Pages

3 June 2012

இடப்பெயர்ச்சி


இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் என்பது அவ்வளவு எளிதாக முடியும் காரியமில்லை. பழகிய இடத்தினை மனிதர்களை விட்டுப் பிரிவது என்பது மிகவும் துயரம் என்றால் புதிய இடத்தில் நாம் சென்று நம்மைச் சூழலுக்கு ஏற்றார் போல பொருத்திக் கொள்வது என்பதுவும் ஒரு சிரமமான் செயல் தான். காலச்சுழற்சியில் இடமாற்றம் என்பது ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகிறது. பிறந்து வளர்ந்த மண்ணை, வீட்டை, நாட்டை, மனிதர்களை விட்டுப் பிரிவது துன்பம் மட்டுமல்ல அது பெரும் வலி. உணர்ந்தால மட்டும் தான் அந்த வலியின் கொடூரம் உறைக்கும். மதுரையை விட்டு கோவை வந்தபோதே எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பத்து வருடங்களுக்கும் மேல் வாழ்ந்த கோவையை விட்டு தென்கொரியா சென்ற போதும் மிகுந்த துயரமாகத்தான் உணர்ந்தேன். பின்னர் மாற்றம் என்பது இயல்பான ஒரு நிகழ்வாய் எனக்குப் பழகிப் போனது. வாடகைக்கு இருக்கும் வீடுகளின் மேல் பற்று எல்லாம் இருக்காது. அந்த வீட்டோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றவே மாட்டேன். அது ஒரு புகலிடம் போன்று பற்றற்று வெகு தூரம் செல்லும் பறவை இளைப்பாறும் ஒரு மரத்தின் கிளை போலத்தான் எனக்கும் வீடுகளுக்குமான தொடர்பு கடந்த ஐந்து ஆறு வருடங்களில் இருந்து வந்துள்ளது. எதார்த்தத்தின் நிதர்சனம் எனக்குத் தெரியும் என்பதால் வீடுகளைச் சுமந்து செல்வதில்லை, அவற்றின் சுகமான நினைவுகள் மட்டும் என் நினைவுப் பெட்டிக்குள் சேமிக்கப் பட்டு விடும். பிரிட்டன் வந்தபோது என் மனைவியும் மகளும் என்னோடு வரவில்லை. ஒரு வருட தாமத்திற்குப் பின்னர் தான் என்னுடன் வந்திணைந்தனர். அந்த ஒரு வருடத்தில் என் முகவரி ஆறு இடங்களுக்கு மாறி இருந்தது. தனியாக, நண்பர்களுடன், ஒருவரின் வீட்டில் ஒர் அறையில் என்று என் கூடுகள் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. எனக்கு மட்டும் சலிப்பாக இருந்ததே இல்லை இன்றுவரையிலும். 

திருமணம் ஆன நாளிலிருந்து என் மனைவி என்னோடு தேசாந்திரியாய் ஒவ்வொரு தேசமாகச் சுற்றும் வரத்தினைப் பெற்றார். அவருக்கு எப்போதும் இடப்பெயர்ச்சி என்பது மிகவும் எளிதான ஒரு செயலாகவே இருந்து வந்துள்ளது நேற்று வரை. இன்றிலிருந்து லஃபரா விட்டு எடின்பரா வர வேண்டும். இம்முறை இடமாற்றத்தை அவரால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. லஃபரா அவருக்கு கோவைக்கு அடுத்த தாய்வீடு போல ஆகிவிட்டது தான் காரணம். யாருடனும் அவ்வளவு எளிதில் பழகக் கூடிய சுபாவமுள்ளவர் இல்லை என் மனைவி. நண்பர்களை தெரிவு செய்ய சில காலம் பிடிக்கும் அவருக்கு. என் மகளின் சுபாவம் அப்படியே நேரெதிர். அவளுக்கு நண்பர்கள் ஏராளம். எனவே என் மனைவிக்கு, மகளின் நண்பர்களுடன் பழகியே ஆகவேண்டிய கட்டாயம் வேறு. எனவே குடும்ப நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. அடிக்கடி நிகழும் சந்திப்புகளும் அவரை சமூக அளவிலும் மாற்றி இருப்பதை என்னால் கடந்த ஒரு வாரத்தில் காண முடிந்தது. இடைவிடாத அழைப்புகள், நண்பர்களின் வருகை, நாங்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது என்று நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருந்தார். லஃபரோ அவரை சமூக அளவிலும், தன்னளவிலும் மிகவும் மாற்றிவிட்டிருக்கிறது என்பதனை என்னால் உணர முடிந்தது. 

