Pages

6 August 2015

இயற்கை எனும் ஆசான் : சூரிய ஆற்றல் - வண்ணத்துப்பூச்சிகளின் பங்கு


"உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்" என்ற கம்பனின் வரிகள் கடவுளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ காலையும் மாலையும் கருத்துடன் செயலாற்றும் கதிரவனுக்கு பொருந்தும். ஆழி சூழ் உலகில் அனைத்துக்கும் ஆதாரம் ஆதவன் அன்றி எவரும் இல்லை. "நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே" எனும் திருவாசகம் போல வண்ணத்துப்பூசிசிகளின் செயல் பாடுகளை நுணுகி நோக்கியதன் விளைவே எங்களின் ஆய்வில் பாரிய மாற்றத்தை விளைவித்தது. பலவகை பட்டாம்பூச்சிகளில் ஒன்று வெள்ளை பட்டாம்பூச்சி. பிரிட்டனில் வாழும் வெள்ளை பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு முன், தங்கள் இறக்கைகளை ஆங்கில எழுத்தான, 'வி' வடிவத்தில் வைத்து, உடலை சூடேற்றிய பின், பறப்பது வழக்கம். எங்களின் முனைவர் பட்ட ஆய்வு மாணவி Katie Shanks சோலார் பேனல்களில் குவிப்பனாக பயன்படுத்தினால் என்ன விளைவை தரும் என்ற நோக்கத்தின் பயனே எங்களின் சமீபத்திய ஆய்வு. இந்த சூரிய குவிப்பான்கள் அறுவடை செயல்திறனை மேம்படுத்த (கிட்டதட்ட 50%), சூரிய தகடுகளின் எடையினை குறைக்க ( ஒட்டுமொத்த கட்டமைப்பு 17 மடங்கு) மற்றும் ஒற்றை அடுக்கு அளவில் செல் போன்ற கட்டமைப்புகள் ஒரு ஒற்றை அடுக்கு மேலும் ஒரு பயனுள்ள பூச்சு அமைக்க என பலவிதங்களில் பயன்படுத்த முடியும்.
எதுவும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது.... 

15 September 2012

தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...


தண்ணீரில் மிதக்கும் மக்கள்... தவிக்க விட்ட ஜெ...

கூடங்குளத்தில் அச்ச அலை!

 கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டி, அதற்கான வேலைகள் தொ​டங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது, இதை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் சில நூறுபேர்தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் அதிக மானதைத் தொடர்ந்து, போராட்டத்தில் அதிகம் பேர் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் சாயப் பட்டறைகள், கடலூர் கெமிக்கல் நிறுவனங்கள், திண்​டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றோடு கூடங்குளமும் பேசப்படும் நிலைக்கு வந்தது.கூடங்குளத்தின் கடல் ஓரத்தில் நடந்துவந்த போராட்டத்தை, நாடு முழுவதும் பரவ வைத்தது மட்டும்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரே சாதனை. 'ஈரைப் பேன் ஆக்கி பேனைப் பெருமாள் ஆக்குவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். போலீஸ் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், அமைதிப்படுத்துவதை விட தங்களது அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பது  ஆட்சியாளர்களுக்கு இன் னமும் தெரியாமல் இருப்பது, தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்!
கடந்த ஆண்டு, ஜப்பான் ஃபுகுஷிமாவில் அணு உலை வெடிப்பு காரணமாக உலகம் முழுவதும் அணு உலைகளுக்கு எதிரான பிரசாரங்கள் பெருகின. அது தமிழகத்திலும் பற்றிக்கொண்டது. இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரவேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டது. கூடங்குளம் மக்களைச் சந்தித்து அவர்களது பீதியை அதிகப்படுத்தும் அளவிலான வகுப்புகளை அணுமின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.
'அணு உலை வெடிச்சா, நீங்க என்ன பண்ணணும் தெரியுமா? முகத்தை மூடிக்கிட்டு மூணு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடணும்’ என்று தொடங்கி 'ஆறு மாதங்களுக்கு ஊருக்குள் நீங்கள் வரக்கூடாது’ என்பது வரை வார்த்தைகளால் ரத்தத்தை உறைய வைத்தனர். தாங்கள், சாவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை கூடங்குளம் மக்கள் உணர ஆரம்பித்தனர். அப்போதுதான், 'கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தெருமுனைப் பிரசாரம் செய்யத் தொடங்கினனர். மாதத்துக்கு ஒரு கிராமத்தில் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தார்கள். ஆண்கள் அனைவரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுவிட, பெண்கள் மட்டும் இதில் கலந்துகொள்வது என்று முடிவானது. முதலில் கூடங்குளம்... அடுத்து இடிந்தகரை... கூத்தங்குழி... பெருமணல்... வைராவிக் கிணறு... கூடுதாழை... செட்டிக்குளம் என்று பரவியது. மாதத்துக்கு ஓர் ஊர் என்று இருந்ததை, தொடர் உண்ணாவிரதமாக மாற்றினர். இடிந்தகரையில் பந்தல் போட்டு 127 பேர் உட்கார்ந்தனர். அணு உலையை எதிர்க்கும் அமைப்புகளும் வைகோ உள்ளிட்ட ஒருசில அரசியல் தலைவர்கள் மட்டுமே ஆதரித்த நேரத்தில்... இதற்கான எண்ணெய் வார்த்தவர் முதல்வர் ஜெயலலிதா.
உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் தூத்துக்குடியில் பேசிய அவர், 'உங்களில் ஒருத்தியாக நான் அங்கேயே வந்து போராடத் தயார்’ என்ற அவருடைய அறிக்கைதான், கூடங்குளம் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து போராட்ட ஆர்வத்தைத் தூண்டியது. 'மக்களின் அச்சத்தைக் களைந்த பிறகுதான் அணு உலைப் பணிகளைத் தொடர வேண்டும்’ என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். போராட் டக்காரர்களை அழைத்துப் பேசினார். அதையே அமைச்சரவைத் தீர்மானமாகவும் ஆக்கினார். டெல்லிப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்​பட்டன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். 'அணுஉலை ஆபத்தானது. நான் உங்களோடு சேர்ந்து போராடுவேன்’ என்று அறிவித்த அவர், 'அணு உலையைத் திறக்க வேண்டும்’ என்று உத்தரவிடும் போதாவது கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களை நேரில் அழைத்து மனமாற்றம் செய்திருக்க வேண்டும். அல்லது அந்தப் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து இருக்க வேண்டும்.
ஓர் ஆண்டு காலமாக கூடங்குளத்தைச் சுற்றி இருக்கும் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதம் இருப்பது, ஓர் அரசாங்கம் சமாதா னப்படுத்தும் பிரச்னையாகத் தெரியவில்லையா? முதல்வர் செல்லவில்லை... இன்று முதல்வருக்கு அடுத்த நிலை முக்கியஸ்தர்களாகச் சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் அகியோராவது சென்றார்களா? தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருக்கும் தேபேந்திரநாத் சாரங்கிக்கு கூடங்குளம் எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியுமா? சட்டம் ஒழுங்கையும் உளவுத் துறையையும் ஒருசேரக் கவனிக்கும் டி.ஜி.பி. ராமானுஜம் ஒரு முறையாவது அந்தப் பகுதிக்குப் போய் வந்திருப்பாரா? அந்த மக்களைச் சந்தித்து இருப்பாரா? அவருடைய போலீஸ் வாழ்க்கை ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில்தான் ஆரம்பித்தது. அந்தப் பாசமாவது இருந்திருக்க வேண்டாமா? காதி கிராமத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒரே ஒரு முறை உண்ணாவிரதப் பந்தலுக்குச் சென்றார். உதயகுமாரனும் புஷ்பராயனும் கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாதது மட்டுமல்ல... அந்தக் கேள்வியைக்கூட உள்வாங்கிக்கொள்ள செந்தூர்பாண்டியனால் முடியவில்லை. தமிழக அரசாங்கம் அமைத்த குழுவினராவது அந்த உண் ணாவிரதப் பந்தலுக்குப் போனார்களா? அணு உலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

