்களில் ஒன்றில் அவரின் பேச்சும் மற்றதில் வைரமுத்து அவர்களின் பேச்சும் ஹைலைட். கமல் கலந்து கொண்ட இளையராஜாவின் புத்தக வெளியீட்டு விழாவில் 'நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு' என்றதும்; மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் அறிமுகமாகும், 'பொன்மாலைப் பொழுது' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் 'எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு பேரும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கி சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த பாவம் கமல்ஹாசனை சும்மா விடுமா? அதனால்தான் இப்போது அவர் கதாநாயகிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இன்னும் பல காலம் இதை அவர் செய்து கொண்டே இருக்கட்டும்' என கவிஞர் வைரமுத்து கூறியதும் தான் இந்த இரு விழாக்களின் சிறப்பு. மேலும் ஒரு சிறப்பு இந்தப் புகழாரங்களுக்கும் விழாக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இரு துயரங்கள்:

2012 லண்டன் ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாமில், அழுகிய பழத்தில் தயாரித்த ஜூஸ் மற்றும் அசுத்தமான சமையல் அறைகளில் சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக, முன்னாள் இந்திய நீச்சல் வீரர் கஜான் சிங் குற்றச்சாட்டி உள்ளார். என்னவொரு கொடுமையான சம்பவம். இந்த லட்சணத்தில் பதக்கம் எங்கேயிருந்து வாங்குறது. ஏதாவது அண்ணாச்சி கடையில் வெங்கலக் கிண்ணம் தான் வாங்கியார முடியும்.....

விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார். இந்தத் தகவலை அந்த விவசாயியின் மகள், டிவி டாக் ஷோ ஒன்றில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர். அந்த மகளையும் உறவுக்கு அழைத்தார் என்று வேறு அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனதை மயக்கும் இசைஞானியின் பாடல். என்றும் இளமை.....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கிலாந்து மகாராணியின் பாராளுமன்ற வைர விழா சிறப்பு உரை.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment