Pages

1 June 2012

கோவை நினைவுகள் -10

ஒரு சிலருக்கு பல சமயங்களில் தொடர்ந்த வாசிப்புகள் கொஞ்சம் சலிப்புத் தட்டி நமக்குள் இருக்கும் படைப்பு அரக்கனை தட்டி எழுப்பி விடும். வேறு சிலருக்கு தங்களின் தொடர்புகள் அல்லது தனது கவிதையோ கதையோ பிரபல இதழ்களில் வெளியாகமல் திருப்பி அனுப்பப் படும் போதும் அந்த அரக்கன் விழித்துக் கொள்வான். ஆனால் எனக்கு கவிதை (அ) கதை அல்ல ஒரு வாசகர் கடிதம் கூட அனுப்பிய அனுபவம் இல்லை. ஆனாலும் வாசிப்பு அடுத்த தளத்துக்குச் செல்ல தடுமாறிக் கொண்டிருந்த போது தான் அந்த விபரீத எண்ணம் எனக்குள் வந்தது. உடனே முத்துக்குமார் அண்ணாவிடம் சொன்னேன் ' நாம் ஏன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கக் கூடாது' என்று. அவரும் எனக்கு இல்லை என்று சொல்லிப் பழகாததால் உடனே சரி என்றார். பின்னர் பத்திரிக்கை ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் எல்லாம் பற்றி ஆலோசனை செய்த பின்னர் ஒரு வழியாக ஆரம்பிப்பது என்று முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்க ஆரம்பித்தோம். என்னை ஒரு வாசன் போல, தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் போல, குமுதம் ஆசிரியர் போல‌ கற்பனை எல்லாம் செய்து பார்த்தேன். என்னையும் முத்துக்குமார் அண்ணாவையும் குமுதம் ஆசிரியர் மற்றும் எடிட்டர் போல எல்லாம் என் கற்பனை எங்கெங்கோ சென்றது.ஆனால் எதார்த்தம் என்பது கற்பனைக்கு எட்டாத உயரம் என்பதனை வேலைகளை ஆரம்பித்த சில தினங்களில் புரிந்து கொள்ளத் தொடங்கினோம். எங்களின் வேலை நேரம் போக மீதமிருந்த நேரம் முழுவதும் எங்களின் இதழ் பற்றிய சிந்தனையே எங்களை ஆட்கொண்டது. தலைப்பில் ஆரம்பித்தது எங்களின் தேடல். ஏதேதோ தலைப்புகள் என்று தேடி இறுதியில் தமிழோசை என்று முடிவு செய்தோம். இந்தத் தலைப்பினைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த பெரிய மனிதர்களிடம் கருத்துக் கேட்டோம். ஒவ்வொருவரும் தங்களின் எண்ணத்தினைக் கூறினார்கள். அவர்களின் கருத்துக்கள் எங்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் பெரும்பாலனவர்கள் தங்களுக்குப் பிடித்திருப்பதாகவே கூறினார்கள். எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவர்களின் கருத்துக்கள். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாளிதழுக்கு தமிழ் ஓசை என்று பெயர் சூட்டியதாக வெளியான செய்தி எங்களை கவலையின் உச்சத்திற்கு இட்டுச்சென்றது. இருந்தாலும் எங்களுடைய முடிவினில் மிகவும் தெளிவாக இருந்தோம். அடுத்த கவலை எங்களின் இதழ் எவ்வாறானது, வார இதழா, வாரம் இருமுறை, 15 நாளுக்கு ஒருமுறை, மாதஇதழ், எந்தக் கால இடைவெளியில் வெளியாக வேண்டும். ஒரே குழப்பமாக இருந்தது. சரி, எவ்வளவு பணம் செலவாகுமோ அதனைப் பொறுத்து முடிவு செய்யலாம் என்று அதற்கான விசாரனைகளில் இறங்கினோம். முதலில் வார இதழில் ஆரம்பித்த எங்களின் கனவு 1000 பிரதிகள் அச்சடிக்க ஆகும் செலவினைக் கேட்க கேட்க மெல்லச் சுருங்கி வாரஇதழ் காலாண்டு இதழில் வந்து நின்றது. பிறகு எங்கள் இதழ் அச்சாகும் அச்சகம் மற்றும் அதனை தட்டச்சு செய்ய என்று ஆட்கள் தேடியலைந்து ஒரு வழியாய் எங்களின் நண்பர்களே இவற்றினை செய்து தர எங்கள் இதழின் கருத்தின் வடிவமைப்பில் தொடங்கிய கலந்துரையாடல் பெரிய கலகத்தில் வந்து நின்றது.