இப்படி எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் ஜெயலலிதா, விவகாரத்தை அடக்குவதற்குத் தேர்ந் தெடுத்த நபர் ராஜேஸ் தாஸ். தென் மண்டல ஐ.ஜி. கேரளாவுக்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்ற ஆர்ப்பாட்டங்களை நடத்திய தேனி, பெரியகுளம் மக்களைப் பார்த்து, கோப வார்த்தைகளைச் சொல்லிச் சீண்டிவிட்டு, அடிதடிக் கலவரமாக அந்தப் போராட்டத்தை மாற்றியவர். ஒரு 
ஜான் பாண்டியனுக்கு பாதுகாப்பு கொடுத்து, அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கத் தெரியாமல்... தடுத்து... துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேர் கொலையான சம்பவமும் இவரது காலத்தில்தான். இப்போது, அவருக்குக் கூடங்குளம் அசைன்மென்ட். 'ஒழுங்கா இருங்க... இல்லைன்னா உதயகுமாரைத் தூக்கிடுவேன்’ என்று, எந்தப் போலீஸ் அதிகாரியாவது, கொந்தளித்து இருக்கும் மக்கள் முன்னால் சொல்வாரா? ஐ.ஜி. ஓர் இடத்தில் இருந்தாலே, கீழே உள்ள போலீஸ்காரர்கள் துணிச்சலாக அடிக்க ஆரம்பிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே. ஊருக்குள் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை சமாதானப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல்... அவர்களைக் கடலுக்குள் விரட்டிவிட்டு... அவர்களுக்கு ஆதரவாக சென்னை தொடங்கி எல்லா இடங்களிலும் போராட்டத்தைப் பரவவிட்டு... அதன்பிறகு, 'மீனவர்கள் மாய வலைகளுக்குள் சிக்க வேண்டாம்’ என்று அறிக்கை விடுவதுதான் ஒரு முதலமைச்சரின் விரைந்து முடிவெடுக்கும் திறனா?

இது ஏதோ ஜெயலலிதாவின் சொந்தப் பிரச்னை என்பது மாதிரி, மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தன் வாய், கண், காது மூன்றையும் மூடிக்கொண்டு விட்டது. உண்ணாவிரதம் இருப்பதும் போராட்டம் நடத்துவதும் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அந்த மக்கள் கிளப்பும் சந்தேகங்கள் அனைத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மத்திய அரசாங்கம்தான். அவர்கள் அமைத்த விசாரணைக் குழுவினரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வரவில்லை. அமைச்சர் நாராயணசாமி மட்டும் தெரியாத்தனமாக ஒரு முறை வந்தார். அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. 'அணு உலை பாதுகாப்பானது என்றால், உங்கள் மாநிலத்தில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்தான் கடல் இருக்கே’ என்று, மக்கள் கிண்டல் செய்ததைப் பார்த்து நொந்துபோய், 'மக்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனார். தமிழகத்தை டெல்லியில் பிரதிபலிக்கக்கூடிய ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் மக்களை மனமாற்றம் செய்ய வரவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டி.வி.க்களில்களில் மட்டுமே பேசினர். 'இரண்டு வாரத்தில் அணுஉலை செயல்படத் தொடங்கும்’ என்பதைச் சொன்னாலே அணுஉலை செயல்பட ஆரம்பித்து விடும் என்று மத்திய அரசு மௌனமாக இருந்தது. இப்போதுகூட அது ஜெயலலிதாவின் சுமை என்ற அலட்சியம்தான் டெல்லி காங்கிரஸ் தலைகளுக்கு இருக்கிறது.
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவதில் கை தேர்ந்த கருணாநிதி, இப்போது புதிய புத்தராகப் பரிமாணம் பெற்றுள்ளார். 'மத்திய, மாநில அரசுகள் போராட்டக் குழுவி​னரிடம் பேசி ஆபத்து ஏற்படாது என உத்தரவாதம் தர வேண்டும். காவல்துறையை வைத்துக்கொண்டு போராட்டத்தை ஒடுக்க ஜெயலலிதா கருதிவிடக் கூடாது’ என்று உபதேசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்தே சொல்லாமல் இருந்த கருணாநிதி, திடீரென கடந்த பிப்ரவரி மாதம், 'கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும். கூடங்குளத்தை செயல்பட விடாமல் ஏன் வைத்துள்ளீர்கள்? போராட்டக்காரர்களுடன் ஏன் முதல்வர் பேசுகிறார்? அவர்களை இவரே தூண்டி விடுகிறாரா?’ என்று பேசியதன் மூலமாகத்​தான் ஜெயலலிதா சினம்கொண்டு... உடனே நடவடிக்​கைகளில் இறங்கினார். யாரோ போட்ட உத்தரவுக்காக அன்று தூண்டிவிட்ட கருணாநிதி... இன்று அப்படியே மாற்றிப் பேசுவது எத்தகைய நாடகம். 'கூடங்குளம் பிரச்னை ஒன்று போதும், தென் மாவட்டத்தில் நாம் ஜெயிக்க!’ என்று இப்போதே சில  தி.மு.க. பிரமுகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அந்த அளவுக்கு அரசியல் கொக்குகள் மீன்களுக்காகக் கரையில் காத்திருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், மற்றவர்களைவிட ஜெய லலிதாவுக்குத்தான் பொறுப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள அணு உலைகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கச் சொன்னது. அதன்படி அமைக்கப்பட்ட குழு 11 விதிமுறைகளைக் கொடுத்தது. அதில் இதுவரை 6 மட்டுமே கூடங்குளத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தவும் அதை விளக்கி கூடங்குளம் மக்களிடம் மனமாற்றம் செய்யவும் ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும். அந்த மக்களிடம் அவர் பேச வேண்டும். அப்போதுதான் தென் மண்டலம் அமைதியாகும்.
ஜெ. நினைத்தால் அமைதிப்படுத்தலாம். ராஜேஸ் தாஸ்களால் நிச்சயம் முடியாது!
ப.திருமாவேலன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்,
ஏ.சிதம்பரம், ரா.ராம்குமார்