எப்போதும் இடமாற்றத்தில் என் பங்கு தான் அதிகம் இருக்கும். எல்லாம் ஒருங்கிணைத்து வேறு இடம் செல்வது என்பதுவும் கூட ஒரு கலை தான். சரியாக திட்டமிட வில்லை எனில் கடைசி நிமிட மன நெருக்கடிக்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இந்த முறை என் பங்கு என்பது மிகவும் சொற்பம் தான். எடின்பராவில் வீடு பார்த்தது மட்டும் தான் என் வேலையாக இருந்தது. அதுவும் என் மனைவி பெரும்பாலும் இணையத்தில் தேடிய வீடுகளின் முகவரி தேடி நானும் என் நண்பரும் சென்று வீட்டினைப் பார்த்து புகைப் படம் எடுத்து அனுப்புவது தான் என் வேலை. என்மனைவிக்கு லஃபரோவில் இருப்பது போன்ற வீடு பார்த்து விட வேண்டும் என்பது தான் முதல் குறிக்கோளாக இருந்தது. லஃபரோவில் நாங்கள் இருப்பது ஒரு தனி வீடு முன்னே தோட்டம், வீட்டின் பின்னர் ஒரு அழகான தோட்டம் ஒன்றும் இருக்கும். வீட்டின் பின்புறம் தக்காளி, கேரட், பீன்ஸ் என்று ஒரு சிறிய காய்கறித் தோட்டம் மற்றும் ரோஜாவில் பெரும்பான்மையான சிகப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் என்று எல்லாச் செடிகளும் வளர்த்துப் பராமரித்து வேறு வந்தார். எனவே கிட்டத்தட்ட இது போன்ற ஒரு வீடு பார்ப்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதனை சில வீடுகளின் படங்களைப் பார்த்தே ஒரு முடிவுக்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். பின்னர் கொஞ்சம் விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்டு வீட்டினைப் பார்ப்பார். நாங்கள் இப்போது போகும் வீடு நான் கூட சென்று பார்க்கவில்லை. என் நண்பர் எடுத்த புகைப் படங்களிலும் அவர் மிகவும் கெஞ்சி என் மனைவியிடம் ' இங்க பாருங்க சகோதரி இதுக்கு மேல இங்க வீடு இல்ல. எல்லா வீட்டையும் பார்த்தாச்சு. எல்லா வீட்டு ஏஜென்டுகளும் எனக்கு நண்பராகிட்டாங்க, பாவம் இந்தப் பய ரொம்ப கஷ்டப்படுறான்னு நினைப்பாங்களோ என்னவோ, ஏதாவது புது வீடு வந்தா முதல்ல எனக்குச் சொல்லிட்டுத்தான் அப்புறமா வெளம்பரமே செய்யுறாங்க' என்கிற ரீதியில் அவர் சொல்லி என் மனைவியை எடின் பரா வரச் சொல்லி பார்த்து அவருக்குப் பிடித்துப் போன ஒரு வீடு. வீடு எடுத்து ஒரு மாசம் முடிந்து விட்டது. நான் ஒரு ஆராய்ச்சி எலி போல தங்கியிருந்து எனக்குப் பிடிச்சிருக்கு என்றவுடன் இப்போது இந்த இடமாற்றம் நிகழ்கிறது. வீடு மாற்றல் கூட முழுவதும் என் மனைவியே செய்ததுவும் இந்த முறைதான். அவரின் தனித்தன்மை எந்த இடையூறும் இன்றி வெளிப்பட்டதை என்னால் கண்கூடக் காண முடிந்தது. பழைய வீட்டின் அனைத்துக் கணக்குகளையும் முடித்து எல்லாப் பொருட்களையும் இடமாற்றம் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வது வரை அவரே எல்லாம் செய்தார். என் உதவி அவர் கேட்ட பணத்தினைக் கொடுத்தது மட்டும் தான். இன்றுமுதல் புதிய வீடு, புதிய மனிதர்கள், குறிப்பாக என் மகளுக்கு புதிய பள்ளி என்று எல்லாம் புதிதாக இருக்கும். என் மகள் தான் என்னிடம் 'ஏம்ப்பா எல்லாத்தையும் அம்மா அனுப்புறாங்க' என்று தொடர்ந்து வேறுவேறு வார்த்தைகளில் என்னிடம் வேறு பதில் எதிர்பாத்தோ என்னவோ கேட்டுக் கொண்டேயிருந்தாள். பிடுங்கி நடப்படும் நாற்று தான் வளமாக உறுதியாக வளரும் என்றாலும் என்மகளின் ஊர் என்று எதனைச் சொல்வாள், இதுவரை சில மாதங்கள் மட்டுமே இருந்த என் கிராமத்தையா, இல்லை அவள் வளரவளர நாங்கள் மாறிக் கொண்டே இருக்கும் ஊர்களையா. சிறுவயது நினைவுகளும் அனுபவங்களும் இன்னும் சில வருடங்கள் கழித்து அவளின் பால்ய நினைவுகள் எந்த ஊரை அவளுக்கு நினைவூட்டும் என்கிற கவலைகள் என் மனதினை செல்லரிப்பதைப் போன்று அரித்துக் கொண்டே இருக்கிறது. இவளுக்காகவேனும் ஓரிடத்தில் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது......


No comments:

Post a Comment