என்னென்ன தகவல்கள் இடம்பெற வேண்டும் எவ்வளவு இடம்பெற வேண்டும் என்பதில் தொடங்கி, இதழின் வடிவமைப்பு மற்றும் எழுத்துரு எப்படி இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்குள் பெரும் பூகம்பமே மூண்டது. பின்னர் ஒருவழியாக ஒவ்வொன்றாய் களைந்து இதழ் ஒரு வடிவிற்கு வந்து நின்றது. நான் யாரைப் பார்த்தாலும் என் இதழ் பற்றியும் அதற்கான சந்தா விபரங்கள் பற்றியும் மட்டுமே பேசும் ஒரு அறுவை கிராக்கி ஆகிப் போகியிருந்தேன். என்னைப் பார்த்தாலே என் உறவினர்களும் நண்பர்களும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். சிலர் என்னிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி 'தம்பி கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு, நாளைக்கு வாறியா' என்கிற மாதிரிப் பதில்களோடு என்னை எதிர் கொள்ள ஆரம்பித்தனர். ஒருவழியாக ஒரு மிகப் பெரியப் போராட்டத்திற்குப் பின்னர் யாராவது ஒருவரின் நேர்காணல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அண்ணா ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் தான் கோவை ஞானி அய்யா அவர்கள். மற்றவர்களின் அணுகு முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையோடு சுற்றிலும் புத்தகங்கள் நம்பமாட்டீர்கள் கழிவறை முழுதும் புத்தகங்களின் பொதிக்குள் அவர் இருந்தார். அவரைப் பார்க்கும் வரை அவருக்கு பார்வை இல்லை என்கிற விபரம் தெரியாது. இந்த மனிதருக்கு பார்வை இல்லை என்றால் யாரும் நம்ப முடியாது. நானும் அவரைப் பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன். மெய்மறந்து அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் சென்ற விபரம் சொல்லவும் 'ஓ பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறீங்களா, நல்லா ஆரம்பிங்க..' நாங்கள் கேட்ட முதல் நல்ல வார்த்தை அது தான். பின்னர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல பத்திரிக்கையின் நல்லது கெட்டது எல்லாம் சொல்லி நேர்காணலுக்கும் சம்மதம் சொன்னார். எல்லாம் முடிந்து எங்களின் இதழ் முதலில் அச்சேறியது. முதலில் அச்சில் இருந்து வந்த இதழின் மணமும் பட்டுப் போன்ற பளபளப்பும் மென்மையான அதன் ஸ்பரிசமும் இன்னமும் என் நினைவு அறைகளில் பசுமையாய் இருக்கிறது. ஞானி அய்யா தான் யாரெல்லாம் இதழ் விற்பவர்கள், அவர்களின் முகவரி, அனைத்தும் தந்து, அனைவரிடமும் அறிமுகம் செய்து என்று கிட்டத்தட்ட எங்களின் விளம்பர தூதர் போலவே இருந்து நெறிப்படுத்தினார். என் கவிதைகள் வேறு வெளியாகி இருந்தன. ஞானி அய்யா என் கவிதை பற்றி என்ன விமர்சனம் செய்வார். என்கிற எதிர் பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட அதனைப் பற்றி சொன்னதே இல்லை. நான் பொறுமை இழந்து ஒரு நாள் கேட்டே விட்டேன், ' என் கவிதை எல்லாம் எப்படி இருக்கு' என்று. அவர் சொன்ன பதில் ' ஒரு ஆயிரம் இது மாதிரி எழுதுனா, கண்டிப்பா கவிதை வந்துரும்' . அதற்குப் பின் கவிதை என்கிற ஒன்றை நான் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. எங்களின் இதழுக்கு பரவலான வரவேற்பு இருந்தது. எங்களுக்கு இதழ் வெளியிட தெரிந்த அளவுக்கு பணம் செய்யத்தெரியவில்லை. எங்கள் இதழ் மூன்றாவது இதழோடு தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. 

No comments:

Post a Comment