6 June 2012

கற்றது கைமண் அளவு- 06/06/2012

இருவர்:

Diamond Jubilee state procession


இங்கிலாந்து இராணி பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பிரிட்டன் முழுவதும் சென்ற வாரத்தின் நான்கு நாட்கள் விடுமுறை.மழையும் வெயிலும் கலந்து கட்டி அடித்தது. மழையையும் பொருட்படுத்தாது மக்கள் வெள்ளமென பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்து இராணிக்கு வாழ்த்துச் சொன்னார்கள். பிரிட்டன் முழுவதும் பார்ட்டி, கொண்டாட்டம் என்று திருவிழா போல அமர்க்களப்பட்டது. அம்மையாரின் வயது 86. இன்னமும் பிரிட்டனுக்காக வெளிநாட்டுப் பயணமும் கைகுலுக்கள் என்று சிம்மாசனத்தை அலங்கரிக்கிறார். அரசியல்வாதிகளும் அரச குடும்பத்தைக் கொண்டு சாதித்துக் கொண்டது தான் அதிகம். இந்தத் தள்ளாத வயதிலும் தனது நிலையில் இருந்து விலகி வாரிசுக்கு இடம் கொடுக்க மனமில்லையா இல்லை அரசியல் காரணங்களா என்று தெரியவில்லை. இளவரசர் சார்லஸ் தான் பாவம். அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இலவு காக்கிறார். இந்த இராணிக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை நமது 89 வயது இளைஞர் கலைஞர் அவர்கள். குடும்பதில் உள்ள குளறுபடியாலும், உட்கட்சி அரசியலாலும் இவருக்கும் ஓய்வில்லை. தன் வாழ்நாள் முழுவதும் முக்கால்வாசி சுயநலத்தோடும் கால்வாசி பொதுநலத்துடன் (இது கூட அளவு குறையுமே ஒழிய கூடுவதற்கான வாய்ப்பே இல்லை) இருந்து தன் வாழ்வின் கடைசி காலத்தைக் கூட நிம்மதியாக கழிக்க முடியாமல் வாரிசுகளின் சண்டை, மகளின் ஊழல் வழக்கு, என்று குடும்பத்து பிரச்சனைகளை முன்னிறுத்தி/பின்னிறுத்தியே அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. இவரை நம்பி காத்திருக்கும் ஸ்டாலினுக்கும் கதியில்லை. 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரு வெற்றி:

                                               
ஐ.பி.எல். கல்கத்தா அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட அம்மாநில முதல்வர் பெரிய விருந்து படாடோபம் என்று அசத்தி இருக்கிறார். ஒரு சாதாரண ஒரு லோக்கல் கிரிக்கெட்டிற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் ஒரு மாநில முதல்வர். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவராக தன்னை முன்னிறுத்தும் போது இன்று சிறுவர்களாக ( அதாவது ஓட்டு போடும் வயதினை அடையாத)உள்ளவர்கள் வளரும் போது ஒரு சிறிய மாற்றத்தினை அவர்கள் மனதில் விதைக்க மேலும் தான் நடப்பு விசயங்களில் கவனத்தோடு இருக்கிறேன் என்று சொல்ல அல்லது மக்களின் கவனத்தை திருப்ப என்று எவ்வளவோ இருக்கும் என்று நினைக்கிறேன்.

                                               
ஆனந்த் மேலும் ஒரு உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார். மிகவும் மகிழ்வாக இருக்கிறது. எனக்கெல்லாம் செஸ் பற்றி ஏதாவது கொஞ்சம் தெரியும் எனில் அதற்கு முழுக் காரணமும் அவர் மட்டும் தான். இது போன்ற வெற்றிகள் பலரின் மனதில் புதிய மாறுதலைக் கொண்டுவரும். தமிழக அரசும் சதுரங்கம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அறிவித்ததுள்ளது. இந்தத் திட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படும் போது திறமையான நல்ல பல சதுரங்க வீரர்களை அடையாளம் காண இயலும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இருவிழா:

கமல் கலந்து கொண்ட இரு விழாக்களில் ஒன்றில் அவரின் பேச்சும் மற்றதில் வைரமுத்து அவர்களின் பேச்சும் ஹைலைட். கமல் கலந்து கொண்ட இளையராஜாவின் புத்தக வெளியீட்டு விழாவில் 'நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு' என்றதும்; மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் அறிமுகமாகும், 'பொன்மாலைப் பொழுது' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் 'எம்.ஜி.ஆர், சிவாஜி இரண்டு பேரும் சிறு வயது கமல்ஹாசனை தூக்கி சுமந்திருக்கிறார்கள். அவர்களை சுமக்க வைத்த பாவம் கமல்ஹாசனை சும்மா விடுமா? அதனால்தான் இப்போது அவர் கதாநாயகிகளைத் தூக்கிச் சுமக்கிறார். இன்னும் பல காலம் இதை அவர் செய்து கொண்டே இருக்கட்டும்' என கவிஞர் வைரமுத்து கூறியதும் தான் இந்த இரு விழாக்களின் சிறப்பு. மேலும் ஒரு சிறப்பு இந்தப் புகழாரங்களுக்கும் விழாக்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இரு துயரங்கள்:

2012 லண்டன் ஓலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாமில், அழுகிய பழத்தில் தயாரித்த ஜூஸ் மற்றும் அசுத்தமான சமையல் அறைகளில் சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக, முன்னாள் இந்திய நீச்சல் வீரர் கஜான் சிங் குற்றச்சாட்டி உள்ளார். என்னவொரு கொடுமையான சம்பவம். இந்த லட்சணத்தில் பதக்கம் எங்கேயிருந்து வாங்குறது. ஏதாவது அண்ணாச்சி கடையில் வெங்கலக் கிண்ணம் தான் வாங்கியார முடியும்.....

விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார். இந்தத் தகவலை அந்த விவசாயியின் மகள், டிவி டாக் ஷோ ஒன்றில் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர். அந்த மகளையும் உறவுக்கு அழைத்தார் என்று வேறு அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனதை மயக்கும் இசைஞானியின் பாடல். என்றும் இளமை.....

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கிலாந்து மகாராணியின் பாராளுமன்ற வைர விழா சிறப்பு உரை.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3 June 2012

இடப்பெயர்ச்சி


இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் என்பது அவ்வளவு எளிதாக முடியும் காரியமில்லை. பழகிய இடத்தினை மனிதர்களை விட்டுப் பிரிவது என்பது மிகவும் துயரம் என்றால் புதிய இடத்தில் நாம் சென்று நம்மைச் சூழலுக்கு ஏற்றார் போல பொருத்திக் கொள்வது என்பதுவும் ஒரு சிரமமான் செயல் தான். காலச்சுழற்சியில் இடமாற்றம் என்பது ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகிறது. பிறந்து வளர்ந்த மண்ணை, வீட்டை, நாட்டை, மனிதர்களை விட்டுப் பிரிவது துன்பம் மட்டுமல்ல அது பெரும் வலி. உணர்ந்தால மட்டும் தான் அந்த வலியின் கொடூரம் உறைக்கும். மதுரையை விட்டு கோவை வந்தபோதே எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. பத்து வருடங்களுக்கும் மேல் வாழ்ந்த கோவையை விட்டு தென்கொரியா சென்ற போதும் மிகுந்த துயரமாகத்தான் உணர்ந்தேன். பின்னர் மாற்றம் என்பது இயல்பான ஒரு நிகழ்வாய் எனக்குப் பழகிப் போனது. வாடகைக்கு இருக்கும் வீடுகளின் மேல் பற்று எல்லாம் இருக்காது. அந்த வீட்டோடு உணர்வுப் பூர்வமாக ஒன்றவே மாட்டேன். அது ஒரு புகலிடம் போன்று பற்றற்று வெகு தூரம் செல்லும் பறவை இளைப்பாறும் ஒரு மரத்தின் கிளை போலத்தான் எனக்கும் வீடுகளுக்குமான தொடர்பு கடந்த ஐந்து ஆறு வருடங்களில் இருந்து வந்துள்ளது. எதார்த்தத்தின் நிதர்சனம் எனக்குத் தெரியும் என்பதால் வீடுகளைச் சுமந்து செல்வதில்லை, அவற்றின் சுகமான நினைவுகள் மட்டும் என் நினைவுப் பெட்டிக்குள் சேமிக்கப் பட்டு விடும். பிரிட்டன் வந்தபோது என் மனைவியும் மகளும் என்னோடு வரவில்லை. ஒரு வருட தாமத்திற்குப் பின்னர் தான் என்னுடன் வந்திணைந்தனர். அந்த ஒரு வருடத்தில் என் முகவரி ஆறு இடங்களுக்கு மாறி இருந்தது. தனியாக, நண்பர்களுடன், ஒருவரின் வீட்டில் ஒர் அறையில் என்று என் கூடுகள் மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. எனக்கு மட்டும் சலிப்பாக இருந்ததே இல்லை இன்றுவரையிலும். 

திருமணம் ஆன நாளிலிருந்து என் மனைவி என்னோடு தேசாந்திரியாய் ஒவ்வொரு தேசமாகச் சுற்றும் வரத்தினைப் பெற்றார். அவருக்கு எப்போதும் இடப்பெயர்ச்சி என்பது மிகவும் எளிதான ஒரு செயலாகவே இருந்து வந்துள்ளது நேற்று வரை. இன்றிலிருந்து லஃபரா விட்டு எடின்பரா வர வேண்டும். இம்முறை இடமாற்றத்தை அவரால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. லஃபரா அவருக்கு கோவைக்கு அடுத்த தாய்வீடு போல ஆகிவிட்டது தான் காரணம். யாருடனும் அவ்வளவு எளிதில் பழகக் கூடிய சுபாவமுள்ளவர் இல்லை என் மனைவி. நண்பர்களை தெரிவு செய்ய சில காலம் பிடிக்கும் அவருக்கு. என் மகளின் சுபாவம் அப்படியே நேரெதிர். அவளுக்கு நண்பர்கள் ஏராளம். எனவே என் மனைவிக்கு, மகளின் நண்பர்களுடன் பழகியே ஆகவேண்டிய கட்டாயம் வேறு. எனவே குடும்ப நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. அடிக்கடி நிகழும் சந்திப்புகளும் அவரை சமூக அளவிலும் மாற்றி இருப்பதை என்னால் கடந்த ஒரு வாரத்தில் காண முடிந்தது. இடைவிடாத அழைப்புகள், நண்பர்களின் வருகை, நாங்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது என்று நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருந்தார். லஃபரோ அவரை சமூக அளவிலும், தன்னளவிலும் மிகவும் மாற்றிவிட்டிருக்கிறது என்பதனை என்னால் உணர முடிந்தது. 

எப்போதும் இடமாற்றத்தில் என் பங்கு தான் அதிகம் இருக்கும். எல்லாம் ஒருங்கிணைத்து வேறு இடம் செல்வது என்பதுவும் கூட ஒரு கலை தான். சரியாக திட்டமிட வில்லை எனில் கடைசி நிமிட மன நெருக்கடிக்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இந்த முறை என் பங்கு என்பது மிகவும் சொற்பம் தான். எடின்பராவில் வீடு பார்த்தது மட்டும் தான் என் வேலையாக இருந்தது. அதுவும் என் மனைவி பெரும்பாலும் இணையத்தில் தேடிய வீடுகளின் முகவரி தேடி நானும் என் நண்பரும் சென்று வீட்டினைப் பார்த்து புகைப் படம் எடுத்து அனுப்புவது தான் என் வேலை. என்மனைவிக்கு லஃபரோவில் இருப்பது போன்ற வீடு பார்த்து விட வேண்டும் என்பது தான் முதல் குறிக்கோளாக இருந்தது. லஃபரோவில் நாங்கள் இருப்பது ஒரு தனி வீடு முன்னே தோட்டம், வீட்டின் பின்னர் ஒரு அழகான தோட்டம் ஒன்றும் இருக்கும். வீட்டின் பின்புறம் தக்காளி, கேரட், பீன்ஸ் என்று ஒரு சிறிய காய்கறித் தோட்டம் மற்றும் ரோஜாவில் பெரும்பான்மையான சிகப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் என்று எல்லாச் செடிகளும் வளர்த்துப் பராமரித்து வேறு வந்தார். எனவே கிட்டத்தட்ட இது போன்ற ஒரு வீடு பார்ப்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதனை சில வீடுகளின் படங்களைப் பார்த்தே ஒரு முடிவுக்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். பின்னர் கொஞ்சம் விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்டு வீட்டினைப் பார்ப்பார். நாங்கள் இப்போது போகும் வீடு நான் கூட சென்று பார்க்கவில்லை. என் நண்பர் எடுத்த புகைப் படங்களிலும் அவர் மிகவும் கெஞ்சி என் மனைவியிடம் ' இங்க பாருங்க சகோதரி இதுக்கு மேல இங்க வீடு இல்ல. எல்லா வீட்டையும் பார்த்தாச்சு. எல்லா வீட்டு ஏஜென்டுகளும் எனக்கு நண்பராகிட்டாங்க, பாவம் இந்தப் பய ரொம்ப கஷ்டப்படுறான்னு நினைப்பாங்களோ என்னவோ, ஏதாவது புது வீடு வந்தா முதல்ல எனக்குச் சொல்லிட்டுத்தான் அப்புறமா வெளம்பரமே செய்யுறாங்க' என்கிற ரீதியில் அவர் சொல்லி என் மனைவியை எடின் பரா வரச் சொல்லி பார்த்து அவருக்குப் பிடித்துப் போன ஒரு வீடு. வீடு எடுத்து ஒரு மாசம் முடிந்து விட்டது. நான் ஒரு ஆராய்ச்சி எலி போல தங்கியிருந்து எனக்குப் பிடிச்சிருக்கு என்றவுடன் இப்போது இந்த இடமாற்றம் நிகழ்கிறது. வீடு மாற்றல் கூட முழுவதும் என் மனைவியே செய்ததுவும் இந்த முறைதான். அவரின் தனித்தன்மை எந்த இடையூறும் இன்றி வெளிப்பட்டதை என்னால் கண்கூடக் காண முடிந்தது. பழைய வீட்டின் அனைத்துக் கணக்குகளையும் முடித்து எல்லாப் பொருட்களையும் இடமாற்றம் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வது வரை அவரே எல்லாம் செய்தார். என் உதவி அவர் கேட்ட பணத்தினைக் கொடுத்தது மட்டும் தான். இன்றுமுதல் புதிய வீடு, புதிய மனிதர்கள், குறிப்பாக என் மகளுக்கு புதிய பள்ளி என்று எல்லாம் புதிதாக இருக்கும். என் மகள் தான் என்னிடம் 'ஏம்ப்பா எல்லாத்தையும் அம்மா அனுப்புறாங்க' என்று தொடர்ந்து வேறுவேறு வார்த்தைகளில் என்னிடம் வேறு பதில் எதிர்பாத்தோ என்னவோ கேட்டுக் கொண்டேயிருந்தாள். பிடுங்கி நடப்படும் நாற்று தான் வளமாக உறுதியாக வளரும் என்றாலும் என்மகளின் ஊர் என்று எதனைச் சொல்வாள், இதுவரை சில மாதங்கள் மட்டுமே இருந்த என் கிராமத்தையா, இல்லை அவள் வளரவளர நாங்கள் மாறிக் கொண்டே இருக்கும் ஊர்களையா. சிறுவயது நினைவுகளும் அனுபவங்களும் இன்னும் சில வருடங்கள் கழித்து அவளின் பால்ய நினைவுகள் எந்த ஊரை அவளுக்கு நினைவூட்டும் என்கிற கவலைகள் என் மனதினை செல்லரிப்பதைப் போன்று அரித்துக் கொண்டே இருக்கிறது. இவளுக்காகவேனும் ஓரிடத்தில் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது......


2 June 2012

தமிழ் உணர்வாளர்களுக்கு நம்பிக்கை ஒளி

சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள்..போர்க்குற்றம் என்றதும் தமிழர்களின் நினைவுக்கு  முதலில் வருவது மகிந்த ராஜபக்சேதான். அவர் எப்போது தண்டிக்கப்படுவார் என்றுதான் தமிழர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகை​யில் ஒரு தீர்ப்பு வந்துள்ளது. ஆம், உலகப் படுகொலைகள் வரலாற்றில் முதல்முறை​யாக, ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் பெற்றுள்ளார். அவரது பெயர் சார்லஸ் டெய்லர்! 
வைரக்கல்லின் தேசம் என்றுதான் ஆப்​பிரிக்க நாடான சியாரா லியோனைச் சொல்​வார்கள். ஆனால், இந்த நாடு 1991 முதல் 2002-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலகட்டங்களில், ரத்தம் தெறிக்கும் கதறல் பூமியாக இருந்தது. இந்த உள்நாட்டுப் போரில் ஒரு பாவமும் அறியாத பொதுமக்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஆயுதக்குழுவுக்கு ஆதர​வாக இருந்தவர் சார்லஸ் டெய்லர் எனப்படும் சார்லஸ் மெக்ஆர்தூர் கங்காய் டெய்லர். இவர், அண்டை நாடான லைபீரியாவைச் 

சேர்ந்​தவர். இவரது ஆதரவு பெற்ற ஆயுதக் குழு கொலை, கற்பழிப்பு எனப் பல கொடூரங்​களுக்கு மக்களை உள்ளாக்கியது. 50 ஆயிரம் உயிர்க் கொலைகள், பல்லாயிரக்​கணக்கான பெண்கள் வன்புணர்ச்சி, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவைப் பிடுங்கி எறிந்த கொடூரம் போன்றவை லியோனில் அரங்கேறின. சின்னஞ்சிறு குழந்தைகளின் கைகளை மணிக்கட்டு வரையில் கதறக் கதற வெட்டிப் போட்டது, வெறி பிடித்த புரட்சிக் குழு. ''நாளைக்கே உங்களுக்கு ஓட்டு உரிமை வந்தாலும் எங்கள் எதிரிக்கு நீங்கள் ஓட்டுப் போடக் கூடாது. அதற்குத்தான் இந்தத் தண்டனை!'' என்று அந்தக் குழந்தைகளை நோக்கி கொக்கரிப்பு வேறு (இப்படி கைகள் வெட்டப்பட்டஒரு பெண்ணின்  நிஜக்கதை 'என் பெயர் மரியாட்டூ' என்ற தலைப்பில் விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ளது!)இந்த ஆயுதக்குழுவின் ஆதரவோடு, லைபீரிய எல்லைப் பகுதியில் போர் நடத்தி, ராணுவக் கட்டமைப்போடும் பலத்தோடும் லைபீரிய அதிபரானார் சார்லஸ். இதன் பின் சார்லஸ் டெய்லருக்கு எதிராக வேறு ஓர் ஆயுதக் குழு உருவெடுத்தது. அதனால், 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ல் டெய்லரின் அதிபர் பதவி பறிபோனது. இதன்பின், நைஜீரியாவில் நாடு கடந்து வாழ்ந்து வந்தார் சார்லஸ் டெய்லர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, நைஜீரிய எல்லையில் கோடிக்கணக்கான பணத்துடன் 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டது. ஐ.நா. மன்ற உதவியுடன் சியாரா லியோனில் உள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே, டெய்லரைக் கொல்வதற்கு பல முயற்சிகள் நடக்கவே, அவர் மீதான வழக்கு விசாரணை நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகருக்கு மாற்றப்பட்டது. அதுதான், சர்வதேச நீதிமன்​றங்களின் தலைமை இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
2007-ம் ஆண்டு ஜூன் மாதம் டெய்லர் மீதான விசாரணை தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, தன் மீது சுமத்தப்பட்ட படுகொலைகள், அடிமைப்படுத்துதல், பாலியல் போன்ற எவ்விதப் புகார்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், 'சார்லஸ் டெய்லர் போர்க் குற்றவாளிதான்’ என்பதற்கான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. அதை அடுத்து, 2012-ம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று 'சார்லஸ் டெய்லர் ஓர் போர்க் குற்றவாளியே’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு கடந்த 30-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ரிச்சர்ட் லூஸிக், 'சார்லஸ் டெய்லரின் போர்க் குற்றங்கள் மனித இன வரலாற்றில் மிக மிகக் கொடூரமானது. சியார லியோனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பல கொடூரங்களைச் செய்த ஆயுதக் குழுவினருக்கு அனைத்து வகை​யிலும் உதவிகளைச் செய்துள்ளார். ஒரு நாட்டை ஆளக்கூடியவர், குற்றங்களைத் தடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மாறாக, குற்றங்களைச் செய்யக்கூடியவராக இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நீதி தாமதிக்கலாம்... ஆனால், தோற்காது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளது, சார்லஸ் டெய்லருக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தண்டனை. இவருக்கே 50 ஆண்டுகள் தண்டனை என்றால், சியாரா லியோன் அரக்கத்தனத்தை தூக்கிச் சாப்பிட்ட ஈழத்துக் கொடுமைகளுக்கு... எரியும் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த பாவத்துக்கு என்ன தண்டனை ராஜபக்சேவுக்கு?!

மகா.தமிழ்ப் பிரபாகரன்

நன்றி: விகடன்

1 June 2012

கோவை நினைவுகள் -10

ஒரு சிலருக்கு பல சமயங்களில் தொடர்ந்த வாசிப்புகள் கொஞ்சம் சலிப்புத் தட்டி நமக்குள் இருக்கும் படைப்பு அரக்கனை தட்டி எழுப்பி விடும். வேறு சிலருக்கு தங்களின் தொடர்புகள் அல்லது தனது கவிதையோ கதையோ பிரபல இதழ்களில் வெளியாகமல் திருப்பி அனுப்பப் படும் போதும் அந்த அரக்கன் விழித்துக் கொள்வான். ஆனால் எனக்கு கவிதை (அ) கதை அல்ல ஒரு வாசகர் கடிதம் கூட அனுப்பிய அனுபவம் இல்லை. ஆனாலும் வாசிப்பு அடுத்த தளத்துக்குச் செல்ல தடுமாறிக் கொண்டிருந்த போது தான் அந்த விபரீத எண்ணம் எனக்குள் வந்தது. உடனே முத்துக்குமார் அண்ணாவிடம் சொன்னேன் ' நாம் ஏன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கக் கூடாது' என்று. அவரும் எனக்கு இல்லை என்று சொல்லிப் பழகாததால் உடனே சரி என்றார். பின்னர் பத்திரிக்கை ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் எல்லாம் பற்றி ஆலோசனை செய்த பின்னர் ஒரு வழியாக ஆரம்பிப்பது என்று முடிவு செய்து அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்க ஆரம்பித்தோம். என்னை ஒரு வாசன் போல, தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் போல, குமுதம் ஆசிரியர் போல‌ கற்பனை எல்லாம் செய்து பார்த்தேன். என்னையும் முத்துக்குமார் அண்ணாவையும் குமுதம் ஆசிரியர் மற்றும் எடிட்டர் போல எல்லாம் என் கற்பனை எங்கெங்கோ சென்றது.ஆனால் எதார்த்தம் என்பது கற்பனைக்கு எட்டாத உயரம் என்பதனை வேலைகளை ஆரம்பித்த சில தினங்களில் புரிந்து கொள்ளத் தொடங்கினோம். எங்களின் வேலை நேரம் போக மீதமிருந்த நேரம் முழுவதும் எங்களின் இதழ் பற்றிய சிந்தனையே எங்களை ஆட்கொண்டது. தலைப்பில் ஆரம்பித்தது எங்களின் தேடல். ஏதேதோ தலைப்புகள் என்று தேடி இறுதியில் தமிழோசை என்று முடிவு செய்தோம். இந்தத் தலைப்பினைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த பெரிய மனிதர்களிடம் கருத்துக் கேட்டோம். ஒவ்வொருவரும் தங்களின் எண்ணத்தினைக் கூறினார்கள். அவர்களின் கருத்துக்கள் எங்களுக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் பெரும்பாலனவர்கள் தங்களுக்குப் பிடித்திருப்பதாகவே கூறினார்கள். எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவர்களின் கருத்துக்கள். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நாளிதழுக்கு தமிழ் ஓசை என்று பெயர் சூட்டியதாக வெளியான செய்தி எங்களை கவலையின் உச்சத்திற்கு இட்டுச்சென்றது. இருந்தாலும் எங்களுடைய முடிவினில் மிகவும் தெளிவாக இருந்தோம். அடுத்த கவலை எங்களின் இதழ் எவ்வாறானது, வார இதழா, வாரம் இருமுறை, 15 நாளுக்கு ஒருமுறை, மாதஇதழ், எந்தக் கால இடைவெளியில் வெளியாக வேண்டும். ஒரே குழப்பமாக இருந்தது. சரி, எவ்வளவு பணம் செலவாகுமோ அதனைப் பொறுத்து முடிவு செய்யலாம் என்று அதற்கான விசாரனைகளில் இறங்கினோம். முதலில் வார இதழில் ஆரம்பித்த எங்களின் கனவு 1000 பிரதிகள் அச்சடிக்க ஆகும் செலவினைக் கேட்க கேட்க மெல்லச் சுருங்கி வாரஇதழ் காலாண்டு இதழில் வந்து நின்றது. பிறகு எங்கள் இதழ் அச்சாகும் அச்சகம் மற்றும் அதனை தட்டச்சு செய்ய என்று ஆட்கள் தேடியலைந்து ஒரு வழியாய் எங்களின் நண்பர்களே இவற்றினை செய்து தர எங்கள் இதழின் கருத்தின் வடிவமைப்பில் தொடங்கிய கலந்துரையாடல் பெரிய கலகத்தில் வந்து நின்றது.என்னென்ன தகவல்கள் இடம்பெற வேண்டும் எவ்வளவு இடம்பெற வேண்டும் என்பதில் தொடங்கி, இதழின் வடிவமைப்பு மற்றும் எழுத்துரு எப்படி இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்குள் பெரும் பூகம்பமே மூண்டது. பின்னர் ஒருவழியாக ஒவ்வொன்றாய் களைந்து இதழ் ஒரு வடிவிற்கு வந்து நின்றது. நான் யாரைப் பார்த்தாலும் என் இதழ் பற்றியும் அதற்கான சந்தா விபரங்கள் பற்றியும் மட்டுமே பேசும் ஒரு அறுவை கிராக்கி ஆகிப் போகியிருந்தேன். என்னைப் பார்த்தாலே என் உறவினர்களும் நண்பர்களும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். சிலர் என்னிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி 'தம்பி கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு, நாளைக்கு வாறியா' என்கிற மாதிரிப் பதில்களோடு என்னை எதிர் கொள்ள ஆரம்பித்தனர். ஒருவழியாக ஒரு மிகப் பெரியப் போராட்டத்திற்குப் பின்னர் யாராவது ஒருவரின் நேர்காணல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அண்ணா ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் தான் கோவை ஞானி அய்யா அவர்கள். மற்றவர்களின் அணுகு முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையோடு சுற்றிலும் புத்தகங்கள் நம்பமாட்டீர்கள் கழிவறை முழுதும் புத்தகங்களின் பொதிக்குள் அவர் இருந்தார். அவரைப் பார்க்கும் வரை அவருக்கு பார்வை இல்லை என்கிற விபரம் தெரியாது. இந்த மனிதருக்கு பார்வை இல்லை என்றால் யாரும் நம்ப முடியாது. நானும் அவரைப் பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன். மெய்மறந்து அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் சென்ற விபரம் சொல்லவும் 'ஓ பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறீங்களா, நல்லா ஆரம்பிங்க..' நாங்கள் கேட்ட முதல் நல்ல வார்த்தை அது தான். பின்னர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல பத்திரிக்கையின் நல்லது கெட்டது எல்லாம் சொல்லி நேர்காணலுக்கும் சம்மதம் சொன்னார். எல்லாம் முடிந்து எங்களின் இதழ் முதலில் அச்சேறியது. முதலில் அச்சில் இருந்து வந்த இதழின் மணமும் பட்டுப் போன்ற பளபளப்பும் மென்மையான அதன் ஸ்பரிசமும் இன்னமும் என் நினைவு அறைகளில் பசுமையாய் இருக்கிறது. ஞானி அய்யா தான் யாரெல்லாம் இதழ் விற்பவர்கள், அவர்களின் முகவரி, அனைத்தும் தந்து, அனைவரிடமும் அறிமுகம் செய்து என்று கிட்டத்தட்ட எங்களின் விளம்பர தூதர் போலவே இருந்து நெறிப்படுத்தினார். என் கவிதைகள் வேறு வெளியாகி இருந்தன. ஞானி அய்யா என் கவிதை பற்றி என்ன விமர்சனம் செய்வார். என்கிற எதிர் பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் காத்திருப்பேன். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட அதனைப் பற்றி சொன்னதே இல்லை. நான் பொறுமை இழந்து ஒரு நாள் கேட்டே விட்டேன், ' என் கவிதை எல்லாம் எப்படி இருக்கு' என்று. அவர் சொன்ன பதில் ' ஒரு ஆயிரம் இது மாதிரி எழுதுனா, கண்டிப்பா கவிதை வந்துரும்' . அதற்குப் பின் கவிதை என்கிற ஒன்றை நான் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. எங்களின் இதழுக்கு பரவலான வரவேற்பு இருந்தது. எங்களுக்கு இதழ் வெளியிட தெரிந்த அளவுக்கு பணம் செய்யத்தெரியவில்லை. எங்கள் இதழ் மூன்றாவது இதழோடு தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. 

29 May 2012

கற்றது கைமண் அளவு- 28/05/2012


அதிக வேலைப்பளு மற்றும் தொடர் பயணங்கள் காரணமாக கடந்த பத்து நாட்களாக எழுத இயலவில்லை. இன்றும் கூட கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்கிற முடிவோடு தான் கணிணியின் முன் அமர்ந்தேன். ஆனாலும் தொடர் அழைப்புகளும் அழுத்திய வேலைப் பளுவும் என்னைச் சோர்வுறச் செய்தன என்பது மட்டும் என்னவோ உண்மை...தேர்வுகள் எப்போதும் மிகுந்த மன அழுத்தம் கொடுக்க கூடிய ஒன்று. சென்றவார +2 தேர்வு முடிவுகள் ஒரு கலைவையான உணர்வினைத் தான் எனக்குக் கொடுத்தது. எங்களின் அருகிருக்கும் கிராமத்தில் படித்த மாணவர்களில் சிலர் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கியிருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் நகரங்களில் பயின்ற உறவினர்களின் குழந்தைகள் ஏனோ மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தது எனக்குச் சிலவற்றை உணர்த்தியது...ஒன்று நகரத்தின் பள்ளி மாணவர்களின் கவனம் கலைக்க எத்தனையோ வழிகள் மேலும் அவர்களுக்கு ஒரு மிதப்பு இருக்கவே செய்கிறது. கிராமத்தில் இவற்றின் இடையூறுகள் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனாலும் குறைவு மேலும் ஒரு முனைப்பு அவர்களிடம் இருக்கவே செய்கிறது. சரியான வழிகாட்டலுடன் வரும் கிராமத்து மாணவர்கள் பலர் உயரங்கள் தொடவே செய்கின்றனர். நகரத்துப் பெற்றோர்களும் எப்படி எல்லாம் நல்ல கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் வாங்கி அடுத்து கட்டத்துக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று விடும் வல்லமை நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பரின் மகள் 10 வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று இம்முறை தேர்ச்சி பெற்றதே பெரிய காரியம் என்கிற அளவில் மதிப்பெண் வாங்கியது எனக்கு பேர‌திர்ச்சி தான். அவளின் மேல் வைக்கப்பட்ட மனச்சுமை அவளை சுத்தமாக முடக்கி விட்டது என்று தான் நான் சொல்வேன். எனக்கு அவளின் பாட அறிவின் மேல் அளவுகடந்த நம்பிக்கை உண்டு. நண்பர் பணத்தினைக் கொட்டி நல்ல கல்லூரியில் நல்ல ஒரு துறையை அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சென்றவாரம் நடந்த சில நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தன. குறிப்பாக என் வேலை நிமித்தம் சில இடங்களுக்கு இரண்டடுக்குப் பேருந்தில் செல்ல நேர்ந்தது. மேல்லடுக்கில் அமர்ந்து செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் மேலே சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பள்ளிச் சிறுமிகள் யாருடனோ கைபேசியில் கதைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் என்ன பேசுகிறார்க்ள் என்று கவனிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் பேச்சு நாகரீகமற்று ஒரே இறைச்சலாக இருந்தது. எனக்கு இங்கிருக்கும் பள்ளி மாணவர்களின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும் அவர்கள் அடுத்துச் செய்த காரியம் என்னை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இருவரும் முத்தமிடுவதும், தங்களின் அங்கங்களை.....என்று அநாகரீகத்தின் உச்சகட்ட எல்லைவரை சென்றது. இதற்கு மேல் இங்கிருந்தால் சரிப்படாது என்று நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு முன் நிறுத்ததில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அன்று முழுவதும் இந்தச் சூழ்நிலையில் எப்படி என் குழந்தையை வளர்ப்பது என்கிற எண்ணம் என்னை படுத்தி எடுத்துவிட்டது.........

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றவாரம் பிரிட்டன் கொழுந்துவிட்டு எரிந்தது என்றால் மிகை இல்லை. எங்கும் அதிகபட்ச வெப்பம் 24-26 பாகை செல்சியஸ் ஆக இருந்தது..இருக்கிறது. எடின்பரா கொஞ்சம் பரவாயில்லை...பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் (18 பாகை செல்சியஸ்) இரவு நேரங்களில் 10-12 ம் ஆக இருந்தது. சூரியனின் கதிர் வீச்சு இங்கு மிகவும் அதிகம் மற்றும் புற ஊதாக் கதிர்களின் (UV rays) அடர்த்தியும் அதிகம் என்பதால் நாம் உணரும் வெப்பத்தின் அளவு சராசரியை விடவும் அதிகமாக இருக்கும். வெள்ளக்கார மக்கள் துணி துறந்து அரை நிர்வாண பக்கிரிகளாய் உலாவருகின்றனர். ஊருக்கு பேசியபோது அவர்களும் இங்கும் தாங்க முடியாத வெக்கையா இருக்குப்பா என்று சொன்னார்கள்...அதிக வெப்பத்தால் வெளியில் சென்று விளையாட முடியாமல், துண்டை நனைத்து அதை விரித்து அதன் மேல் படுத்திருந்த சிறுவயது நினைவுகள் ஏனோ வந்து போனது....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிரியாவில் வன்முறை வரைமுறையற்று சென்று கொண்டிருக்கிறது...சிறுவர்கள் முதற்கொண்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் ஏனோ மனதினை அறுத்தது...வன்முறையின் மேல் மனிதர்களுக்கு இருக்கும் பற்று எப்போது அற்றுப் போகும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு பாக்கிஸ்தானிய தம்பதியினர் தங்கள் மகளைக் கொன்ற சம்பவம் சென்றவாரச் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது....இதனைப் பார்த்த இளைய மகள் போலீஸிடம் சொல்லியிருக்கிறார் அதுவும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து...இந்தப் பெண் ஒரு கடையில் திருடும் போது மாட்டிக் கொண்டு ஏதேதோ சொல்லி தப்புவதற்கு முயலும் போது தனது அக்காவை தனது பெற்றோர் தன் கண் முன்னால் கொன்றனர் என்று சொல்லி ஆரம்பித்து வைக்க போலீஸ் இதன் ஆதி அந்தபற்றி விசாரணை செய்யத் தொடங்கியிருக்கிறது...... அவர்களுக்கு கிடைத்த பதில்...இங்கேயே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் மேனாட்டு கலாச்சாரப் படி 15 வயதில் தனக்கான ஆண் நண்பரை வைத்துக் கொள்வது, இன்ன பிற சமாச்சாரங்களுடன் வளைய வந்தவரை பெற்றோர் கண்டித்து பாக்கிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்றிருக்கிறார்கள். பின்னர் ஏதோ பிரச்சனையில் மீண்டும் இங்கிலாந்து வந்து அந்தப் பெண்ணை கொன்று விட்டார்கள் என்று தங்கை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அப்பாட ஒரு வழியா ஐ.பி.எல் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு இதைப் பற்றியே பேசிக் கொள்(ல்)வார்கள். நான் இறுதிப் போட்டி கூட காண முடியவில்லை...பெரிய விருப்பமும் இல்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார இசைப் பேரரசனின் மயக்கும் மெலடி....எப்போது கேட்டாலும் இதனுள் இருக்கும் இளமைத் துள்ளல் என்னைக் கட்டிப் போடும்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தவார ஆவணப்படம்.....+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++